இந்தியாவில் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு மதிப்பான 370 ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கின்றன. அதாவது மோடி பிரதமரானதும் இந்தப்பிரச்சனை திட்டமிட்டு கிளப்பட்டுள்ளது.

தெளிவாகச் சொன்னால், ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா கும்பலின் திட்டம் எனும் போர்வையில் ஒரு தீப்பொறியைப் போல இந்தப் பிரச்சனை பற்ற வைக்கப்பட்டுள்ளது. இதுவே  இந்து  முஸ்லீம் பிரச்சனை போல மக்களிடையே பரப்படுகிறது.

ஆனால் கடலில் மிதக்கும் பனிப்பாறையில் வெளியில் தெரிவதை மட்டும் பார்ப்பது எப்படி ஆபத்தானதோ அதைவிட பலமடங்கு பேராபத்தானது காஷ்மீர் பிரச்சனையை 370 ஆவது பிரிவை மட்டும் வைத்துக் கொண்டு பார்ப்பது.

இப்போது பரவலாக பேசப்படுவது என்ன? காஷ்மீர் இந்தியாவின் பிற மாநிலங்களைப் போன்று ஒரு மாநிலம் அதற்கு மட்டும் ஏன் அரசியல் சாசனத்தில் சிறப்பு மதிப்பு அளிக்கப்பட வேண்டும்? இது மோடி, ஆர்.எஸ்.எஸ் வகையறா அம்பிகளின் தும்பிகளின் கேள்வி.

இந்தக் கேள்வி,370 ஆவது பிரிவு என்பது ஆட்சிக்கு வரும் கட்சி நினைத்தால் மாற்றிவிடக் கூடிய ஒன்றல்ல என்றும், 370 ஆவது பிரிவை மாற்றினால் இந்திய இறையாண்மைக்கே ஆபத்தாகும் என்றும் எதிர்கொள்ளப்படுகிறது.

இந்த இரண்டில் எது வீரியமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த 370 பிரச்சனை ஏன் திடீரென்று எழுப்பப்பட்டது? அதன் நோக்கம் என்ன? என்பதை அவை விளக்கப்போவதில்லை.

370 ஆவது பிரிவு என்றால் என்ன?அது ஏன் காஷ்மீருக்கு மட்டும் அளிக்கப்பட்டது? இதற்கான பதிலை அறிந்து கொள்வதற்கு காஷ்மீர் வரலாறு குறித்த புரிதல் வேண்டும். முகலயர்களின் வருகைக்கு முன்னர் இந்தியா எனும் நாடே கிடையாது.

kashmir_rel_2003

துண்டுதுண்டான ராஜ்ஜியங்கள் தான். சிந்து எனும் நதியின் கரையில் இருக்கிறது எனும் பொருளில் “இந்திய்யா” (சிந்து என்பது அவர்களின் உச்சரிப்பில் இந்து என்றானது) என்று அழைத்தார்கள். அது மருவி இந்தியா ஆனது. இதனால் தான் ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் இந்தியா என உச்சரிக்காமல் எப்போதும் பாரதம் என்றே உச்சரிக்கிறார்கள்.

இதற்கு “முன்னொரு காலத்தில் பரதன் எனும் மன்னன் இந்தியாவை சீறும் சிறப்புமாக ஆண்டான்” என்று கதையும் கட்டி விட்டிருக்கிறார்கள். வரலாற்றில் அந்த மன்னன் எந்த ஆண்டு காலத்தில் ஆண்டான்? அந்தக் காலத்தில் இந்தியா இருந்ததா? எனும் கேள்விக்கு மட்டும் யாரும் பதில் சொல்வதில்லை.

இப்படி முகலாயர்களால் தொடங்கி வைக்கப்பட்டு ஆங்கிலேயர்களால் முடித்து வைக்கப்பட்ட இந்தியா 1947 ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்தந்த ராஜ்ஜிய வாரிசுகளால் தனித்தனி நாடுகளாக அறிவிக்கப்பட்ட கதம்பமாக காட்சியளித்தது. இதைத்தான் இராணுவ வலிமை கொண்டு ஒடுக்கி இந்தியாவில் மாநிலங்களாக ஒருங்கிணைத்தார்கள்.

