மத்திய கிழக்கில் லிபியாவின் மும்மர் கடாஃபி ஈராக்கின் சதாக் ஹுசேய்ன் என இரு பெரும் தலைவர்கள் இருந்தார்கள். இருவரும் மதசார்பற்ற ஆட்சியை நடாத்தினார்கள்.
கடாஃபி தனது நாட்டில் பலகலைக்கழகம் வரை இலவச கல்வியை வழங்கினார்.சதாம் கட்டாய இலவசக் கல்வியை வழங்கினார். கடாஃபி மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினார்.
சதாம் நாடெங்கும் மின் விநியோகத்தை இலகுவாக்கினார். பல் வேறு இனக் குழுமங்களைக் கொண்ட லிபியாவில் இன மோதல்கள் இன்றி கடாஃபி ஆட்சி செய்தார். சியா மற்றும் சுனி முசுலிம்களிடையே மோதல் இல்லாமல் சதாம் ஆட்சி செய்தார்.
ஈராக் பற்றிய முந்தைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்: ஈராக்
சதாமும் கடாஃபியும் அடக்குமுறை ஆட்சியாளர்களாகவே இருந்தார்கள். இதற்குக் காரணம் மேற்கு நாடுகளுக்கு ஆதரவானவர்கள் அவர்களது ஆட்சிகளைக் கவிழ்க்க தொடர்ந்து சதி செய்து கொண்டே இருந்தனர். சதாம் குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளை தனது ஆட்சியின் கீழ் கொண்டுவர முயன்றார்.
அதை அவர் படைவலு மூலம் சாதிக்க முற்பட்டார். கடாஃபி மற்ற நாடுகளுடன் இணைந்து ஒரு ஐக்கிய ஆபிரிக்க்க அரசை உருவாக்க முற்பட்டார். சதாம் மசகு எண்ணெய் விலையை அமெரிக்க டொலரில் நிர்ணயிப்பதை நிறுத்தி யூரோவில் நிர்ணயிக்க வேண்டும் என்றார்.
A file photo of the aircraft carrier USS George H. W. Bush transiting the Strait of Gibraltar
கடாஃபி ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலையை இத்தனை கிராம் தங்கம் என நிர்ணயிக்க வேண்டும் என்றார். அமெரிக்க டொலருக்கு எதிராக செயற்பட்ட இவர்கள் இருவரும் கொல்லப்பட்டுவிட்டனர்.
ஈராக்கில் அமெரிக்கா படை எடுத்தது. சதாம் ஹுசேய்ன் நீதி விசாரணை செய்து தூக்க்கில் இடப்பட்டார். லிபியாவில் நேட்டோப் படைகள் குண்டு மாரி பொழிந்தன. மும்மர் கடாஃபி தப்பி ஓடுகையில் நீதிக்குப் புறம்பான முறையில் கொல்லப்பட்டார்.
ஈராகில், சுனி, சியா, குர்திஷ் ஆகிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். மூன்றில் இரண்டு பங்கு சியா முசுலிம்களைக் கொண்ட ஈராக்கின் கிழக்குப் பிராந்தியத்தில் சுனி முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். சதாம் ஹுசேய்ன் சிறுபான்மையினரான சுனி முசுலிம் இனத்தைச் சேர்ந்தவர்.
ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாட்டுப் படைகள் அங்கிருந்து விலகும் போது ஈராக்கில் ஒரு “மக்களாட்சியை” உருவாக்கினர்.
ஈராக்கில் 2006-ம் ஆண்டில் இருந்து நௌரி அல் மலிக்கி தலைமை அமைச்சராக இருக்கின்றார். ஊழல் மிகுந்த இவரது ஆட்சியில் சுனி முசுலிம்கள் புறக்கணிக்கப்பட்டும் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றனர். இதனால் சுனி முசுலிம்களிடையே தீவிரவாதம் தலை தூக்கியது.
ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் அமைப்பு உருவானது. ஐ.எஸ்.ஐ.எஸ் அபூபக்கலர் அல் பக்தாடி தலைமையில் இயங்கும் ஒரு சுனி முசுலிம் அமைப்பாகும். Islamic State of Iraq and Syria என்பதன் சுருக்கமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகும்.
இது அல் கெய்தாவின் கிளை அமைப்பு, இணை அமைப்பு எனப் பல மேற்கத்தைய ஊடகங்கள் பரப்புரை செய்தாலும் இதற்கும் தமக்கும் எந்தத் தொடர்பு இல்லை என அல் கெய்தா மறுத்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள பிரதேசங்களை இணைத்து ஒரு இசுலாமிய அரசை உருவாக்க வேண்டும் எனப் போராடுகின்றது.
