ஐ.நா. மனித உரிமை பேரவையில், இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் தொடர்ந்து மூன்றாண்டுகளாக சமர்ப்பிக்கப்பட்ட மூன்று பிரேரணைகளையும் நிராகரித்து வந்த இலங்கை அரசாங்கம், அதனால் என்ன எதிர்ப்பார்த்தது என்பது தெளிவில்லை.
தாம் எதிர்த்தால், மனித உரிமை பேரவை அந்தப் பிரேரணையை ரத்துச் செய்யும் என்றோ அல்லது அதன் கீழ் மேற்கொள்ளப்படவிருக்கும், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையை மனித உரிமை பேரவை கைவிடும் என்றோ இலங்கை தலைவர்கள் நினைத்தார்களோ தெரியாது.
ஜனாதிபதி அவ்வாறு நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் அவ்வாறு நினைக்கும் அமைச்சர்கள் இலங்கை அரசாங்கத்தில் இருக்கிறார்கள். 2010ஆம் ஆண்டு ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-மூன், இலங்கை விடயத்தில் தமக்கு ஆலோசனை வழங்க, மர்சூகி தருஸ்மானின் தலைமையில் குழுவொன்றை நியமித்த போது, அதனை இரத்துச் செய்யுமாறு கோரி அமைச்சர் விமல் வீரவன்ச, சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார்.
உண்ணாவிரதத்திற்கு முன்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய வீரவன்ச, ஒரு அமைச்சரும் போராட்டத்தில் குதிக்கப் போகிறார் என்பதை பான்-கீ-மூன் அறிந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.
இலங்கையின் அமைச்சர் ஒருவர் உண்ணவிரதம் இருந்தால், ஐ.நா. செயலாளர் நாயகம் தமது முடிவை இரத்துச் செய்துவிடுவார் என்று, வீரவன்ச நினைத்தார் போலும். இல்லாவிட்டால் தமது உண்ணவிரதத்தை சாகும் வரையிலான உண்ணாவிரதமாக அறிவிப்பாரா? தமது உயிரை காக்க, பான்-கீ-மூன் மேற்படி குழுவை இரத்துச் செய்வார் என்று நினைக்கும் அளவிற்கு, இலங்கை அமைச்சர்கள் உலக அரசியலைப் பற்றிய அறிவுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
வீரவன்ச அல்ல, சத்தாம் ஹூஸைன், கத்தாபி, கிம்-ஜொங்-இல் போன்றவர்கள் செய்த போராட்டங்களையே ஐ.நா. பொருட்படுத்தவில்லை.
அமெரிக்கப் பிரேரணைகளை நிராகரிக்கிறோம்…நிராகரிக்கிறோம் என்று இலங்கை தலைவர்கள் கூறிக் கொண்டு இருக்கும் போது, அந்த பிரேரணைகளின் காரம் அதிகரித்துக் கொண்டே சென்று, இப்போது இலங்கையில் புலிகள் அமைப்புக்கு எதிரான போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காக, மனித உரிமை பேரவை விசாரணைக் குழுவொன்றையும் நியமித்துள்ளது. அரசாங்கம் அதனையும் நிராகரிப்பதாக கூறுகிறது.
2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் மனித உரிமை பேரவையில், அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட, இலங்கை தொடர்பான இரண்டு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.
போரின் இறுதிக் கட்டத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதநேய சட்ட மீறல்கள் ஆகியவற்றைப் பற்றி விசாரணை செய்வதற்காக, இலங்கை அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறையொன்றை வகுத்துக் கொள்ள வேண்டும் என்றே அந்தப் பிரேரணைகளின் மூலம் கோரப்பட்டு இருந்தது.
ஆனால், அரசாங்கம் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற திருகோணமலை மாணவர்கள் ஐவரின் கொலை மற்றும் மூதூர் அக்ஷன் பாம் தொண்டர்களின் கொலை ஆகியவற்றை விசாரிப்பதற்கு, சில நடவடிக்கைகளை எடுத்ததே தவிர, போரின் இறுதிக் கட்டத்தில் அநாவசியமாக இரு தரப்பினராலும் கொல்லப்பட்ட ஆயிரக் கணக்கானோரைப் பற்றி உருப்படியாக எதனையும் செய்யவில்லை.
