யுத்த நிறுத்த அறிவிப்புடன் காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறிய நிலையில் நம்பிக்கை இல்லாத ஒரு இயல்பு வாழ்க்கை மெல்ல தலைதூக்கிக் கொண்டிருக்கிறது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த 28 நாட்களாக வெறியாட்டம் போட்டது. இஸ்ரேல் தரை மற்றும் வான்வழியாக நடத்திய தாக்குதலில் 1,900 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். சுமார் 8 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர்
மொத்தமாக சுமார் 2 லட்சம் அப்பாவி பொதுமக்கள் சொந்த வாழ்விடங்களை விட்டு வெளியேறி அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர். இந்த நிலையில் எகிப்தின் முன் முயற்சியில் இஸ்ரேல் மற்றும் காஸாவை ஆட்சி செய்யும் ஹமாஸ் இயக்கம் இடையே 72 மணி நேர யுத்த நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.
அத்துடன் காஸா பகுதியில் முகாமிட்டிருந்த இஸ்ரேலிய படைகள் அனைத்தும் உடனே விலக்கிக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எப்போது வேண்டுமானாலும் எந்த திசையில் இருந்தும் குண்டுகள் வீழ்ந்து வெடிக்கலாம் என்ற அச்சத்துடன் தங்களது இயல்பு வாழ்க்கையை மெல்ல தொடங்கி இருக்கின்றனர் காஸாவாசிகள்.
இப்போது மயான அமைதியோடு காஸா தெருமுனைகளில் மக்கள் சற்றே நம்பிக்கையோடு நடமாடுகின்றனர்.. கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டங்களைக் காண முடிகிறது..
அகதிகள் முகாம்களில் இருந்தவர் நிர்மூலமாகிப் போன வீடுகளை வந்து பார்த்து செல்கின்றனர். வீடுகளில் அழிந்துபோகாத பொருட்களை அள்ளிக் கொண்டு அகதிகள் முகாம்களுக்கு மீண்டும் திரும்பிச் செல்வோர் எண்ணிக்கைதான் அதிகம்.
அதே நேரத்தில், என்ன பெரிய அமைதி? எது அமைதி? வீடு இல்லை, குடிக்க குடிநீர் இல்லை.. மின்சாரம் இல்லை.. இதுதான் அமைதி வாழ்க்கையா? என்ற குமுறல்தான் காஸாவாசிகளின் ஒருமித்த குரலாக இருக்கிறது.
தற்போதைய 72 மணி நேரம் முடிவடைந்த பின்னர் நீண்டகால யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினால் மட்டுமே காஸாவாசிகளிடத்தில் இயல்பு வாழ்க்கை முழுமையாக திரும்பும் என்பதே நிதர்சனம்.