அது கடந்த 23 ஆம் திகதி திங்கட்கிழமை. வெள்ளவத்தை பொலிஸ் நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த நேரமது. வெள்ளவத்தை லில்லி அவனியூவில் நிர்மாண நிலையம் ஒன்றை நடத்தி வரும் வர்த்தகர் ஒருவர் தயக்கத்துடன் பொலிஸ் நிலையத்துக்குள் வருகின்றார்.
முறைப்பாடொன்றை அளிக்க வேண்டும் என தெரிவித்து வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கு நேரடியாக செல்கின்றார்.
அங்கு சென்ற அந்த வர்த்தகர் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நாகவத்தவிடம் முறைப்பாட்டினை தெரிவிக்கின்றார்.
‘ சேர்…வங்கிக்கு வைப்பிலிட எடுத்துச் செல்லப்பட்ட 13 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பணம் அடையாளம் தெரியாதோரால் கொள்ளையிடப்பட்டுள்ளது’ என முறைப்பாட்டை ஆரம்பிக்க பொலிஸார் குறுக்குக் கேள்விகளை தொடுத்து முறைப்பாட்டை நெறிப்படுத்தி பதிவு செய்துகொண்டுள்ளனர்.
அதன் படி இந்த கொள்ளை முச்சக்கர வண்டியில் வந்த சீ.ஐ.டி.என தங்களை அறிமுகம் செய்துகொண்ட இருவரால், மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் அது கடந்த 21 ஆம் திகதி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் பொலிஸ் முறைப்பாட்டுப் புத்தகத்தில் பதிவானது.
முறைப்பாடளிக்கப்பட்ட அந்த நேரத்தில் கொழும்பு தெற்குக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டீ சொய்சா வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார்.
பொதுவாக முறைப்பாடொன்று பதிவானதும் அது தொடர்பில் பிராந்தியத்துக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்படவேண்டும் என்ற ஒரு நடைமுறை பொலிஸ் திணைக்களத்தில் பின்பற்றப்படுகின்றது.
அதன் படி இந்த விடயமானது உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டீ சொய்சா, வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திலேயே இருந்ததால் உடனடியாக அவரின் கவனத்துக்கு சென்றது.
இதனை அடுத்து வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான நாகவத்தவை அழைத்த உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டீ சொய்சா, சம்பவம் தொடர்பில் நடவடிக்கையினை உடன் ஆரம்பிக்குமாறு கூறி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி நாகவத்த தலைமையிலான பொலிஸ் குழு சம்பவம் இடம்பெற்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்ட வெள்ளவத்தை, லில்லி அவனியூ பிரதேசத்துக்கு சென்றது. அங்கு சென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டது.
இந் நிலையில் வர்த்தகர் தனது முறைப்பாட்டில் தனது உதவியாளரும் உறவினருமான நபர் முச்சக்கர வண்டியிலேயே கடத்தப்பட்டதாகவும் அவர்களின் கைகளில் துப்பாக்கி இருந்ததாகவும் கடத்தப்பட்டதும் கைகளுக்கு விலங்கிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்த நிலையில் சீ.ஐ.டி.என தங்களை காட்டிக்கொண்டதாகவும் தெரிவித்ததால் அந்த விடயங்களை மையமாக வைத்தே ஸ்தல விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்தவேளையில் பொலிஸாருக்கு அப்போது முக்கியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. லில்லீ அவனியூ பிரதேசத்தில் இருந்த ஒரு முச்சக்கர வண்டிச் சாரதி அந்த துரும்பினை பொலிஸாருக்கு வழங்கியிருந்தார்.
‘ சேர்…தனுக ராலஹாமியும் சஞ்சீவ ராலஹாமியும் நீங்கள் குறிப்பிடும் தினம் நண்பகல் 12.30 அளவில் கஞ்சா சுற்றிவளைப்பொன்றை மேற்கொள்ளவென எனது முச்சக்கர வண்டியை எடுத்துச் சென்றனர். மாலையில் கொண்டுவந்து தந்தனர். தரும் போது எனக்கு 5000 ரூபா பணமும் தந்தனர்.’ என அந்த முச்சக்கர வண்டி சாரதி குறிப்பிட்டார்.
இந்த தகவல் கிடைக்கும் வரை குற்றவாளி தொடர்பில் அனுமானம் ஒன்றுக்கு வந்திராத வெள்ளவத்தை பொலிஸார் அந்த தகவலை அடுத்து சந்தேக நபர்கள் அநேகமாக பொலிஸாராக தான் இருக்க வேண்டும் என்ற அனுமானத்துக்கு வந்தனர்.
வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவை மேற்கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களான தனிக (84350), சஞ்சீவ நிலந்த (3228) ஆகியோர் தொடர்பில் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி நாகவத்த விசாரிக்கலானார்.
