தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணம், அரசாங்கத்துக்கு கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கிறது. அரச தரப்பிலிருந்து வெளியிடப்படும் கருத்துக்களிலிருந்து இதனை புரிந்துகொள்ள முடிகிறது.
இலங்கை இராணுவம் நடத்திய பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்க கொழும்பு வந்திருந்த பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, இலங்கை அரசாங்கம் அனுமதித்தால் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பார் என்று கூறி, அரசாங்கத்துக்கு உற்சாகத்தை ஊட்டிவிட்டிருந்தார். அந்த அற்ப சந்தோசம் சில நாட்களில் பொசுங்கிப்போனது.
சுப்ரமணியன் சுவாமி இதைக் கூறிய 02 நாட்களில் 06 பேரைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இரா.சம்பந்தன் தலைமையில் புதுடெல்லி சென்றது.
02 நாட்கள் அங்கு இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்கள், அதிகாரிகளுடன் தொடர் சந்திப்புக்களில் பங்கேற்றதானது இலங்கை அரசாங்கத்தின் நாடி நரம்புகளைத் தளரச் செய்துவிட்டது என்றே கூறவேண்டும்.
சுப்ரமணியன் சுவாமியின் பேச்சை நம்பிய அரசாங்கத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தப் பயணம் முகத்தில் கரி பூசியது போல அமைந்துவிட்டது.
சாதாரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருந்தால், இந்தளவுக்கு கூனிக்குறுக வேண்டியிருந்திருக்காது.
சுப்ரமணியன் சுவாமி இவ்வாறு கூறியதன் பின்னரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புதுடெல்லி அழைப்பு விடுத்து, அவர்கள் அங்கு சென்றதுதான் அவமானத்திலும் அவமானம். இது சுப்ரமணியன் சுவாமிக்கு ஏற்பட்ட அவமானம் என்று கூறுவதை விட, அவரை அழைத்து, இத்தகைய கருத்தை வெளியிட வைத்த அரசாங்கத்துக்கு ஏற்பட்ட அவமானம் என்றே கூறவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக புதுடெல்லியின் கதவுகள் திறப்பதற்கு சற்றுக் காலதாமதம் ஏற்பட்டபோதிலும், இலங்கை அரசாங்கத்துக்கு கிடைக்காத பல சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு புதுடெல்லியில் கிடைத்துள்ளன என்பதில் சந்தேகமடைய வேண்டியதில்லை.
கடந்த மே மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்தார். அப்போது வெறும் 20 நிமிடங்கள் மட்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தியிருந்தார்.
அதுவும் மரியாதை நிமிர்த்தமான சந்திப்பாகும். ஏனைய சார்க் தலைவர்களை சந்தித்தது போலவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் சந்தித்திருந்தார்.
அதற்கு பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை எந்தவொரு இலங்கை அரசுப் பிரதிநிதியும் சந்திக்கவுமில்லை, பேச்சு நடத்தவுமில்லை.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அண்மையில் புதுடெல்லிக்குச் சென்றபோதும், அவரையும் கூட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவில்லை.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரபூர்வமாக அவர் சந்தித்துப் பேசியுள்ளார். 30 நிமிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்ட சந்திப்பு ஒருமணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்திருக்கிறது. இதன்போது, எல்லா விபரங்களையும் பொறுமையாக கேட்டறிந்துகொண்டிருக்கிறார் நரேந்திர மோடி.
இந்திய நாட்டின் பிரதமர் ஒருமணி நேரத்தைச் செலவிட்டு, இலங்கைத் தமிழரின் பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிந்திருக்கிறார் என்பது சாதாரணமான விடயமல்ல.
அதுபோலவே இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவல், வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அதிலும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இலங்கையைச் சேர்ந்த எந்தவொரு தரப்பையும் இதுவரை சந்தித்திராத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியானது மத்திய அமைச்சர் பதவிக்கு நிகரானது. அத்தகைய பதவியை வகிக்கும் அஜித் டோவல், எதிர்வரும் நவம்பர் மாதம் தான், கொழும்பு வரவுள்ளதாகத் தெரிகிறது. இலங்கை அரசுடன் பேசுவதற்கு முன்னதாகவே, அஜித் டோவல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துள்ளமை முக்கியமானது.
நரேந்திர மோடி அரசாங்கம், இலங்கை அரசுக்கு அளித்துள்ள முக்கியத்துவத்துக்கு ஈடாக அல்லது சற்று அதிகமாகவே கூட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது போலுள்ளது. அதற்காக, இந்திய அரசாங்கம் முற்றிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் நிற்கிறது என்றோ, இலங்கை அரசுடன் முட்டி மோதப் போகிறது என்றோ அர்த்தமில்லை. அவ்வாறு அர்த்தம் கொள்ள முனைந்தால், அது தவறான விளைவுகளையே தரும்.
