கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில், திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணி 3வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், சிறுவனின் தந்தை ஹனுமந்தகட்டியோ, மீட்பு பணியை முடித்துவிடும்படி கூறியுள்ளார்.

அதற்கு அவர் கூறிய காரணம்தான் கண்ணில் நீர் வரவழைப்பதாக உள்ளது. பாகல் கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா சூலிகேரி கிராமத்தை சேர்ந்தவர் ஹனுமந்தகட்டி. இவருக்கு ஒரு திம்மண்ணா என்ற 6 வயது மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (நேற்றுமுன்தினம்) மதியம் ஹனுமந்தகட்டிக்கு சொந்தமான கரும்பு தோட்டத்திற்கு உறவுக்கார சிறுவனை அழைத்துச் சென்றான் திம்மண்ணா. அங்கு சுமார் 300 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு சாக்குப்பையால் மூடப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றின் வாய்பகுதியை திறந்து பார்த்துள்ளான் திம்மண்ணா. அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

தகவல் அறிந்ததும், தேசிய பேரிடர் மேலாண்மை குழு தலைமையிலான மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையை தொடங்கினர். இதற்காக போர்வெல் அருகே பெரிய பள்ளம் பொக்லைன் உதவியால் தோண்டப்பட்டுவருகிறது. இதுவரை சுமார் 100 அடி ஆழத்துக்கு பொக்லைன் தோண்டியுள்ளது. 3வது நாளாக மீட்பு பணி நடைபெற்றுவரும் நிலையில், மாநிலமெங்கும் சிறுவன் பிழைத்துவர சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கின்றன.

ஆனால் சிறுவனின் தந்தை ஹனுமந்தகட்டியோ, மீட்பு பணியை கைவிடுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கைவிடுத்துள்ளார். இக்கோரிக்கை குறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: விவசாயத்துக்கு தண்ணீர் இன்றி தவிப்பதால் போர்வெல் தோண்ட முடிவு செய்தேன். ஏற்கனவே ஒரு போர்வெல் தோண்டி தண்ணீர் வராததால், மீண்டும் ஒரு ஆழ்துளை கிணறு தோண்டினேன்.

இவ்வாறு எனது கரும்பு தோட்டத்தின் மூன்று இடங்களில் தோண்டியதால் ரூ.10 லட்சத்துக்கும் மேல் செலவானது. கடன் வாங்கிதான் போர்வெல் தோண்டினேன். ஆனால் தண்ணீர் வராமல் கண்ணீர்தான் வந்தது. இந்த நிலையில்,

திம்மண்ணாவை மீட்கும் போராட்டத்தில், எனது நிலத்தை குழிதோண்டி பாழ்படுத்திவருகிறார்கள். நான் ஏற்கனவே பட்ட நஷ்டமும், கஷ்டமும் போதும். இனிமேலும் தாங்கும் சக்தி எனக்கு இல்லை. எனவே குழி தோண்டி திம்மண்ணாவை மீட்க வேண்டாம்.

தேவைப்பட்டால் ரோபோ மூலமாக போர்வெல்லுக்குள் கயிறு கட்டி முயற்சி செய்து பார்க்கட்டும். எனக்கும் இன்னும் 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது மீட்பு பணிகளை நிறுத்த வேண்டும் என்றார் கண்ணீர் பொங்க.

Share.
Leave A Reply