இங்கு இரண்டு இடங்களில் நெருடல் ஏற்படுகிறது.

1. ஹைதராபாத்,

2. காஷ்மீர்.

ஹைதராபாத்தில் மக்கள் பெரும்பான்மையினர் இந்துக்கள் மன்னன் முஸ்லீம். பாகிஸ்தானுடன் ஹைதராபாத்தை இணைப்பதற்கு மன்னன் விரும்ப, மக்கள் பெரும்பான்மையினர் இந்துக்கள் என்ற காரணத்தைக் கூறி, இராணுவ வலிமை மூலம் இந்தியாவுடன் ஹைதராபாத் இணைக்கப்படுகிறது.

ஆனால், இதே அளவுகோல் காஷ்மீரில் பின்பற்றப்படவில்லை. அங்கு மன்னன் இந்து மக்களில் பெரும்பான்மையினர் முஸ்லீம்கள். காஷ்மீர் மன்னனாக இருந்த ஹரி சிங் காஷ்மீரை தனி நாடாக நீடிக்க விரும்பினான்.

மக்களில் பெரும்பான்மையோர் முஸ்லீம்கள் என்பதால் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் விரும்பி இராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இதனால் மன்னன் ஹரி சிங்குக்கு உதவுவது என்ற பெயரில் இந்திய இராணுவம் களத்தில் இறங்கியது.

விளைவு முதல் இந்திய பாகிஸ்தான் போர். காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலம் என்று கூறப்பட்டாலும், காஷ்மீரின் 45 விழுக்காடு தான் இந்தியா வசம் இருக்கிறது.

மீதம் பாகிஸ்தானிடமும், கொஞ்சம் சீனாவுடனும் இருக்கிறது. ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்த காஷ்மீரிகள் மூன்று வெவ்வேறு நாடுகளில் பிரிந்திருக்கிறார்கள். இது தான் காஷ்மீரின் அண்மை வரலாறு.

தனிநாடாக  இருக்க விரும்பிய ஹரி சிங் வேறு வழியில்லாமல் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால், இந்தியாவில் கரைந்து போய்விடுவதை அவர் விரும்பவில்லை. அதனால் இராணுவம் வெளிவிவகாரம் உள்ளிட்ட சிலவற்றைத் தவிர பிற உரிமைகள் தனக்கு வேண்டும் என வற்புறுத்தினார்.

இதை ஏற்றுக் கொண்ட நேரு, இதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்த அம்பேத்காரை விடுத்து மன்னன் ஹரி சிங்கிடம் திவானாக இருந்த கோபல்சாமி ஐயங்கார் என்பவரை வைத்து 370 ஆவது பிரிவை உருவாக்கினார்.

srinagar-kashmirஇதன்படி சில தனிப்பட்ட சலுகைகள் காஷ்மீருக்கு உண்டு.

அவற்றில்,
1. பிற மாநிலத்தவர் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது

2. காஷ்மீர் சட்டசபை ஆறு ஆண்டுகளுக்கு இயங்கும்

3. இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு ஆகியவை தவிர பிற அம்சங்களில் இயற்றப்படும் சட்டங்கள் காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகே அமலாகும் போன்றவை முக்கியமனவை.

இவை எல்லாவறையும் விட மேலாக இந்தியாவுடன் இணைவதையும் நீடிப்பதையும் காஷ்மீர் மக்களே தீர்மானிப்பார்கள் என்பது முதன்மையானது. மாநில அரசுகள் எனும் அடிப்படையில் இது போன்ற உரிமைகள் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

ஆனாலும், ஐ.நா விடம் காஷ்மீர் மக்களிடம் வாக்ககெடுப்பு நடத்தி அவர்களின் விருப்பம் அறியப்படும் என்று உறுதியளித்த இந்தியா இன்றுவரை அந்த வாக்கெடுப்பை நடத்தவே இல்லை.

