இலங்கையில் இறுதி யுத்தம் தொடங்கி நடந்துகொண்டிருந்த நிலையில், 2007-ம் ஆண்டு ஆரம்பத்தில் இலங்கை ராணுவ உளவுத்துறை புதிதாக ஒரு தகவலைப் பெற்றது. விடுதலைப்புலிகள் இயக்கம் தனது ஆயுதக் கொள்வனவுக்காக ஏற்படுத்தியிருந்த தொடர்பு பற்றியது அந்தத் தகவல்.
இந்த தகவல் இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்தது – காரணம் விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்திருந்த அந்த தொடர்பு, வட கொரியாவில் இருந்த ஒரு ஆயுத வியாபாரி.
விடுதலைப் புலிகள் இயக்கம், இலங்கை ராணுவத்தின் மீதான பெரிய தாக்குதல் ஒன்றை 2007-ம் ஆண்டு ஜனவரியில் செய்வதற்கான முன்னேற்பாடுகளை செய்திருந்ததாக ஏற்கனவே ராணுவ உளவுத்துறை இலங்கை அரசுக்கு உளவு அறிக்கை ஒன்றைக் கொடுத்திருந்தது.
வன்னியின் சில பகுதிகளில் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றதாகவும், வெவ்வேறு பகுதிகளில் இருந்து விடுதலைப்புலி படையணிகள் வன்னியில் ஒரு இடத்துக்கு கொண்டுவரப்பட்டு, தயார் நிலையில் உள்ளார்கள் என்றும் அந்த உளவு அறிக்கை கூறியது.
ஆனால் எதிர்பார்த்தபடி பெரிய ராணுவ தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை.