விமல், ப்ரியா ஆனந்த், சூரி, விசாகா சிங் நடிப்பில் கண்ணன் இயக்கி வரும் படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது.
கௌதம் கார்த்திக், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஶ்ரீகாந்த், விஷ்ணு, இனியா, சுசீந்திரன், எஸ்.ஆர்.பிரபாகரன், மனோபாலா போன்ற பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மேடையில், ப்ரியா ஆனந்த் பேசும் போது , ”எனக்கு இமான் சாரின் கன்னத்தைக் கிள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது” என்று சொன்னார். இமான் கொஞ்சம் அதிர்ச்சியாகப் பார்த்தார்.
சற்றும் தாமதிக்காத ப்ரியா ஆனந்த் என் செல்லக்குட்டி, புஜ்ஜிக்குட்டி என்று கொஞ்சியபடி மிமான் கன்னத்தை லேசாகக் கிள்ளினார். இதை வெட்கமும், சிரிப்புமுமாக ஏற்றுக்கொண்டார் இமான்.
கொடுமை நீங்க வேண்டும்”:சினிமாவில் செல்லுபடியாகுமா குழந்தைத் தொழிலாளர் சட்டம்?
சினிமாவில் 18 வயதுக்குக் குறைவான பெண்களைக் கதாநாயகிகளாக நடிக்க வைப்பதற்குத் தடை கேட்டு, தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை கடந்த 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனாலும், அந்த மனு உன்னிப்பாக கவனிக்க வேண்டியதே!
மனு தாக்கல் செய்த தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளரும் ஆசிரியருமான முத்துச்செல்வி என்ன சொல்கிறார்?
”குடும்பம், பள்ளி, கல்லூரிகள், பணிபுரியும் இடங்கள் என்று பெண்கள் பல இடங்களில், பல நேரங்களில் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிக்கொண்டுதான் வருகிறார்கள். இதை எல்லாம் தாண்டி, சினிமாவில்தான் பெண்கள் மிக அதிகமான பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
அதுவும் இளவயது சிறுமிகள், மாணவிகள் அதிகமான தொந்தரவுக்கு இலக்கு ஆகிறார்கள். இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்தும், அமைதியாகவே இருக்கிறோம். காவல் துறையும் நீதிமன்றமும் இதுவரை அமைதியாகத்தான் இருந்து வருகிறது.
அப்படியானால், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அச்சுறுத்தல்கள் இல்லையா என்ற கேள்வி எழலாம். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், தங்கள் வாழ்வில் தங்களைக் காத்துக்கொள்ள ஓரளவான அறிவு முதிர்ச்சியுடனாவது இருப்பார்கள்.
ஆனால், 18 வயதுக்குக் குறைவான நடிகைகளோ சினிமா என்ற மாய வலையில் சிக்கி, சினிமாவின் ஏற்ற இறக்கங்கள் தெரியாமல், மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பின்னர், உறவுகளாலும் துறையில் பணிபுரிபவர்களாலும் ஏமாற்றப்படுகின்றனர். இது அவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் வருந்தக்கூடிய விஷயம். அந்த வயதை மீறிய கதாபாத்திரங்களில் கவர்ச்சியாகக் காட்டப்படுகின்றனர்.
அவர்களின் எதிர்கால வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடுகிறது. இதனால்தான், 21 வயதுக்கு மேலான பெண்களைத்தான் நடிகையாக நடிக்க வைக்க வேண்டும் என்ற அறிக்கையை மத்திய அரசு, திரைப்பட தணிக்கைக் குழு, தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியவற்றுக்கு அனுப்பினோம்.
ஆனால், கடைசி வரை எவ்வித பதிலும் அவர்கள் தரவில்லை என்பதால்தான் நீதிமன்றம் சென்றோம்.
சமூகத்தில் 18 வயதுக்குக் குறைவானவர்கள் பணியில் அமர்த்தப் பட்டால், குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம் மூலம் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால், இந்தச் சட்டம் அல்லது இப்படியான ஒரு சட்டம்கூட சினிமாவுக்குப் பொருந்தவில்லையே!
இதனால்தான் முழுவதும் வணிகமான சினிமாவை, கலை என்று சொல்லி பலர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
18 வயதுக்குக் குறைவான நடிகைகளை ஒப்பந்தம் செய்வதைத் தடுக்க, சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள், தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும்.
ஏனென்றால் வெகுஜன ஊடகமான சினிமாதான் சமூகத்துக்கு நற்கருத்துகளை சொல்லிட வேண்டும். வயது குறைவான நடிகைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களும் இந்த விஷயங்களைக் கவனத்தில் கொள்ளாமல், தங்கள் பள்ளிக்குக் கிடைத்த அங்கீகார விளம்பரமாகவே பார்க்கின்றன.
அவர்களின் பெற்றோர்களும் மெத்தனமாகவே இருக்கின்றனர்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஆகியோர் ‘திரைத் துறையில் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் நடிப்பதற்குத் தடை செய்வதற்குச் சட்டத்தில் இடம் இல்லை’ என்று வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர்.
அரசியல் சாசனத்தில் இதற்கு இடம் இல்லை என்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும், இதற்கான தனிச்சட்டத்தை இயற்றும் வரை பொதுமக்களிடம் இதுகுறித்தான விழிப்பு உணர்வுகளை பல களங்களில், பொதுக்கூட்டங்களில், சமூக வலைதளங்களில் தெரியப்படுத்திக்கொண்டே இருப்போம்” என்றார் உறுதியாக.
