உக்ரேன் யுத்தத்தில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினர் போர் விமானம் ஒன்றை சுட்டு விழு்த்தியுள்ளனர். உக்ரேன் விமானப்படையின் மிக்-29 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு உபயோகிக்கப்பட்ட ஏவுகணை, உக்ரேன் பகுதியில் சமீபத்தில் மலேசியா ஏர்லைன்ஸின் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்திய அதே ரக ஏவுகணை என்பது, இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
நேற்று (வியாழக்கிழமை) மாலை, யெனகிவோ நகரில் இருந்து வட-கிழக்கே 25 மைல் தொலைவில் பறந்துகொண்டிருந்த உக்ரேன் விமானப்படை விமானமே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை, உக்ரேன் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் விளாடிஸ்லவ் செலனோய்வ் இன்று அதிகாலை உறுதி செய்துள்ளார்.
தற்போது கிடைத்துள்ள ஆரம்ப கட்ட தகவல்களின் அடிப்படையில், கிளர்ச்சிப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள யெனகிவோ நகருக்கு அருகேயுள்ள ஏதோ ஒரு இடத்தில் இருந்துதான், ரஷ்ய தயாரிப்பு தரையில்-இருந்து-வானுக்கு ஏவப்படும் விமான எதிர்ப்பு சிஸ்டத்தில் (surface-to-air antiaircraft system) இருந்து ஏவுகணை புறப்பட்டு சென்று, மிக்-29 விமானத்தை வீழ்த்தியுள்ளது.
விமானத்தை வீழ்த்த உபயோகிக்கப்பட்டது, Buk என அழைக்கப்படும் SA-11 ரக ஏவுகணை என்றே, உக்ரேன் ராணுவ செய்தித் தொடர்பாளர் அழுத்தம் திருத்தமாக சொல்கிறார்.
உக்ரேன் ராணுவத்தை பொறுத்தவரை, தமது விமானம் வீழ்த்தப்பட்டதைவிட, அது, SA-11 ரக ஏவுகணையால் வீழ்த்தப்பட்டது என்ற விஷயம் முக்கியமாகது. காரணம், மலேசிய பயணிகள் விமானமும் இதே ரக ஏவுகணையால் வீழ்த்தப்பட்டது என்பதே தற்போதுள்ள தியரி.
இதனால், அதையும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினரே சுட்டு வீழ்த்தினார்கள் என்பதை நிரூபிக்க இந்த சம்பவம் உதவும்.
மலேசிய விமானத்தை தாம் சுடவில்லை என்றே, கிளர்ச்சிப் படையினர் இதுவரை சொல்லிவருகின்றனர். இனியும் அதையே சொல்ல முடியுமா தெரியவில்லை.