எனவே தான், கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் கூடிய மனித உரிமை பேரவையின் 25ஆவது கூட்டத் தொடரின் போது, அமெரிக்கா மற்றொரு பிரேரணையை கொண்டு வந்தது. மேற்படி மனித உரிமை மற்றும் சர்வதேச மனிதநேய சட்ட மீறல்களை விசாரணை செய்வதற்காக, சர்வதேச பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அதன் மூலமே நிறைவேற்றப்பட்டது.
அந்த சர்வதேச விசாரணை தான் இப்போது வந்திருக்கிறது.
கடந்த 10ஆம் திகதி மனித உரிமை பேரவையின் 26ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகியது. அங்கு தமது ஆரம்ப உரையை நிகழ்த்திய ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை, அந்த சர்வதேச விசாரணை பொறிமுறை ஆரம்பிக்கப்பட்டு உள்ளதை உத்தியோகபூர்வமாகவும் பகிரங்கமாகவும் தெரிவித்தார்.
அதற்கு முன்னைய வாரத்தில் மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகம் இந்த பொறிமுறையை ஆரம்பிப்பதைப் பற்றி அரசாங்கத்திற்கு எழுத்து மூலம் அறிவித்து இருந்தது.
இப்போதைக்கு வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம், நியூசிலாந்தின் முன்னாள் ஆளுநரும் சட்ட வல்லுனரும் கம்போடியாவில் 1980களில் இடம்பெற்ற லட்சக் கணக்கான படுகொலைகளைகளைப் பற்றிய சர்வதேச விசாரணைக் குழுவின் அங்கத்தவராக இருந்தவருமான சில்சியா ரோஸ் கார்ட்ரைட் (Silvia Rose Cartwright) ,இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகளைப் பற்றி விசாரணை செய்யும் குழுவிற்குத் தலைமை தாங்கவிருக்கிறார்.
அதேவேளை, அக் குழுவின் இணைப்பாளராக, இதற்கு முன்னர் தென் சூடானில் ஐ.நா அலுவலகத்தில் கடமையாற்றிய சன்ட்ரா பெய்டாஸ் (Sandra Baidas) கடமையாற்றவிருக்கிறார்.
கடந்த 10ஆம் திகதி மனித உரிமை பேரவையின் கூட்டம் ஆரம்பமான போது ஜெனிவாவில் ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத்த ஆர்யசிங்ஹவும் இந்த சர்வதேச விசாரணையைப் பற்றி இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவித்தார்.
தமது அரசாங்கம் இந்த விசாரணையை நிராகரிப்பதாகவும் இந்த விசாரணையும் இதற்கு அடித்தளமாக அமைந்த அமெரிக்க பிரேரணையும் இலங்கையின் இறைமையையும் சுதந்திரத்தையும் மீறும் செயலென கூறிய அவர், சன்ட்ரா பெய்டாஸின் நியமனத்தைப் பற்றி குறிப்பாக அதிருப்தியை தெரிவித்தார்.
ஐ.நா. சட்டங்களின் படி, உள்நாட்டு பொறிமுறைகள் முடிவடைந்த நிலையில் மட்டுமே சர்வதேச பொறிமுறையொன்றுக்கு இடமளிக்கப்பட முடியும் என்று கூறிய ரவிநாத்த, ஆனால் மனித உரிமை பேரவையின் சம்பந்தப்பட்ட பிரேரணை, சர்வதேச பொறிமுறையோடு உள்நாட்டு பொறிமுறையொன்றையும் வலியுறுத்துவதாகவும் சுட்டிக் காட்டினார்.