சில சமூக ஆர்வலர்களோ, ”இயக்குநர் மணிரத்னம் தனது ‘கடல்’ திரைப்படத்தில் நடிகை துளசியை அறிமுகப்படுத்தினார்.
இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது ‘கோ’ திரைப்படத்தின் மூலம் கார்த்திகாவை அறிமுகப்படுத்தினார். நடிகை ராதாவின் மகள்களான துளசியும் கார்த்திகாவும் 18 வயதுக்குள் நடிக்க வந்தவர்களே.
‘கும்கி’, ‘சுந்தரபாண்டியன்’ என்று ஆரம்பித்து இப்போது நட்சத்திர கதாநாயகர்களுடன் நடித்து வரும் லட்சுமிமேனன், ‘காதல்’ திரைப்படம் மூலம் கவனம் பெற்ற சந்தியா, ‘களவாணி’ படம் மூலம் அறிமுகமான ஓவியா, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஸ்ரீதிவ்யா என்று அனைவருமே 18 வயதுக்குள் நடிக்க வந்தவர்கள்தான்.
அதோடு, பள்ளி மாணவிகளைக் காதலிப்பதாகவே ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின்றன. ஹரி இயக்கத்தில் வெளிவந்த ‘சிங்கம் 2’ திரைப்படத்தில் பள்ளி மாணவியான ஹன்சிகா, உடற்கல்வி ஆசிரியரைக் காதலிப்பதாக வரும் காட்சிகள், பள்ளி வளாகத்திலேயே காட்டப்படுகின்றன.
இந்த மாதிரியான பள்ளிச் சீருடை காதல் திரைப்படங்கள்தான் அதிக வரவேற்பைப் பெறுகின்றன. இதைப் பள்ளி மாணவ, மாணவிகளும் தங்கள் சொந்த யதார்த்த வாழ்வில் பரிசோதித்துப் பார்த்து பதராகப் போகின்றனர்.
திரைப்படங்களில் கதாநாயகர்கள் வயது அதிகமாகத் தோற்றமளித்தாலும், நாயகிகள் பள்ளி படிக்கும் பருவங்களிலேயே அவர்களிடம் காதல் வயப்பட்டாக வேண்டும் என்ற நியதியினை வகுத்துள்ளனர்.
மேற்கண்ட திரைப்படங்களில் பல படங்கள் தமிழ் சினிமாவுக்கு மைல் கல்லாகவும், சமூகத்திடம் கவனம் பெற்றதாக இருந்தாலும், பெரும்பாலானோர் சினிமாவில் இருந்து நேர்மறையான விஷயங்களை எடுத்துக்கொள்ள தவறிவிடுகிறோம்” என்றனர்.
தமிழ் சினிமாவுக்கு அடையாளமாகத் திகழும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், கலைஞர்கள், சமூகம் ஒழுங்குபடுவதற்கான நல்லெண்ணங்களைக் காட்சிப்படுத்தி, விதைக்க மறந்தால் சமூகம் நாளடைவில் இன்னும் ஆற்றமுடியாத காயத்தைப் பெறும்.
– கு.முத்துராஜா
‘எங்களுக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது!’
இந்த விவகாரத்தை சினிமா துறையினர் எப்படிப் பார்க்கிறார்கள்? இயக்குநர் சமுத்திரக்கனியிடம் பேசினோம். ”ஒரு படத்துக்கு என்ன வயதுடைய கேரக்டர் தேவைப்படுகிறதோ அந்த வயதுடையவர்களைத்தான் காட்ட முடியும்.
ஒரு படத்தின் கதையைப் பொறுத்தே வயதை தீர்மானிக்க முடியும். உதாரணத்துக்கு, பிறந்த குழந்தையைக் காட்ட வேண்டும் என்றால் குழந்தையைத்தான் காட்ட வேண்டும். அதற்கு 21 வயது பெண்ணையா காட்ட முடியும்?
வயது முதிர்ந்த கேரக்டர் என்றால் அந்த வயதில் இருப்பவரைத்தான் காட்ட முடியும். ஏற்கெனவே சினிமாவில் ப்ளூ கிராஸ் தலையிட்டு படத்தில் ஒரு நாய் குறுக்கே ஓடுவதைக் காட்டினால்கூட அதற்குச் சான்றிதழ் வாங்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.
அதனால் தற்போது சினிமாவில் ஒரிஜினல் விலங்குகளைப் பெரும்பாலும் காட்டுவதில்லை. இந்தச் சூழ்நிலையில் கதாநாயகிகளையும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களைத்தான் காட்ட வேண்டும் என்ற தடை வந்துவிட்டால் சினிமா இயக்குவதே கேள்விக்குறியாகி விடும்.
என்னுடைய அடுத்த படத்தில் 13 முதல் 46 வயதுடைய ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்துதான் கதை உருவாக்கியிருக்கிறேன். 18 வயதுக்கு மேல்தான் பெண்களை நடிக்க வைக்க வேண்டும் என்றால் நான் 13 வயதுடைய பெண்ணை எப்படி காட்ட முடியும்?
அதே நேரத்தில் இளம்பெண்களை சிலர் தரம் தாழ்ந்து திரையில் காட்டுவதால்தான் இந்தப் பிரச்னை வருகிறது. நான் இதில் இருந்து மாறுபடுகிறேன். இளம்பெண்களை கவர்ச்சிக்காகப் பயன்படுத்துவதை நானும் ஏற்க மாட்டேன்.
இயக்குநர்களுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. நடிகைகளை நம் வீட்டில் இருக்கும் பெண்களில் ஒருவராக நினைக்க வேண்டும்” என்று நிதானமாகச் சொன்னார்.
– வீ.கே.ரமேஷ்