இது திடீரென ஈராக்கின் வட பிராந்தியத்தில் உள்ள பல நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறிவருவது முழு உலகத்தையுமே ஆச்சரியப் படுத்தியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் எத்தனை போராளிகள் இருக்கிறார்கள் என யாருக்கும் தெரியாது சில கணிப்பீடுகள் பத்தாயிரம் என்கின்றன. தம்மிலும் பார்க்க பத்து மடங்கு அதிக எண்ணிக்கையைக் கொண்ட ஈராக்கின் அரச படைகளை சின்னா பின்னப்படுத்தி வருகின்றன.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பெரும் நிலப்பரப்புகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தனி நாடு கோரிப் போராடும் குர்திஷ் இனத்தின் பெஸ்மேர்கா போராளி அமைப்பு எண்ணெய் வளமிக்க கேர்குக் நகரத்தை ஒரு துப்பாக்கிக் குண்டு கூட வெடிக்காமல் கைப்பற்றிக் கொண்டது. குர்திஷ் மக்களின் தலைவர் மஸ்ஸோட் பர்ஜானி குர்திஷ் மக்களுக்கு என்று ஒரு அரசு உருவாகிக் கொண்டிருக்கின்றது என்றார்.
ஈராக்கில் சுனி முசுலிம்களுக்கு என ஒரு அரசு, சியா முசுலிம்களுக்கு என ஒரு அரசு, குர்திஷ்களுக்கு என ஒரு அரசு என மூன்றாகப் பிளவு படும் ஆபத்து இப்போது அதிகரித்துள்ளது.
இதில் சுனி முசுலிம்களுக்கு ஆதரவாக சவுதி அரேபியாவும், சியா முசுலிம்களுக்கு ஆதரவாக ஈரானும், குர்திஷ் மக்களுக்கு துருக்கியும் ஆதரவாகச் செயற்படுகின்றன.
பலகாலமாக குர்திஷ் மக்களின் சுதந்திரப் போராட்டத்தை எதிர்த்து வந்த துருக்கி இப்போது அவர்களுடன் நல் உறவை வளர்த்து வருகின்றது. ஈராக்கில் குர்திஷ் மக்களுக்கு என ஒரு அரசு உருவானால் அது துருக்கியின் நட்பு நாடாக அமைவதுடன் துருக்கிக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவும் அமையும் என்ற நிலை இப்போது உருவாகியுள்ளது.
குர்திஷ் மக்களுக்கு துருக்கியின் ஆதரவிற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஈராக்கின் மோசுல் நகரில் உள்ள துருக்கியத் துணை தூதுவரகத்தில் பணி புரிந்த 80 பேரை பணயக் கைதிகளாகப் பிடித்தமைக்கும் தொடர்பு உண்டு.
ஈராக் துண்டுபடும் நிலை ஏற்பட்டால் அங்கு ஒரு உறுதியான குர்திஷ் அரசு அமைய வேண்டும் என்பது துருக்கியின் விருப்பமாக உள்ளது.
ஈராக்கில் வைத்து ஈரானுக்கு ஒரு பாடம் புகட்ட சவுதி அரேபியா முயல்கிறது. ஈராக்கின் தற்போதைய சியா முசுலிம்களின் ஆட்சியைப் பாதுகாக்க ஈரான் பலவழிகளில் முயல்கின்றது.
சியா முசுலிம்களின் தலைமையில் ஒரு உறுதியான ஆட்சி இருந்தால்தான் எரிபொருள் உறபத்தி சீராக நடக்கும் என அமெரிக்கா நினைக்கிறது. ஈராக்கில் பரம வைரிகளான அமெரிக்காவும் ஈரானும் இணைந்து செயற்பட வாய்ப்பு உள்ளது.
இதற்கான தனது விருப்பத்தை ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார். ஆனால் சிரியாவிலும் லெபனானிலும் ஈரானிய ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு ஆதிக்கம் செலுத்துவதுடன் ஈராக்கில் ஈரானின் குடியரசுக் காவற்படையினரில் ஆதிக்கம் செலுத்துவது அமெரிக்காவை சற்று உறுத்தவும் செய்கின்றது.
வெளி உதவியின்றி ஈராக்கின் சியா அரசு நிலைக்காது. ஈரானும் அமெரிக்காவும் ஒத்துழைத்தால் சவுதி அரேபிய அமெரிக்க உறவு மேலும் மோசமடையலாம். ஏற்கனவே சிரிய விவகாரத்தில் அமெரிக்காவின் அணுகு முறையில் சவுதி கடும் அதிருப்தியடைந்துள்ளது. இதனால் ஈராக்கில் மூன்று அரசுகள் உருவாகும் சாத்தியம் அதிகமாகின்றது.
ஈராக்கின் தற்போதைய பிரச்சனையில் ஒரு சதிக் கோட்பாடும் இருக்கின்றது. ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் போது ஒரு பத்தாயிரம் படைகளையாவது வைத்திருக்க வேண்டும் என அமெரிக்கா விரும்பியது.
ஆனால் ஈரானின் ஆட்சேபனையால் அது கைவிடப்பட்டது. அதன் விளைவாகத்தான் இப்போது ஈராக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது என்கின்றன அமெரிக்க சார்பு ஊடகங்கள். இது ஆப்கானிஸ்த்தானில் பெருமளவு அமெரிக்கப்படையினர் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை ஆப்கானிஸ்த்தானியர்களுக்கு உணர்த்தவா?
-வேல் தர்மா-
Threatening: Men pose with automatic rifles and a stationary machine gun, with the ISIS flag propped up behind them