சன்ட்ரா பெய்டாஸின் நியமனத்திற்கு அவர் அதிருப்தி தெரிவிப்பதற்குக் காரணம், அரசியல் நாகரிகமற்ற முறையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தென் சூடான் அரசாங்கம் 2012ஆம் ஆண்டு அவரை அந் நாட்டில் இருந்து வெளியேற்றியமையே.
தென் சூடானில் மனித உரிமை நிலைமை தொடர்பாக அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையே இதற்கு காரணமாகியது. ஆனால், அவரது அறிக்கையில் எவ்வித தவறும் இல்லை என மனித உரிமை பேரவையும் மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகமும் கூறி வருகின்றன.
கடந்த 10ஆம் திகதி மனித உரிமை பேரவையின் கூட்டம் ஆரம்பமான போது நிகழ்த்திய ஆரம்ப உரையின் போதும் மனித உரிமை உயர் ஸ்தானிகர் பதவியிலிருந்து ஓய்வு பெற முன் அங்கு நிகழ்த்திய இறுதி உரையின் போதும் நவநீதம் பிள்ளை, இலங்கை உட்பட உலகெங்கும் மனித உரிமை விடயத்தில் சர்வதேச சமூகம் தமது கடமையை சரியாக நிறைவேற்றவில்லை எனக் கூறினார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நவி பிள்ளை ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதிலாக வீரவன்சவின் சாகும் வரை உண்ணாவிரதத்திற்கு காரணமாக அமைந்த, ஐ.நா. குழுவின் தலைவராகவிருந்த மர்சூகி தருஸ்மான் நியமிக்கப்படுவார் என்றே முன்னர் கூறப்பட்டது.
ஆனால், அதற்கு பதிலாக அந்தப் பதவிக்கு ஜோர்தானைச் சேர்ந்த இளவரசர் சயீத் அல் ஹூஸைனை நியமிப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.
ஹூஸைன் அமெரிக்காவின் நண்பர் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அரபு நாடொன்றை சேர்ந்தவராக இருந்த போதிலும் அவரது தாயார் ஒரு ஸ்வீடிஷ் பெண். மனைவி அமெரிக்கப் பெண். அவர் பிரிட்டனிலும் அமெரிக்காவிலுமே உயர் கல்வி கற்றார். ஐ.நா.வுக்கான ஜோர்தானின் நிரந்தர பிரதிநிதியாக இதற்கு முன்னரும் கடமையாற்றிய அவர், மனித உரிமை விடயத்தில் ஒரு கடும் போக்காளர் என்றே கூறப்படுகிறது.
இலங்கையின் மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவியாக கடமையாற்றப் போகும் சில்வியா கார்ட்ரைட்டும் மனித உரிமை விடயத்தில் கடும் போக்காளர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இலங்கை அரசாங்கம் தமக்கு எதிரான விசாரணையை எதிர்நோக்கப் போகிறது.
கடந்த 10ஆம் திகதி மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கைப் பிரதிநிதி, விசாரணையை நிராகரித்த அதேவேளை, அன்றே கூடிய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு இந்த விடயத்தைப் பற்றி நாடாளுமன்றத்தின் கருத்தை அறிந்து செயற்படுவதென தீர்மானித்தது.
இது முரண்பாடான நிலைப்பாடாகும். அரசாங்கம் ஏற்கெனவே ஐ.நா. விசாரணையை நிராகரித்து இருந்தால் நாடாளுமன்றத்தின் கருத்தை அறிய என்ன இருக்கிறது? அதேவேளை, அரசாங்கம் விசாரணையை நிராகரித்த போதிலும் அது தமது முடிவை மாற்றிக் கொள்ளவும் தயார் என்பதையே, பிரச்சினையை பற்றி முடிவெடுப்பதை நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்ததன் மூலம் தெரிய வருகிறது என்றும் வாதிடலாம்.
அரசாங்கம் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லாவிட்டால் பிரச்சினையை நாடாளுமன்றத்திடம் ஒப்படைப்பதில் அர்த்தமில்லை.