மட்டுமல்லாமல், அனைத்து  தகிடுதத்தங்களுடன் கூடிய  ஓட்டுப் பொறுக்கி  தேர்தலை நடத்தி அதையே வாக்கெடுப்பாக ஆதிக்கத் தனத்துடன் அறிவித்தது.

இதன் பின்னர் மன்னன் ஹரி சிங்கால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் அப்துல்லாவை இந்தியா நடத்திய விதம், காஷ்மீர் சட்டமன்றத்தை பொம்மையைப் போல் கலைத்துப் போட்டது,

ladakh-kashmir1இவைகளை பயன்படுத்தி பாகிஸ்தான் செய்த அரசியலை முறியடிக்க தனித்தனி குழுக்களை ஏற்படுத்தியது, காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட இராணுவ பலம் கொண்டு ஒடுக்கியது என்று காஷ்மீரின் இன்றைய வன்முறை வரலாற்றுக்கு இந்தியாவின் பங்களிப்பு ஏராளம்.

இந்த அனைத்து உண்மைகளையும் மறைத்து விட்டுத்தான் காஷ்மீருக்கு மட்டும் ஏன் தனிச் சிறப்பு என்று கேட்கிறார்கள் அம்பிகளும் தும்பிகளும். ஆனால் இந்த வரலாற்றை நினைவுபடுத்தவோ, இப்போது இதைக் கிளப்புவதன் பின்னணி என்ன? என்பதை அம்பலப்படுத்தவோ யாரும் தயாராக இல்லை என்பது தான் இப்போதைய முதன்மையான பிரச்சனை.

இலங்கை தமிழர்கள் மீதான இனவழிப்பை வெறுமனே ராஜபக்சேவின் தமிழர்கள் மீதான கொலைவெறி என்றும், ராஜீவைக் கொன்ற புலிகள் மீதான சோனியாவின் கோபம் என்றும் பொழிப்புரை செய்யும், இந்திய முதலாளிகளின் லாப வேட்டை அதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது,

அதற்காகத்தான் இந்தியா பாடுபடுகிறது என்பதை அம்பலப்டுத்த மறுக்கும் தமிழினவாதிகளைப் போல இந்த 370 ஆவது பிரிவை நீக்கும் விசயத்திலும் இந்திய முதலாளிகளின் லாப வேட்டைக்கு முக்கியப் பங்கிருப்பதை யாரும் முணுமுணுக்கக் கூட மறுக்கிறார்கள். |

காஷ்மீர் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. குறிப்பிட்ட காலமாக இங்கு முதலாளிகளின் லாபவேட்டைக்கு உகந்த சூழல் இல்லாமல் இருக்கிறது. மட்டுமல்லாமல் பிறர் காஷ்மீரில் நிலம் வாங்குவதும் முடியாமல் இருக்கிறது.

இலங்கை மீதான வேட்டைக்கு விடுதலைப் புலிகளும், அவர்களின் தேசியவாத அணுகுமுறையும் எப்படி தடையாக இருந்ததோ அதேபோல் காஷ்மீரின் சுற்றுலா முக்கியத்துவதை காசாக்குவதற்கு நிலம் வாங்க முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கும் 370 ஆவது பிரிவு தடையாக இருக்கிறது.

ஏற்கனவே இலங்கையில் தமிழர்களை அலட்சியமாய் கொன்றழித்து சோதனை செய்திருக்கும் இந்தியாவின் அடுத்த இலக்காக காஷ்மீர் மக்கள். இது தன்னை கோபுரத்தில் வைத்த கார்ப்பரேட்டுகளுக்கு மோடி வழங்கும் பாத காணிக்கை.

 18-narandra-modi7-300

நேற்றுவரை மோடிக்கு விசா கிடையாது என்று படம் காட்டிக் கொண்டிருந்த அமெரிக்கா இன்று மோடியை அழைத்திருக்கிறது. மோடி பிரதமராகி விட்டார் அதனால் அமெரிக்காவுக்கு வேறு வழியில்லாமல்போய்விட்டது என்று கூறப்படுவதை  ஏற்கலாமா?