எனினும் அப்போது அவ்விரு கான்ஸ்டபிள்களும் விடுமுறையில் இருந்தமையால் பொலிஸாரின் சந்தேகம் மேலும் அதிகரித்தது. கடத்தல் மற்றும் கொள்ளை இடம்பெற்ற நேரம், முறைப்பாட்டாளர் குறிப்பிட்ட கடத்தல் காரரின் அங்க அடையாளம், முச்சக்கரவண்டியின் நிறம், முச்சக்கரவண்டி சாரதியின் உறுதிப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்ட பொலிஸார் சந்தேக நபர்கள் இந்த கான்ஸ்டபிள்களாகவே இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.
இது தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டீ சொய்சாவுக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்வதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது.
இந் நிலையில் தம்முடன் இதுவரை ஒன்றாக கடமையாற்றிய குறித்த இரு மோசடி கான்ஸ்டபிள்களையும் வெள்ளவத்தை பொலிஸாரே கைது செய்தனர்.
இதனை அடுத்து அவ்விருவரையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த சில்வா பணி இடை நிறுத்தம் செய்து விசாரணைகளை மேறகொண்டார். .இதன் போது தான் நடந்தது என்ன என்பது வெளிச்சத்துக்கு வந்தது.
யோகா, தெஹிவளை, வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த ஒரு வர்த்தகர். இவருக்கும் கான்ஸ்டபிள்களான தனுக,சஞ்சீவ ஆகியோருக்கு இடையில் நல்ல பிணைப்பு இருந்து வந்துள்ளது.
‘ நீங்கள் வெள்ளவத்தை தானே… அந்த பகுதியில் உண்டியல் முறை மூலம் சட்ட விரோதமாக பண பறிமாற்று வேலையில் ஈடுபடும் ஒருவர் இருக்கின்றார். அவர் பணத்தை கொண்டு செல்லும் போது நான் உங்களுக்கு கூறுகின்றேன்.
நீங்கள் அதனை கைப்பற்றுங்கள். நாங்கள் அதனை பிரித்தெடுக்கலாம்’ என யோகா அவ்விரு கான்ஸ்டபிள்களுக்கும் ஆலோசனையினை முன்வைக்க அந்த திட்டமே செயலுரு பெற்றுள்ளது என்பதை கான்ஸ்டபிள்களை விசாரணை செய்த பொலிஸார் தெரிந்துகொண்டனர்.
இதனை அடுத்து உடன் செயற்பட்ட பொலிஸார் யோகாவையும் கைது செய்து மூவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்த போது சம்பவம் தொடர்பிலான அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்திக்கொண்டனர்.
கடந்த 21 ஆம் திகதி குறித்த நிர்மாண கடையின் உரிமையாளர், தனது உறவினரும் உதவியாளருமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த அருள் ராஜிடன் 13 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பணத்தைக் கொடுத்திருந்தார். பணத்தை கொடுத்துவிட்டு அவர் பிறிதொரு வேலை தொடர்பில் திருகோணமலைக்கு சென்றுள்ளார்.
இந் நிலையிலேயே அன்றைய தினம் நண்பகல் 12.30 மணியளவில் ஒரு பையில் பணத்தை போட்டுக்கொண்டு தனியார் வங்கி ஒன்றை நோக்கி அருள் ராஜ் சென்றுகொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் வந்த இருவர் அவரை மறித்து தாம் சீ.ஐ.டி.யினர் எனக் கூறி விசாரணைக்காக வருமாறு பலவந்தமாக ஆட்டோவில் ஏற்றியுள்ளனர்.
விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் தகவல் பிரகாரம் இந்த கடத்தலின் போது யோகாவும் லில்லி அவனியூவிற்கு வந்துள்ளார். அவர் அடையாளம் காட்டிய நபரையே பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும் கடத்தியுள்ளனர்.
இந் நிலையில் கடத்தப்பட்ட அருள்ராஜை, ஆட்டோவுக்குள் ஏற்றியதும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் அவரின் கைகளுக்கு விலங்கிட்டுள்ளார். அத்துடன் அவரை அப்படியே மரீன் டிரைவ் பகுதிக்கு அழைத்துச் சென்று ஆட்டோவில் வைத்தே விசாரணை செய்துள்ளனர்.
‘ நீங்கள் உண்டியல் மூலம் பணமாற்றும் சட்டவிரோத நடவடிக்கை ஒன்றில் ஈடுபடுகின்றீர்கள் தானே’ என அதட்டிக் கேட்ட இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களிடமும் இப்பணத்தொகை தனது முதலாளியுடையது என்பதை அப்பாவித்தனமாக அருள் ராஜ் கூறியுள்ளார்.