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற 03 மாதங்களுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அழைத்து விரிவாக பேசுமளவுக்கு இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்திய அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளதென்பதை உணர்ந்துகொள்ளலாம். அதற்காக மிகையான எதிர்பார்ப்புகளை தமிழர் தரப்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புதுடெல்லி நடத்தியுள்ள பேச்சுக்கள் இலங்கை அரசாங்கத்தை சினமடையச் செய்துள்ளபோதிலும், அதனையும் கூட பெரியளவில் வெளிப்படுத்தமுடியாத நிலையே காணப்படுகிறது.
தனது கையை மீறி கூட்டமைப்பு புதுடெல்லி சென்றுவிட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சினந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்நிலையை உருவாக்கியது யார் என்பதை அரசாங்கம் மறந்துவிட்டது.
இந்தியாவிடமும் சர்வதேச சமூகத்திடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக பேசி பிரச்சினைகளை முன்வைக்குமளவுக்கு நிலைமையை கொண்டுசென்றது அரசாங்கமே என்று ஐக்கிய தேசியக் கட்சியும் கூட விமர்சித்துள்ளது.
என்றாலும், அரசாங்கத்திலுள்ள கடும்போக்கு கட்சிகளுக்கும் சரி, அதற்கு வெளியேயுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற கட்சிகளுக்கும் சரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்தியா நடத்திய பேச்சுக்களை சகித்துக்கொள்ள முடியவில்லை. அவை வெளிப்படையாகவே எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
அது மட்டுமன்றி, அரசாங்கத்தின் அனுமதியின்றி இந்தியாவுக்குச் சென்று பேச்சு நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டுமென்றும் குரல்கள் எழுகின்றன.
கூட்டணிக் கட்சிகளின் பேச்சைக் கேட்டு அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைக்க முடிவெடுத்தால், அதைப் போன்றதொரு முட்டாள்தனமான செயல் வேறேதும் இருக்கமுடியாது.
1983ஆம் ஆண்டு தமிழர்கள் மீது ஏவிவிடப்பட்ட இனக்கலவரம் எத்தகைய விளைவை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியதோ, அதுபோன்றதொரு நிலையையே இதுவும் உருவாக்கும்.
இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரிலேயே தமிழ்த் தேசியக் கூட்டைமைப்புத் தலைவர்கள் புதுடெல்லி சென்று பேச்சு நடத்தினர். அவ்வாறு சென்றவர்களை கைதுசெய்தால் அது இந்தியாவை நேரடியாகவே அவமதித்த செயலாக, இந்தியாவுக்கு சவால் விடும் செயலாக அமையும். எனவே, அந்தவொரு தவறை அரசாங்கம் ஒருபோதும் செய்யத் துணியாது.
அதுபோலவே இந்த விவகாரத்துக்காக இந்தியாவுக்கு எதிர்ப்பு வெளியிடப்போவதாக செய்திகள் வெளியானாலும், அதனையும் அரசாங்கம் அவ்வளவு இலகுவாக செய்யாது. ஏனென்றால், அவ்வாறு இந்தியாவின் நகர்வை எதிர்க்க முனைவது இலங்கையை மேலும் சிக்கலுக்குள் மாட்டிவிடும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அணுகுமுறை என்னவென்று இன்னமும் எவராலும் சரியாக ஊகிக்கமுடியாதுள்ளது. ஏனென்றால், ஆரம்பத்தில் நரேந்திர மோடியின் வருகையை தமிழர் தரப்பு சாதகமாக பார்த்தது.
அவரது பதவியேற்பு விழாவின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் 13ஆவது திருத்தச்சட்டத்தை வலியுறுத்தியபோதும், சாதகத்தன்மையுடன் தமிழர் தரப்பினால் நோக்கப்பட்டது. எனினும், பா.ஜ.க.வின் சில தரப்பினர் வெளியிட்ட கருத்துகள் இலங்கை அரசுக்கு சார்பான நிலையை இந்தியா எடுக்குமா என்ற சந்தேகத்தை எற்படுத்தியது.
இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்கு பின்னர், தமிழர் தரப்பின் நியாயங்களை இந்தியா புரிந்துகொண்டு செயற்படுவது போன்ற கருத்துக் காணப்படுகிறது.
எவ்வாறாயினும், இலங்கை விவகாரத்தில் இந்தியா இதுவரை எடுத்துள்ள நகர்வுகள் அனைத்துமே பிரச்சினையை கேட்டறிதல், கண்டறிதல் என்பதாகவே இருந்துள்ளது. அதை தீர்க்குமளவுக்கு களமிறங்க இன்னமும் புதுடெல்லி முனையவில்லை. அத்தகைய கட்டத்திலேயே இந்தியாவினது நிலை என்னவென்பதை தீர்மானிப்பதாக இருக்கும்.
