யாழ்ப்பாணம் இருபாலை கிழக்கு வி.எச் வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருமகனால் இரும்பில் தாக்கப்பட்ட மாமனாரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் தந்தை கிணற்றில் விழுந்தே உயிரிழந்ததாக அவரது மகள் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இருபாலை பகுதியில் மகளின் வீட்டுக்குச் சென்ற தந்தை மருமகனை தாக்கிவிட்டுச் சென்றுள்ளார். ஆத்திரமடைந்த மருமகன்- மாமனாரை அவரது வீட்டுக்குத் தேடிச் சென்று இரும்பினால் தாக்கியதாகவும் அதன்போது அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த 45 வயதான நன்னியர்குணம் என்பவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணை நடத்தியபோது தந்தை கிணற்றில் விழுந்தே உயிரிழந்ததாக அவரது மகள் தெரிவித்துள்ளார். எனினும் மகளின் கணவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.