இதனை அடுத்து திருகோணமலையில் இருந்த முதலாளிக்கு அருள் ராஜ் மூலம் கான்ஸ்டபிள்கள் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த வைத்துள்ளனர்.
அழைப்பு இணைக்கப்பட்டதும் தொலைபேசியில் மறு முனையில் பேசுபவரின் குரல் எல்லோருக்கும் கேட்கும் வண்ணம் ‘லவூட்ச் பீக்கரையும் ‘ செயற்படுத்தியே உரையாடலை தொடருமாறு பணித்துள்ளனர்.
இந் நிலையில் அருள் ராஜ் தமிழில் நடந்தவற்றை கூற முதலாளியோ முச்சக்கர வண்டியின் இலக்கத்தை பார்த்துக் கொள்ளுமாறு அருள் ராஜிடம் கூறியுள்ளார். இந்த விடயம் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு புரிந்துள்ளது.
உடனடியாக கான்ஸ்டபிள்கள் தாங்கள் சீ.ஐ.டி.எனவும் உண்டியல் முறை மூலம் பண கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அருள் ராஜை கைது செய்வதாகவும் தெரிவித்துள்ளதுடன் முதலாளியையும் உடன் கொழும்புக்கு வந்து சீ.ஐ.டி.தலைமையகத்துக்கு வருமாறு கூறவே முதலாளியும் சற்று பயந்துள்ளார்.
ஆரம்பத்தில் அது உண்டியல் பணம் அல்லவென மறுத்துள்ள முதலாளி பின்னர் சீ.ஐ.டி.யினர் என தம்மை அறிமுகப்படுத்திய இருவரும் அது தொடர்பில் நன்கு அறிந்திருப்பதைக் கண்டு ‘ சேர்…அதிலே 10 இலட்சம் ரூபா இருக்கு…. நீங்கள் 5 இலட்சம் எடுத்துக்கொண்டு எனக்கு 5 இலட்சத்தை விட்டுவிட்டு எனது உதவியாளரை அனுப்பிவிடுங்கள்’ என பேரம் பேசியுள்ளர்.இதனை அடுத்து தொலைபேசி அழைப்பானது துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் போது முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைத்துப்பாக்கி ஒன்றையும் காட்டி அருள்ராஜை மிரட்டி பணப் பையை தனது கைகளுக்கு எடுத்துள்ளதுடன் அதில் உள்ள அனைத்து பணத்தொகையினையும் எடுத்துக்கொண்டுள்ளார்.
இதனை அடுத்து புறக்கோட்டையை நோக்கி முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ள இவ்விரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருள் நிரப்பியுள்ளனர்.
இதன் போது இவ்விரு கான்ஸ்டபிள்களும் அந்த முச்சக்கர வண்டியை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கொண்டு செல்வது, அதில் அருள் ராஜ் உள்ளே இருக்க எரிபொருள் நிரப்பப்படுவது என அனைத்துக் காட்சிகளும் எரிபொருள் நிரப்பு நிலைய சீ.சீ.ரீ.வீ.கமராவில் துல்லியமாக பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும் புறக்கோட்டை பஸ் நிலையத்துக்கு அருள் ராஜை அழைத்து வந்துள்ள இவ்விரு கான்ஸ்டபிள்களும் அவரை அங்கு இறக்கிவிட்டு ‘ இனி மேல் வெள்ளவத்தை பக்கம் உன்னை காணவே கூடாது’ என மிரட்டி யாழ் .போகுமாறு 2000 ரூபா பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீண்டும் வெள்ளவத்தை திரும்பியுள்ளனர்.
வெள்ளவத்தைக்கு வந்த இவ்விரு கான்ஸ்டபிள்களும் முச்சக்கர வண்டி சொந்தக்காரரிடம் 5000 ரூபாவை கொடுத்து வண்டியையும் கையளித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின் படி இவ்விரு கான்ஸ்டபிள்களில் ஒருவர் ரம்புக்கணையை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் காலி, அஹங்கமவை சேர்ந்தவர் எனவும் அறிய முடிந்தது.
அத்துடன் ரம்புக்கனையை சேர்ந்த கான்ஸ்டபிள் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் நீண்டகாலமாக பணி புரிபவர் எனவும் அறிய முடிந்தது.