எவ்வாறாயினும், நரேந்திர மோடி, தமிழர் தரப்பின் பிரச்சினையை கேட்டறிவதற்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தை சாதாரணமாக எடை போடமுடியாது. இது அவர் தனியே இலங்கை விவகாரத்தை வைத்துக்கொண்டு எடுத்துவைக்கும் நகர்வாக மட்டும் கருதமுடியாது. தமிழ்நாட்டில் வலுவாகக் காலூன்றும் அரசியல் இலக்கையும் அவர் மனதில் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கு அடிபணியும் வெளிவிவகாரக் கொள்கையை இந்தியா கடைப்பிடிக்காதென்று கூறப்பட்டாலும், தமிழ்நாட்டை அரவணைக்கத்தக்க வெளிவிவகாரக் கொள்கையை புதுடெல்லி கடைப்பிடிக்க முனைகிறதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்பட்டுள்ள பேச்சுக்கள் இலங்கை விவகாரத்தில் இந்தியா தனக்குள்ள பொறுப்புகளையும் கடப்பாடுகளையும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்பதையும் உணர்த்தியிருக்கிறது. இது இலங்கை அரசுக்கு வெளியிடப்பட்ட ஒரு மறைமுக எச்சரிக்கையும் கூட.
ஏனென்றால் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், அதற்கப்பால் சென்று ஓர் அரசியல் தீர்வைக் காண வேண்டுமென்ற இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
இவை இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் என்பதை புதுடெல்லியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தபோது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நினைவுபடுத்தியிருந்தாலும், அரசாங்கத்தின் விடாப்பிடிப் போக்கில் தளர்வேதும் ஏற்படவில்லை.
அண்மையில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியா சென்றிருந்தபோது, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தனது கொழும்பு பயணத்துக்கு முன்பாக தீர்வுத் திட்டம் தொடர்பான இலங்கை அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென்று தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
ஒருவேளை, அரசியல் தீர்வு ஒன்றுக்கான காலக்கெடு ஒன்றை இரகசியமாக இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா கொடுத்திருக்கலாம். அத்தகைய காலக்கெடுவை பயன்படுத்தும் அறிகுறிகள் ஏதும் தென்படாத நிலையில், இலங்கை அரசுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையில் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடெல்லிக்கு அழைத்திருக்கலாம்.
என்னதான் புதுடெல்லியில் பேச்சுக்களை நடத்தினாலும், கடைசியில் தன்னிடம் தானே வரவேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதாகவும் தகவல்கள் உள்ளன. இலங்கை அரசுடன் பேச்சு நடத்தினால்தான் பிரச்சினைக்கு இறுதித் தீர்வொன்று காணமுடியுமென்ற நிலை யதார்த்தமானதே.
என்றாலும், ஓர் இணக்க வழிமுறைக்கு வர மறுக்கும் அரசாங்கத்தை வளைப்பதற்கு வலுவான அரசாங்கங்கள் மாற்று வழிமுறைகளையும் கையாளத் துணியும் என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும். இந்தியா கூட அத்தகைய மாற்று வழிமுறைகள் பற்றிச் சிந்திக்கத் துணிந்தால், அது இலங்கை அரசாங்கத்துக்கு ஆபத்தாக அமையும்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்வதற்கு அழைக்கிறது இந்தியா. அப்படியான நிலையில் இலங்கையின் இறைமைக்கோ, ஆள்புல ஒருமைப்பாட்டுக்கேர் பாதிப்பு ஏற்படுவதற்கு எந்தவொரு காலத்திலும் இந்தியா அனுமதிக்காது. எனவே, அரசாங்கம் எந்த அச்சமுமின்றி அதிகாரப்பகிர்வுக்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.
அதற்கு மாறாக, வலுவான காரணமின்றி அதிகாரப்பகிர்வுக்கு இணங்க அரசாங்கம் மறுக்குமேயானால், இந்தியாவும் மாற்றுவழிகளின் ஊடாக தனது இலக்கை அடைய முயற்சிக்கும்.
அதற்கானதொரு அடையாள எச்சரிக்கையாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்தியா கைகுலுக்கிக் கொண்டதைப் பார்க்கவேண்டும். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான பெரும் வரவேற்பு என்று எடுத்துக்கொள்வதை விட, இலங்கை அரசுக்கான எச்சரிக்கையென்று எடுத்துக்கொள்வதே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
-கே.சஞ்சயன்-