நதிகள் உலகின் உயிர் நாடிகள் என்று போற்றப்படுகின்றன. உலக இயக்கத்தின் இயந்திரங்களான நதிகளில் அமேசன் நதி உலகிலே இரண்டாவது பெரிய நதியாகும். இந்நதி கொண்ட பரப்பு 4000 மைல்கள் அகலமுடையது.
அமேசன், அந்தீஸ் மலையில் இருந்தும் இன்னும் சில உயர்நிலப் பிரதேசங்களில் இருந்தும் பல ஆறுகளை இணைத்துக் கொண்டு தென் அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் அத்திலாந்திக் சமுத்திரத்துடன் இணைகின்றது.
உலகிலே பல உப நதிகளின் வடிமானங்களையும் தாழ் நிலங்களில் பரப்பிக் கொண்டு ஓடுவது அமேசன் நதிக்கே உள்ள மற்றுமொரு சிறப்பம்சமாகும். 1500ஆம் ஆண்டளவில் Vicente Yanez Pinzo என்பவரே அமேசன் நதியின் ஆற்று முகத்தினை கண்டுபிடித்தார்.
1541இல் அமேசன் பிரதான நதியினூடாக கடலைச் சென்றடைந்ததுடன், தன் அற்புதப் பயணத்தையே அந் நதிக்கும் பெயரிட்டவர் Francisco Orellana ஆவார்.
பிறேசில் நாட்டின் அரைவாசியே அமேசன் நதியால் சூழப்பட்டுள்ளது. பிறேசிலின் முழு சனத்தொகையில் 10 சதவீதத்தினர் இங்கு வசிக்கின்றனர். இதே சனத்தொகை தன்மை பேரு, ஈக்குவடோரிலும் இந் நதியினைக் கொண்ட பகுதிகளில் காணப்படுகின்றன.
அமேசனைச் சூழ வாழும் பெரும்பாலான மக்களின் போக்குவரத்துப் பயணங்களும் இந்நதியினூடாகவே காணப்படுகின்றன.
மறுமலர்ச்சிக் காலத்தில் பல செவ்விந்தியர்களே இங்கு முதலில் குடியேறியதாகச் சொல்லப்படுகின்றது.
இட அமைவு
அமேசன் நதி தென்னமெரிக்காவின் மேற்கு எல்லையில் வடக்கு தெற்காக அமைந்துள்ள அந்தீஸ் உயர்மலைத் தொடரில் இருந்து பல உப நதிகளாகப் பிரிந்து, தென் ஆபிரிக்காவின் கிழக்கு எல்லையில், அத்திலாந்திக் சமுத்திரத்துடன் இணைகின்றது.
தென் அமெரிக்காவின் வட பாகத்தில் வியாபித்துக் காணப்படும் சமவெளியில் அமேசன் ஈரநிலக் காடுகளால் அதிகமாக சூழப்பட்டுள்ளது. அந்தீஸ் மலையைத் தவிர ஏனைய இடங்களில் மேட்டு நிலத்தினையும் பெரும்பாலான சமவெளிகளைக் கொண்டே அமேசன் நதி பாய்ந்தோடுகின்றது.
மத்திய கோட்டை வெட்டிக் கொண்டுசெல்லும் வகையில் அமேசன் தாழ்நிலம் அமைந்துள்ளது. இவ்விடத்தில் வித்தியாசமான காலநிலை நிலவுகின்றது. அதாவது, அயன வலயம் என்றாலே அதிக வெப்பம் நிலவும் பகுதிதான்.
ஆனால், அமேசன் பகுதியினைப் பொறுத்தமட்டில் இம் மத்திய கோட்டை ஊடறுத்துச் சென்றாலும், அமேசன் நதியினதும் அமேசன் வனாந்தரத்தினதும் இயல்பாய் ஈரலிப்பைப் பெற்றுக் காணப்படுகின்றது. இங்கு வெப்பநிலை சராசரியாக 4 பாகையிருந்து 78 பாகை வரை நிலவுகின்றது.
