வயதாக ஆக ஆக மரண பயம் வருவது இயற்கை. பொதுவாக 50 வயதைத் தாண்டும்போது அது வரும். பலருக்கு அதற்கு முன்பாக வரும். சிலருக்கு கடைசி வரை மரண பயமே இருக்காது.
ஆனால் இந்த சின்னஞ் சிறு சிறுமி தனது தம்பிக்கு வயதாகி விடுமே என்று பயத்தில் அழும் காட்சி தற்போது இன்டர்நெட்டில் வைரலாக மாறி பரவிக் கொண்டிருக்கிறது.
இந்த சிறுமிக்கு வயது 5தான். பெயர் சேடி மில்லர். இவள் தனது தம்பியை நினைத்து தேம்பித் தேம்பி அழும் காட்சி பார்க்கவே உருக்கமாக இருக்கிறது. அதேசமயம், தம்பி மீது இவள் வைத்துள்ள பாசம் நெகிழ வைக்கிறது.
ஆனால் அக்கா ஏன் அழுகிறாள் என்று தெரியாமல், புரியாமல், அவளது அழுகையை பார்த்து ரசித்தபடி, ஸ்டைலாக சிரித்தபடி உட்கார்ந்திருக்கும் அந்தக் குட்டிப் பையன் மனதை அப்படியே அள்ளுகிறான்.
சேடி மில்லர் தனக்குப் பக்கத்தில் இருக்கும் தம்பியைப் பார்த்தபடி, இவன் ரொம்ப அழகா இருக்கானே.. இவன் வளரக் கூடாது. எனக்கு 100 வயசாகும்போது இவன் என்னிடம் இல்லாமல் போனால் அதை என்னால் தாங்க முடியாதே.. இவன் வளர வேண்டாம் என்று கூறிக் கூறி அழுகிறாள்.
இந்த காட்சி இப்போது யூடியூபில் உலா வந்து கொண்டுள்ளது. இதை இதுவரை 2 கோடியே 12 லட்சத்து 90 ஆயிரத்து 902 பேர் பார்த்துள்ளனர். 1 லட்சத்து 17 ஆயிரத்து 255 பேர் லைக் கொடுத்துள்ளனர். அதேசமயம், இது பிடிக்கவில்லை என்று 6870 பேர் கூறியுள்ளனர்.
ஆனால் சிறு குழந்தைகளிடம் இப்படிப்பட்ட எண்ணங்கள் வருவது சகஜம்தான் என்று உளவியாளர் கிளேர் ரோ கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் மத்தியில் இப்படிப்பட்ட எண்ணங்கள் வருவது இயற்கைதான்.
இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு தங்களது தம்பியோ, தங்கையோ தங்களை விட்டுப் பிரிந்து விடுவார்களோ என்ற பயம் வரும். அவர்கள் வளராமல் அப்படியே இருந்தால் நன்றாக இருக்குமே என்றும் நினைப்பார்கள். தாங்களும் கூட வளராமல் அப்படியே இருக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள்.
இப்படிப்பட்ட அதீத எண்ணங்களுக்கு சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு ஐ க்யூ அதிகம் இருப்பதுதான் காரணம். அதாவது மரணம் என்றால் என்ன என்பதை அவர்கள் உணர முடியும். அதேசமயம், அந்த எண்ணத்திலிருந்து விடுபடத் தெரியாது. எனவேதான் இப்படி அழுகிறார்கள் என்றார் ரோ.
இந்தப் பிரச்சினையிலிருந்து அவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து ரோ கூறுகையில், இப்படிப்பட்ட குழந்தைகளிடம் பெற்றோர் கூடுதல் அக்கறையும், அன்பையும் காட்ட வேண்டும். அவர்களுக்குப் பொருத்தமான விஷயங்கள் பக்கம் கவனத்தைத் திருப்ப வேண்டும். இதுபோன்ற விஷயங்களை அவர்களிடம் அடிக்கடி பேசி அவர்களை ஊக்குவிக்கக் கூடாது என்கிறார் ரோ.