எம்.பிக்கள் யாரும் என் காலிலோ அல்லது ஏனைய பா.ஜ.க. தலைவர்களின் காலிலோ விழக்கூடாது என்று பிரதமர் நரேந்திரமோடி கண்டிப்பான உத்தரவிட்டுள்ளார். இது இந்தியாவிலுள்ள ஏனைய தலைவர்களுக்கு ஒரு முன்னோடி அறிவிப்பாகும்.
காலில் விழுந்து வணங்கி காக்கா பிடிக்கும் வேலையில் ஈடுபடக்கூடாது என்பதே அவரின் கருத்தாகும். மூத்த தலைவர்கள் மற்றும் பெரியார்களின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவது இந்திய பண்பாடு. இதையே பெரியவர்களும் மூத்த தலைவர்களும் எதிர்பார்க்கின்றனர்.
அதேவேளை வயதில் குறைந்த அதிகாரமிக்க தலைவர்களின் கால்களிலும் சிலர் விழுந்து வணங்குகின்றனர். இதன் நோக்கம் உண்மையில் வணக்கம் தெரிவிப்பதல்ல காக்கா பிடிப்பது தான் என்பதே பிரதமர் மோடி தெரிவித்திருக்கும் கருத்தின் அர்த்தம்.
கடந்த வாரம், லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. எம்.பிக்களின் கூட்டம் இந்திய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உரையாற்றியபோதே மோடி இதனை தெரிவித்துள்ளார். காக்கா பிடிக்கும் வேலைகளிலும், முகஸ்துதி பாடும் வேலைகளிலும் எம்.பி.க்கள் ஈடுபடக்கூடாது.
தங்களது ஆற்றலை வளர்த்துக்கொண்டு திறமையுடன் செயற்பட வேண்டும். மக்களை அடிக்கடி சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்டங்களை அடிமட்ட மக்களுக்கு எடுத்துச் செல்வதே அவர்களின் முக்கிய பணியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு உண்மையான தலைவனின் அறிவுறுத்தல் இதுவாகும். இதை ஏனைய தலைவர்களும் பின்பற்ற வேண்டும்.
ஆசியாவின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடி இவ்வாறான ஒரு கொள்கையை கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றான தமிழ் நாட்டில் நடப்பதென்ன? பிரதமர் நரேந்திரமோடியின் கொள்கைக்கு எதிர்மாறான சம்பவங்களே அங்கு இடம் பெறுகின்றன என்பது சுட்டிக் காட்டத்தக்கதாகும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கால்களில் விழுந்து வணங்குவதை நிரந்தர கடமையாக வைத்துக் கொண்டிருக்கின்றனர் அ.தி.மு.கவின் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர்.
ஜெயலிதாவை விட வயதில் மூத்த தலைவர்கள் கூட அவரது கால்களில் விழுந்து வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதில் சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும் அடங்குகின்றனர்.
முன்னர் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தவரும் தற்போது சிரேஷ்ட அமைச்சராக இருக்கும் ஒருவரும் கூட ஜெயலலிதாவின் கால்களில் விழுந்து வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்.
இவ்வாறு கால்களில் விழுந்து வணங்குபவர்களை ஜெயலலிதா தடுத்து நிறுத்துகின்றாரா? அல்லது அதனை விரும்புகிறாரா என்பது தெரியவில்லை. அமைச்சர்களும் ஏனைய முக்கியஸ்தர்களும் (குறிப்பாக ஆண்கள்) தனது கால்களில் விழுந்து வணங்குவதை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்கின்றார் என்பது போலவே அவரது செயற்பாடுகள் தெரிகின்றன.
ஒரு தலைவரின் சாதனைமிக்க செயற்பாடுகளுக்கு அவரைப் புகழ்வதிலும் அவருக்கு மரியாதை செய்வதிலும் தவறில்லை. ஆனால் ஏன் காலில் விழுந்து வணங்க வேண்டும்? தமது காரியங்கள் நடக்க வேண்டும் என்பதற்காகவும், பதவி சுகபோகங்களுக்காகவும் ஒருவரது கால்களில் விழுந்து வணங்குவது சரிதானா?
தமிழக தலைவர்கள் இதைப் பற்றி ஏன் சிந்திக்கிறார்களில்லை. சுயமரியாதை, விடுதலை, சுயகௌரவம், வீரம், விவேகம் பற்றியெல்லாம் பிறருக்கு உபதேசம் செய்கிறார்கள்.
ஆனால் சுயகௌரவத்தை இழந்து இன்னொருவரின் கால்களில் விழுந்து எவ்வாறு வணங்குகின்றார்கள்? இதைப்பற்றி சிந்தித்துப் பார்ப்பதில்லையா? என்று தமிழகத்தின் சுயமரியாதைமிக்க தலைவர்கள் கேட்கின்றனர்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்தி வந்த உதயகுமார் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். கூடங்குளத்தில் அணுஉலை அமைக்கக்கூடாது. அதனால் பிரதேசத்திலுள்ள மக்கள் பாதிக்கப்படுவர்கள் என்று நீண்ட போராட்டத்தை நடத்தி வந்தவர் உதயகுமார்.
இந்த அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதற்கு பெருந்தொகையான நிதி செலவிடப்பட்டுள்ளது. இந்த செலவுகளுக்கான நிதி எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தது என்பதுதான் உதயகுமாருக்கு ஏற்பட்டுள்ள சிக்கலாகும்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதற்காக உதயகுமாருக்கு 38,720 அமெரிக்க டொலர்கள் இரு தவணைகளில் கிடைத்துள்ளதாக இந்திய மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை உளவுத்துறை பிரதமர், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்தப் பணம் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருந்தே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. என்ன காரணத்துக்காக அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை உதயகுமார் ஊடாக முன்னெடுத்தன என்பதே தற்போதுள்ள கேள்வியாகும்.
அணு உலை திட்டத்தை தடுத்து நிறுத்த அந்த நாடுகளிலுள்ள சில நிறுவனங்கள் எதற்காக முயற்சி செய்தன?
இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சில சக்திகளே இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சில சக்திகள் தொண்டு நிறுவனங்கள் ஊடாக இவ்வாறான தடைகளை ஏற்படுத்துவதற்கு முனைவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடங்குளம் அணுஉலை மாத்திரமல்ல வேறுபல திட்டங்களுக்கும் தடைகளை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக பழங்குடி மக்கள் மற்றும் ஆதிவாசிகளை பயன்படுத்தி வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரு வதாகவும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவிலிருந்து செயற்பட்டு வரும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றியும் சந்தேகம் எழுந்துள்ளன. இது பற்றி விசாரணை கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே வேளை தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு உதயகுமார் மறுப்புத் தெரிவித்துள்ளார். தன்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத் தப்பட்டுள்ளதாகவும் அதற்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடருவேன் எனவும் உதயகுமார் அறி வித்துள்ளார். எது எப்படியோ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும்.
நல்லதம்பி நெடுஞ்செழியன்