எனினும், இப்பகுதியை வெப்ப வலயம் எனக் கருதிவிட முடியாது. சம தரையான பகுதிகளுக்குள் காடுகளை மிகையாகக் கொண்டிருப்பதால் அதிக ஈரப்பதனைக் கொண்டுள்ளது மட்டுமன்றி, மேற்குக் கரையில் எல்நினோவின் தாக்கத்தையும், வட கிழக்காக வியாபாரக் காற்றின் தாக்கத்தையும் அனுபவிப்பதால் இங்கு ஈரலிப்பிற்குச் சாதகமாகியுள்ளது.
அமேசன் பகுதிகள் ஜனவரி தொடக்கம் ஜூன் வரையும் மழை மயமான காலநிலை நிலவ, அடுத்த ஆறு மாதங்களிலும் வரட்சித் தன்மை என்று சொல்லும் அளவிற்கு இல்லாவிட்டாலும், பெரும்பாலும் ஈரக்கசிவான தன்மையில் காணப்படுகின் றது.
அமேசன் நதியின் நீர் வரம்புப் பரப்பானது கிட்டத்தட்ட 3 மில்லியன் சதுர மைல்களாகும். அந்தீஸ் மலையின் நடுப்பகுதி பேருவின் மத்தியில் காணப்படுகிறது.
இம் மலை உச்சியில் இருக்கும் பனிப் பாறைகள் வெப்ப காலத்தில் உருகும் போது, பனியாறு பேருவில் காணப்படும் ஏரிகளுக்கு நீரினை வழங்க, மிகுதி நீர் சிறு நதிகள் வழியாக பசுபிக் சமுத்திரத்திற்குச் செல்கின்றது.
இதுபோக பனியாறுகள் சில மலைகளிலிருந்து கிழக்காக ஓடுகின்ற அமேசன் கிளை நதிகள் ஊடாக நிமிடத்துக்கு 42 மில்லியன் கன அளவில் அத்திலாந்திக் சமுத்திரத்துடன் இணைகின்றன.
இந்த அளவு, வருடத்தில் சில காலங்களுக்கு மாற்றமடைகின்றது. பாரிய அளவில் கருமையான வண்டல் படிவுகளை கொண்டு செல்லும் போது நதி இரு மருங்கிலும் படியவிடுவதுடன், அமேசன் கழிமுகம் அத்திலாந்திக் சமுத்திரத்தில் கலக்கும் கரைகளிலும் 50 மைல் உயரத்திற்கு இவ் வண்டல் படிவுகள் படிகின்றன.
பொதுவாக வருடத்திற்கு ஓரிரு முறைகளே அமேசன் நதிக்கு வெள்ள அபாயம் நிலவுவதாகச் சொல்லப்படுகின்றது. ஆகஸ்ட், – செப்டம்பர் மாதங்களில் அந்தீஸிலிருந்து பனி உருகி வழிய, நவம்பர் வரை அமேசனில் நீர் மட்டம் உயர்கிறது. ஜனவரி – மே மாதங்களில் வெப்பக் காலநிலையின் செல்வாக்கினால் நீர் மட்டம் குறைய ஏதுவாகின்றது.
காடு
மானிட அமைவிடங்களில் பயிர் நடவடிக்கைகளுக்குச் சாதகமான காலநிலை என்பது சற்றுக் குறைவாகக் காணப்படுகிறது. அதிக ஈரப்பதன் மட்டும் பயிர் நடவடிக்கைகளை தீர்மானிக்கவல்லன அல்ல. இவற்றோடு வெப்பமும், வரட்சியும் ஒத்துழைக்க வேண்டும்.
அமேசன் நதியினை ஆக்கிரமித்திருப்பதே அமேசன் காட்டுப் பகுதிகள்தான். எனவே, இங்கு பயிர் நடவடிக்கைகளைத் தவிர காடுபடு தொழில்களே சிறப்புற்று விளங்குகின்றன.