எந்த நாட்டுத் தலைவரை அமெரிக்கா மதித்திருக்கிறது மோடி பிரதமாராகி விட்டார் அதனால் அழைத்திருக்கிறது என்று கூறப்படுவதை ஏற்பதற்கு? அல்லது அமெரிக்கா காரணமாகக் கூறிய 2002 குஜராத் படுகொலைகள் இல்லாமல் போய்விட்டனவா?

இந்தியாவை பிராந்திய வல்லரசாக அமெரிக்கா ஏற்பதற்கு ஒரே காரணம் அமெரிக்காவுக்கு போட்டியாக வளர்ந்து கொண்டிருக்கும் சீனாவை கட்டுப்படுத்த இந்தியா அடியாளாக செயல்படும் என்பதற்காகத்தான்.

அதற்குத் தோதான சில ஆரம்பகட்ட வேலைகளை காங்கிரஸ் ஏற்கனவே செய்திருக்கிறது. அருணாச்சல பிரதேசத்தில் சிவப்புக் கோடு போட்டார்கள்,50 மீட்டர் உள்ளே வந்து விட்டார்கள், தனி விசா கொடுக்கிறார்கள் என்று காங்கிரஸ் அரசும் ஊடகங்களும் ஏற்கனவே சீனாவை வில்லனாக காட்டிக் கொண்டிருந்தன.

இதன் அடுத்த கட்ட வேலைகளுக்கு காஷ்மீரின் சிறப்பு மதிப்பு தடையாக இருக்கிறது. எடுத்துக் காட்டாக அமெரிக்க இந்திய கடற்படைகள் கூட்டாக பயிற்சி மேற்கொண்டதைப் போன்று காஷ்மீரில் ஏதாவது செய்து சீனாவை ஆத்திரப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தால் அதை காஷ்மீர் சட்டமன்றம் ஏற்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

1992 ஐ நாம் மறந்து விட முடியுமா?பலநூறு ஆண்டு வரலாறு கொண்ட பாபரி பள்ளி திட்டமிட்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதை இந்து முஸ்லீம் பிரச்சனை என்றோ, பா.ஜ.க, சங்கப் பரிவாரங்களின் திட்டம் மட்டுமே என்றோ குறுக்கிப் புரிந்து கொள்ள முடியுமா?

அந்த இடிபாடுகளின் களேபரங்களுக்கு மத்தியில் தான் காட் ஒப்பந்தம் சத்தமின்றி, பாராளுமன்றத்துக்குத் தெரியாமல் கொல்லைப்புறமாக உள்ளே நுழைந்து இந்தியர்களின் கழுத்தை இறுக்கிக் கொண்டிருக்கிறது.

இதோ இப்போது மீண்டும் வரலாறு திரும்புகிறது. இந்த 370 சர்ச்சையின் மத்தியில் சத்தமில்லாமல் மறுகாலனியாக்கத்தை அதி தீவிரப்படுத்தும் ஒரு ஒப்பந்தம் சத்தமின்றி கையெழுத்தானால் புதிதாக கொள்ளையடிக்க களம் இறங்கியிருக்கும் எந்த பாராளுமன்ற உறுப்பினருக்காவது இது குறித்து கவலை இருக்குமா?

ஆனால் நாம் கவலைப்பட்டாக வேண்டும். அன்று ஆட்சி மாற்றத்தை சுதந்திரமாக காட்டிய நேரு பாலாறும் தேனாறும் ஓடும் என்றார். ஆனால் இன்றோ தண்ணீர் கூட கிடைக்காமல் தவித்துக் கிடக்கிறோம்.

இதற்கு என்ன காரணம் யார் காரணம் என்று சிந்திக்கப் போகிறோமா? அல்லது ஓட்டுப் பொறுக்கிகளின் கேவலமான சதித்தனங்களில் சிக்குண்டு சாக்கடையையே அரசியல் என்று பேசிக் கொண்டிருக்கப் போகிறோமா?

Share.
Leave A Reply