இந் நிலையில் கொள்ளையின் பின்னர் ரம்புக்கணையை சேர்ந்த கான்ஸ்டபிள் 6 நாள் விடுமுறையில் சென்றுள்ளதுடன் மற்றையவர் தனது அம்மாவுக்கு சுகமில்லை என கூறி விடுமுறை எடுத்துச் சென்றுள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில் யாழ். போகுமாறு பணிக்கப்பட்ட அருள் ராஜ் அங்கு செல்லவில்லை. மாறாக தனது மாமாவான முதலாளிக்கு மீண்டும் அழைப்பை ஏற்படுத்தி நடந்தவற்றை குறிப்பிட்டுள்ளார். இந் நிலையில் தான் திருகோண மலையிலிருந்து திரும்பிய முதலாளி வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பணத்தை கொள்ளையிட்டுள்ள இவ்விரு கான்ஸ்டபிள்களும் பணப்பையை குப்பை கூலம் ஒன்றில் எறிந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
பணப்பையை எறிந்துவிட்டு வெள்ளவத்தையில் வர்த்தகர் யோகா மற்றும் கான்ஸ்டபிள்கள் இருவரும் ஒன்று கூடி பணத்தை பிரித்தெடுத்துள்ளனர். யோகாவுக்கு 5 இலட்சம் ரூபாவை கொடுத்துள்ள கான்ஸ்டபிள்கள் ஏனையவற்றை தாம் பிரித்து எடுத்துக்கொண்டுள்ளனர்.
இந் நிலையிலேயே கொள்ளையிடப்பட்ட பணத்தொகையில் பெரும்பாலான பகுதி மீட்கப்பட்டுள்ளன. அதாவது கான்ஸ்டபிள்களின் உத்தியோக பூர்வ விடுதியில் கான்ஸ்டபிள் ஒருவருக்கு சொந்தமான அலுமாரியிலி ருந்தும் 3 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாவும் மற்றைய கான்ஸ்டபிளின் அலுமாரியிலிருந்தும் 3 இலட்சம் ரூபாவும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் வர்த்தகரான யோகாவிடமிருந்து 5 இலட்சம் ரூபா மீட்கப்பட்டுள்ளது. இதனைவிட முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் 5 ஆயிரம் ரூபாவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள வர்த்தகர் யோகா கொள்ளையிடப்பட்ட பணத்துக்கு சொந்தக்காரரான முதலாளியின் முன்னைய நண்பர்களில் ஒருவர் என தெரியவந்துள்ளது. அத்துடன் பணத்தை பறிகொடுத்த வர்த்தகரும் உண்டியல் முறை நிதி பரிமாற்றல் நடவடிக்கையுடன் தொடர்புடையவர் என்பது விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதால் அது தொடர்பிலும் வேறு ஒரு விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
முறைபாடு கிடைக்கப் பெற்று 24 மணி நேரத்துக்குள் தமது பொலிஸ் நிலையத்திலேயே கடமையாற்றி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட இவ்விரு கான்ஸ்டபிள்களையும் வெள்ளவத்தை பொலிஸாரே கைது செய்தமையானது விஷேடமானதாகும்.
இந்த சம்பவத்தால் எந்தவொரு வர்த்தகரும் அச்சத்துக்கு உள்ளாக வேண்டியதில்லை என குறிப்பிட்ட பிரதேசத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், கப்பம் உள்ளிட்ட எந்தவொரு மோசடியுடனும் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் எவரேனும் இருப்பின் அது தொடர்பில் தகவல் தருமாறும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் இவ்விரு பொலிஸ் கான்ஸ்டபிள்களினதும் நடவடிக்கைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய அவர்களை வழி நடத்தும் அல்லது நெறிப்படுத்தும், அவர்களை கண்காணிக்க வேண்டிய பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மூவரும் நேற்று முன்தினம் புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் குழு சந்தேக நபர்களான கான்ஸ்ட பிள்கள் இதற்கு முன்னர்
இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனரா என தேடி வருகின்றது. இதற்காக சந்தேக நபர்களின் தொலைபேசி விபரப்பட்டியல், வங்கிக் கணக்குகளை சோதனையிட நடவடிக்கைகள்முன்னெடுக் கப் பட்டுள்ளன.
சிவில் உடையிலேயே இவ்விரு கான்ஸ்டபிள்களும்இந்த கொள்ளையை மேற்கொண்டுள்ளதுடன்அதற்குபயன்படுத்தப்பட்ட கைத் துப்பாக்கியும் கை விலங்கும் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திலிருந்து களவாடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கைது செய்த இந்த நடவடிக்கையானது, மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனா நாயக்க, கொழும்பு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட, கொழும்பு தெற்குக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரேமலால் ரணகல ஆகியோரின் கண்காணிப்பில் ….
கொழும்பு தெற்குக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டீ சொய்சாவின் விஷேட ஆலோசனைக்கு அமைய வெள்ள வத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பெட்ரிக் எப்.யூ.வுட்லரின் வழிநடத்தலின் கீழ் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நாகவத்த, பொலிஸ் பரிசோதகர் கும்புரேகம உள்ளிட்ட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
–எம்.எப்.எம்.பஸீர்–