அரசாங்கம் விசாரணையை நிராகரிப்பதாகக் கூறி, சிங்கள மக்களிடையே தாம் தேசப்பற்றுள்ளவர்கள் என்று பறைசாற்றிக் கொண்டு மறுபுறத்தில் விசாரணையை எதிர்நோக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்படுவது நிச்சயம் என்பதால், அதன் பொறுப்பை நாடாளுமன்றத்தின் தலை மேல் சுமத்தப் போகிறது என்றும் வாதிடலாம்.
அதேவேளை, அரசாங்கம் விசாரணையை நிராகரிப்பதன் மூலம் தமது நிலைப்பாட்டை அறிவித்து இருப்பதால், நாடாளுமன்றத்தின் கருத்தை அறிவதென்பதில் எதிர்கட்சிகளின் கருத்தை தான் அறியப் போகிறது.
எதிர்க் கட்சிகளில் ஐக்கிய தேசிய கட்சி கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையொனிறின் மூலம் அரசாங்கம் விசாரணையை எதிர்க்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது. அதன் மூலம், தமது தரப்பு வாதங்களை முன்வைக்க அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என ஐ.தே.க. வாதிட்டு இருந்தது.
பிரச்சினையை நாடாளுமன்றத்திடம் சமர்ப்பித்ததை வரவேற்றிருந்த மக்கள் விடுதலை முன்னணி, விசாரணையை நிராகரிக்க வேண்டும் என்று அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருக்கும் பிரேரணைக்கு, திருத்தம் ஒன்றை கொண்டுவரப் போவதாக அறிவித்து இருந்தது.
அதன் மூலம் போருக்கு பின்னரான காலப்பகுதியில் அரசாங்கம் தென் பகுதியில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களைப் பற்றியும் விசாரிக்கக் கூடிய வகையில் உள்நாட்டு விசாரணை பொறிமுறையொன்றை உருவாக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்தால் மட்டுமே, தாம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரிக்கப் போவதாக ம.வி.மு. கூறியிருந்தது.
கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி பி.பி..சி. சிங்கள சேவைக்கு அளித்த பேட்டியொன்றின் போதும் ம.வி.மு. தலைவர் அனுர குமார திஸாநாயக்க, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை பொறிமுறையொன்றை அமைக்க வேண்டும். ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை செய்வார் என்று நினைப்பது கனவாகும் என்றும் கூறியிருந்தார்.
மனித உரிமைகள் மீறப்பட்டு இருப்பதாக ம.வி.மு. ஏற்றுக் கொள்வதாக இருந்தால், ஜனாதிபதி அவை தொடர்பாக உள்நாட்டு விசாரணையொன்றை மேற்கொள்வதில்லை என்பது அக் கட்சிக்கு தெளிவாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று அக் கட்சி ஆலோசனை கூறுகிறது? இது ஒரு வகையில் சர்வதேச விசாரணையை ஆதரிப்பதாக இல்லையா?
நாடாளுமன்றத்தில் உள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, எந்தவொரு சர்வதேச விசாரணையையும் எதிர்க் கொள்ளத் தயார் என்று எப்போதும் கூறி வருகிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேச விசாரணையை கோரி வந்த கட்சியாகும். எனவே, ஆளும் கட்சியைத் தவிர நாடாளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனித உரிமை பேரவையின் விசாரணையை ஆதரிக்கின்றன என்றே தோன்றுகிறது.
ஆனால், நாடாளுமன்றம் இந்த விடயத்தில் எவ்வாறு முடிவொன்றை எடுக்கப்போகிறது என்பது இன்னமும் தெளிவில்லை. எப்போதும் போல் ஆளும் கட்சிக்கு இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குப் பலத்தால் அதனை முடிவுசெய்வதாக இருந்தால், பிரச்சினையை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்ததிலும் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
ஏனெனில், அதன் முடிவு முன்கூட்டியே தெரிந்த ஒன்றாகும். சிலவேளை ஆளும் கட்சியில் இருக்கும் இடதுசாரி கட்சிகள், எதிர்க் கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிக்கலாம். அவ்வாறு அவர்களுக்கு தமது மனச்சாட்சிக்கு ஏற்ப வாக்களிக்க அனுமதி இருக்குமா என்பதும் இன்னமும் தெளிவில்லை.
