Site icon ilakkiyainfo

படுகொலை பயம்.. சோனியா பிரதமராவதை தடுக்க “கெடு” வைத்த ராகுல்.. நட்வர் சிங்கின்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமரானால் அவரும் படுகொலை செய்யப்படலாம் என்று அச்சப்பட்ட ராகுல் காந்தி அவரை 2004-ல் பிரதமர் பதவியை ஒப்புக் கொள்ளவிடாமல் கெடு விதித்து போராட்டம் நடத்தியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.

நட்வர்சிங்.. தீவிர அரசியலில் இருந்த காலத்திலும் சர்ச்சைதான்.. இப்போதும் சர்ச்சைதான்.. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 2005ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த நட்வர்சிங், ஈராக்குக்கான மருந்துகள், உணவுக்கு எண்ணெய் திட்ட ஊழலில் சிக்கியதால் ராஜினாமா செய்தார்.

பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸைவிட்டு வெளியேறினார். கடந்த மே மாதம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தாம் ஒரு சுயசரிதை (ஒன் லைப் இஸ் நாட் எனப்) எழுதி இருப்பதாக குண்டைத் தூக்கிப் போட சோனியா உள்ளிட்டோரின் தூக்கம் தொலைந்தது.

நடந்தது என்ன?

தாம் புத்தகம் எழுதுவதாக பேட்டி கொடுத்த பின்பு என்ன நடந்தது என்பது குறித்தும் தமது புத்தகத்தில் அப்படி என்ன சோனியா உள்ளிட்டோரின் தூக்கத்தை கெடுக்கும் தகவல்கள் இருக்கின்றன என்பது குறித்தும் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு நட்வர்சிங் நேற்று ஒரு பேட்டியளித்துள்ளார். நட்வர்சிங் அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்:

சுயசரிதை வெளிவர இருக்கிறது என நான் பேட்டியளித்த மறுநாள் மே 7-ந் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியாவும் அவரது மகள் பிரியங்காவும் என்னை நேரில் சந்தித்தனர். சோனியாவும் பிரியங்காவும் என்னை சந்தித்ததற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் குடும்பத்துக்கு நெருக்கமான சுமன் துபே சாட்சிகள்.

அந்த சந்திப்பின் போது ‘உங்கள் சுயசரிதை புத்தகத்தில் நான் பிரதமர் பதவி ஏற்காதது ஏன் என்ற உண்மையை பதிவு செய்ய வேண்டாம் என்று சோனியா கேட்டுக் கொண்டார். மேலும் என்னை நீங்கள் எனக்கு நெருங்கிய நண்பர்; ராகுல் மற்றும் பிரியங்காவிடம் சொல்லாத விஷயங்களைக் கூட உங்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளேன் என்றார்.

உண்மை என்ன?

அதாவது 2004ஆம் ஆண்டு மே 18-ந் தேதியன்று மன்மோகன்சிங், சுமன் துபே ஆகியோருடன் நானும் இருந்தேன். அப்போது அங்கு வந்த பிரியங்கா காந்தி, சோனியா காந்தி பிரதமர் பதவி ஏற்பதை ராகுல் விரும்பவில்லை என்று கூறினார்.

தனது பாட்டி இந்திரா, தந்தை ராஜீவ் போல தாய் சோனியாவும் பதவியேற்றால் படுகொலை செய்யப்பட்டுவிடுவாரோ என்ற அச்சம் ராகுல் காந்திக்கு இருப்பதாகவும் பிரியங்கா கூறினார்.

கெடு விதித்த ராகுல்

இதற்காக ஒரு மகன் என்ற முறையில் எப்படியும் சோனியா பிரதமர் பதவியை ஒப்புக் கொள்வதை தடுப்பேன் என்று கூறியதுடன் பிரதமர் பதவியை ஏற்க முடியாது என்று அறிவிக்க 24 மணி நேர கெடுவையும் பகிரங்கமாகவே ராகுல் விதித்திருந்தார்.

இந்த உண்மையைத்தான் தமது சுயசரிதை புத்தகத்தில் இடம்பெற வேண்டாம் என்று சோனியா கடந்த மே மாதம் என்னை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டார்.

லாலு, பாஸ்வான் அதிருப்தி

சோனியா பிரதமர் பதவி ஏற்க மறுத்ததை கேட்டு அப்போதைய கூட்டணிக் கட்சித் தலைவர்களான லாலு பிரசாத் மற்றும் ராம்விலாஸ் கடும் அதிருப்தி அடைந்தனர். பின்னர் அவர்கள் சமாதானப்படுத்தப்பட்டனர்.

மன்னிப்பு கேட்ட சோனியா

மேலும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நான் பழிவாங்கப்பட்டதற்கு சோனியா மன்னிப்பும் கோரினார். தமக்கு தெரியாமல் எல்லாம் நடந்தது என்றும் கூறினார். ஆனால் காங்கிரஸில் அவருடைய ஒப்புதல் இல்லாமல் எதுவுமே நடக்காது என்பதை நன்றாக நான் அறிவேன். அதனால் அவர் கூறியதை ஏற்றுக் கொள்ளவில்லை.

பிரதமர் அலுவலக கோப்புகள் பார்த்தார்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் ஊடக ஆலோசகர் சஞ்சய் பாரு கூறியதைப் போல, பிரதமர் அலுவலக கோப்புகள் சோனியா வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பிரதமர் அலுவலக கோப்புகளை புலோக் சட்டர்ஜி என்பவர்தான் சோனியா வீட்டுக்கு கொண்டு செல்வார். சோனியா மிக உயர்ந்த தலைவர் என்பதால் இப்படி செய்வதாக கூறினார்கள்.

சங்கர்தயாள் சர்மாதான் சாய்ஸ்

1991ஆம் ஆண்டு ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அப்போதைய துணை ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவைத்தான் சோனியா பிரதமராக்க விரும்பினார். இதற்கான நானும் சங்கர்தயாள் சர்மாவிடம் தூது சென்றேன். ஆனால் சங்கர் தயாள் சர்மா தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு பிரதமர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். அவர் பின்னாளில் ஜனாதிபதியானார்.

Exit mobile version