கத்தாரில் இருந்து 282 பேருடன் இங்கிலாந்து சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக சக பயணி ஒருவரே பீதியை கிளப்பிவிட இங்கிலாந்தின் போர் விமானத்தின் பாதுகாப்புடன் அந்த விமானம் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது.

கத்தாரின் தோஹாவில் இருந்து 269 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் கத்தார் ஏர்வேஸுக்கு சொந்தமான விமானம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு நேற்று புறப்பட்டது. விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது பயணிகளில் ஒருவர் பணியாளரை அழைத்து ஒரு துண்டு தாளை விமானியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். அதைப் பார்த்த விமானி அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

வெடிகுண்டு பீதி

கிளப்பிய பயணி.. இங்கிலாந்து போர் விமான பாதுகாப்புடன் தரை இறங்கிய கத்தார் விமானம்!! பீதி கிளப்பிய பயணி பயணி கொடுத்த துண்டு தாளில் ‘விமானத்தில் வெடிகுண்டு’ இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தகவல் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் விமான நிலைய அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம், கத்தார் பயணிகள் விமானத்துக்கு பாதுகாப்பாக பறக்க உத்தரவிடப்பட்டது.

அப்போது மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதற்கும் இறங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர் கத்தார் பயணிகள் விமானம் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது.

அந்த விமானத்தை அதிரடிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். விமானத்தில் தீவிரமாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பீதி கிளப்பிய பயணியை அதிரடிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மான்செஸ்டர் போலீஸ் அதிகாரி ஜான் ஓ ஹரே கூறுகையில், இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியைச் சேர்ந்த 47 வயது மதிக்கத்தக்க நபர்தான் கைது செய்யப்பட்டுள்ளார். விமானம் முழுமையாக சோதனையிடப்பட்டது. சந்தேகத்துக்குரிய எந்த ஒரு பொருளும் கிடைக்கவில்லை என்றார்.

Share.
Leave A Reply