சிலவேளை, அரசாங்கம் தமது மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குப் பலத்தை பாவித்து இந்த விசாரணையை நாடாளுமன்றமும் நிராகரிக்கிறது என்று மனித உரிமை பேரவையிடம் கூறலாம். ஆனால், அதனால் ஏற்படப் போகும் மாற்றம் எதுவும் இல்லை. விசாரணை தொடரும்.
தமக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணையை நிராகரிப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறினார். ஆனால் என்ன பயன், அரசாங்கம் விசாரணையை தொடர்ந்தது. அதனை எதிர்க் கொள்ள சரத் பொன்சேகா நிர்ப்பந்திக்கப்பட்டார். அது போலவே, மனித உரிமை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணையை அரசாங்கம் எதிர் கொண்டே தான் ஆக வேண்டும்.
அரசாங்கத்திற்கு எதிரான மனித உரிமை பேரவையின் குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் விசாரணை முறைமை நியாயமற்றவை என்றும் அரசாங்கம் கூறுகிறது. அதேபோல், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக, அரசாங்கம் குற்றப் பிரேரணை ஒன்றை முன்வைத்த போது அவரும் இவ்வாறு தான் கூறினார்.
முன்னாள் பிரதம நீதியரசர் தமது திவி நெகும சட்ட மூலத்தை, மாகாண சபைகளின் அனுமதிக்காக அனுப்பியதை அடுத்தே, அரசாங்கம் அவருக்கு எதிராக குற்றப் பிரேரணையை முன்வைத்தது. அதற்காக உண்மையான குற்றச்சாட்டுகளையும் பாவித்தது.
அதேபோல், இலங்கையில் போரை நிறுத்துமாறு போரின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்திக் கூறின. அரசாங்கம் அதனை மதிக்காமையே இந்த மனித உரிமை பேரவை விசாரணைக்கான காரணமாகும். அதற்காக உண்மையான மனித உரிமை மீறல்களை அந் நாடுகள் பாவிக்கின்றன. இலங்கையை விட மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் எத்தனையோ நாடுகள் உலகில் உள்ளன.
தமக்கு எதிரான நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணை முறைமை நியாயமற்றது, அது நீதி விசாரணை முறையொன்றுக்குப் பதிலாக, பெரும்பான்மை வாக்குகளால் முடிவு எடுக்கும் முறையொன்றாகும் என முன்னாள் பிரதம நீதியரசர் வாதாடினார்.
உண்மை தான். ஆனால், அது தான் நடைமுறையில் உள்ள முறை. அதை அவர் எதிர்; கொள்ள வேண்டியதாயிற்று. அதேபோல், மனித உரிமை பேரவையின் விசாரணை முறைமையும் நடைமுறையில் உள்ள முறைமையாகும். அதனை அரசாங்கம் எதிர்க் கொண்டே தான் ஆக வேண்டும்.
அரசாங்கம் அதில் கலந்து கொள்ளாது, விசாரணை அதிகாரிகள் இலங்கைக்கு வர விசா வழங்காதிருக்கலாம். அப்போது விசாரணை ஒருதலைப்பட்சமாக மேற்கொள்ளப்படும்.
அது அரச படைகளுக்கு எதிராக மட்டும் நடைபெறும் விசாரணையாகிவிடும். ஏனெனில், புலிகளுக்கு எதிராக குற்றஞ்சுமத்த ஒருவரும் அங்கு இருக்க மாட்டார்கள்.
அதேவேளை, அரச படைகளுக்கு எதிரான விசாரணைகளின் போது அவர்களை பாதுகாக்கவும் ஒருவரும் இருக்க மாட்டார்கள். இது அரசாங்கம் பறைசாற்றிக் கொள்ளும் தேசபற்றுக்கு முரணானது.
எம்.எஸ்.எம்.ஐயூப்