உலகிலே அதிக ஈரலிப்பினைக் கொண்டது அமேசன் காடுகளாகும். மட்டுமன்றி, உலக காட்டு நிலப்பரப்பிலும் அமேசன் காடே முதன்மை வகிக்கின்றது. நிலத்தினுள் பல மீட்டர்களுக்கு வேரினை ஊடறுத்துச் செல்லும் மரங்கள் காணப்படுகின்றன.
இம் மரங்கள் அதிக தடிப்பானவையாகவும் அதிக வைரமானவையாகவும் விளங்குகின்றன. அயன வலயத்தில் அமைந்துள்ள அமேசன் காட்டு மரங்களின் கிளைகள் வியாபித்தும், இலைகள் தட்டையாக அகன்றும் காணப்படுவதால் சூரியன் தன் ஒளியினை நிலத்தினில் பரப்ப படாதபாடு படுகின்றது.
இவை தனக்குத் தேவையான சூரிய ஒளியினை பெற்றுக் கொள்ளவேண்டி ஒன்றிலொன்று முட்டிமோதிக்கொண்டு வளர்வதால் இம் மரங்களின் உயரம் 50 மீட்டர்களையும் தாண்டி வளர்கின்றன.
இவ்வாறு ஒன்றிலொன்று போட்டி போட்டுக் கொண்டு வளரும் மரங்களில் றப்பர் மரங்கள் முக்கியம் பெறுகின்றன. றப்பர் மரத்தின் பிறப்பிடம் அமேசன் காடுகள் என்றும் சொல்லப்படுகின்றது.
20ஆம் நூற்றாண்டில் முதல் பத்து வருடங்கள் உலகிலே அநேகமான நாடுகளுக்கு றப்பரினை இவ் அமேசன் காடுகளே வழங்கியதாகச் சொல்லப்படுகிறது. 1910ஆம் ஆண்டில் தென் கிழக்கு ஆசிய நாடுகள் இங்கிருந்தே றப்பர் மர வளர்ப்பினை தன் தேசங்களுக்கும் அறிமுகப்படுத்தின.
இவைபோலவே இன்னும் பல வைர மரங்களும் இங்கு வளர்வதுடன், அவற்றில் பிணைந்துக் கொண்டே ஏறுகொடி வகைகளும் வளர்கின்றன.
உலகிலே அதி நஞ்சு வாய்ந்த மலைப் பாம்பினங்கள், குரங்கு வகைகள், முதலை, உடும்பு, வண்ணாத்துப் பூச்சியினங்கள், டரன்டுலா, டொமன்ஞர் போன்ற ராட்சத சிலந்தி வகைகள் இன்னும் ஈரலிப்பில் வளரக்கூடிய சதை நத்தை, அட்டை, தவளை, தேரை. போன்ற விலங்கினங்களும் மெகோவ் ராஜக் கிளிகளும் சிறப்பாக இங்கு வசித்து வருகின்றன.
தொடர்பாடல்
இவ் வலயத்தில் நெடுஞ்சாலைகளோ தண்டவாளப் பாதைகளோ இல்லை. சாதாரணமாக வான் வழியாகவும் பெரும்பாலும் நதி வழியாகவும்தான் போக்குவரத்துக்கள் இடம்பெறுகின்றன. பெரிய அளவில் முக்கியம் வாய்ந்த வான் பயணங்கள் அமேசன் காடுகளின் மேலாகச் செல்வது அரிதாகும்.
நதிவழியாகவும் சாதாரண படகுகளையும் கப்பல்களைக் கொண்டுமே நடைபெறுகின்றன. இந் நதி வழிப் போக்குவரத்தை ஆபத்தாக்கும் வகையில் நதிகளின் சில இடங்களும் ஆபத்தாகவே உள்ளன. இதனால் இன்றிய மையாத கப்பல் போக்குவரத்துச் சேவை கள் மாத்திரம் நடைபெறுவதுடன், அந்நதி, காட்டினைப் பற்றி நன்கறிந்தவர்களே அப் பிரதேசத்தில் தங்கள் ஜீவனோபாயத்தை செய்வது வழக்கம்.
அளவத்துகொடை – எம்.ஏ. ஷெரீ