தம்மை இளமை தோற்றத்துடனும் அழகாகவும் காட்ட யாருக்குத் தான் விருப்பம் இல்லை. அந்த விருப்பத்தின் அடிப்படையில் தோன்றிய தேடல் கிழவியையும் குமரியாக காட்டும் அளவிற்கு மாயை வியாபித்துள்ளது.
அதன் பிரதிபலன் இன்று பல நாடுகளிலும் அழகு அல்லது முகமாற்று சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் ‘பியூட்டி மாபியா’ வுக்குள் பலரை ஈர்த்துள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே பரவலாக காணப்படும் இந்த அழகு சத்திர சிகிச்சைகள் இன்று வளர்ச்சி அடைந்துவரும் இலங்கைப் போன்ற நாடுகளிலும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு நிகராக பரவலடைந்துள்ளதை மறுப்பதற்கில்லை.
இன்று இலங்கையில் மூலை முடுக்கெல்லாம் ‘பியூட்டி பாலர்’ என்ற நாமத்துடன் இந்த வேலையை முன்னெடுக்கும் வர்த்தகம் சார் நிலையங்கள் ஏராளம்.
எனினும் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் திகதி பம்பலப்பிட்டி , விசாகா வீதியில் அமைந்துள்ள ‘கொஸ்மடிக் சேர்ஜரி கிளினிக்’ என்ற அழகு சிகிச்சை நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் இவ்வாறான அழகு சிகிச்சை நிலையங்கள் தொடர்பில் பலரை ஒருமுறை யோசிக்க வைத்தது.
குறித்த அழகு சிகிச்சை நிலையத்தில் தோல் சுருக்கம் தொடர்பிலான சத்திர சிகிச்சை ஒன்றுக்கு சென்ற கொழும்பு, லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை வைத்தியரான 47 வயதுடைய பிரியங்கா எனப்படும் பெண் வைத்தியர் சிகிச்சைகளின் நடுவே உயிரிழந்தமையே இதற்கான காரணமாகும்.
இலங்கையைப் பொறுத்தவரை அழகு சிகிச்சைகளின் இடை நடுவே அல்லது அது சார்ந்து பதிவாகும் முதல் மரணம் வைத்தியர் பிரியங்காவின் மரணமல்ல.
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் அமல் ஹர்ஷ டி சில்வாவின் தகவல்களின் படி வைத்தியர் பிரியங்காவின் மரணம் அழகு சிகிச்சை தொடர்பில் இலங்கையில் பதிவான நான்காவது மரணமாகும்.
இவ்வாறு மரணமான நான்கு பேருமே சமூகத்தில் உயர் மட்டங்களில் வாழ்ந்தவர்கள். இந்த வைத்தியரை தவிர உயிரிழந்தவர்களில் பேராசிரியர் ஒருவரும் அடங்குகின்றார். இந் நிலையில் தான் இலங்கையில் உள்ள அழகு சிகிச்சை நிலையங்கள் தொடர்பில் இரு முறை யோசிக்க வேண்டிய நிலைக்கு அதன் பயனாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 12 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் இதனை உணர்த்தியிருக்கின்றது. ‘கொஸ்மடிக் சேர்ஜரி கிளினிக்’ என்ற அந்த அழகு சிகிச்சை நிலையமானது பம்பலப்பிட்டி விசாகா வீதியில் உள்ள குடியிருப்புக்களுள் அமைந்த ஒரு தொடர்மாடியிலேயே நடத்தப்பட்டு வந்தது.
இதனை நடத்தி வந்தவர் இலங்கை மருத்துவ கல்லூரியின் எம்.பி.பி.எஸ்.பட்டம் பெற்ற சுமார் 50 வயதுடைய வைத்தியர் நிமல் கமகே என்பவராவார்.
அழகு சிகிச்சை மேற்கொள்பவர்களில் அல்லது அது சார்ந்த ஆர்வம் உடையவர்களில் இவரை தெரியாதவர்கள் இலங்கையில் இருக்க முடியாது எனும் அளவுக்கு பிரசித்தமானவர்.
அடிக்கடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி அழகுக்குறிப்பு சொல்லி, அழகு சிகிச்சை தொடர்பில் விளக்கி பல பெண்களின் மனங்களிலும் இடம் பிடித்திருந்த நிமல் கமகேயிடம் சிகிச்சைகளுக்காக நாளாந்தம் வருவோர் ஏராளம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட தான் அமெரிக்காவில் அழகுக்கலை சிகிச்சைகள் தொடர்பில் பயிற்சிகளை முடித்தவர் எனவும் 25 வருட அனுபவம் உள்ளவர் எனவும் அழகு சிகிச்சை தொடர்பிலேயே வடிவமைக்கப்பட்ட இணையத்தளத்தில் தனது படங்கள் மற்றும் சிகிச்சை முறைகளின் படங்களுடன் வைத்தியர் நிமல் கமகே முன்னெடுத்த பிரசாரங்களும் அவரை நோக்கி அழகு சிகிச்சைப் பிரியர்களை இழுத்தெடுத்தது எனலாம்.
இலங்கையில் பிரபலமான நடிகர், நடிகைகள், அரசியல் தலைமைகளின் மனைவி மக்கள்கள் என வைத்தியர் நிமல் கமகேயை நாடி வருவோர் ஏராளம்.
இந் நிலையில் தான் கடந்த 12 ஆம் திகதி ஏற்கனவே திட்டமிட்டு செலுத்தப்பட்ட 10 ஆயிரம் ரூபா முற்பணத்துக்கு அமைய பெறப்பட்ட நேரத்தில் வைத்தியர் பிரியங்கா பம்பலபிட்டியில் உள்ள அந்த அழகு சிகிச்சை நிலையத்துக்கு சென்றுள்ளார்.
வைத்தியர் பிரியங்கா
தான் கடமையாற்றிய லேடி ரிஜ்வே வைத்தியசாலையிலிருந்து அலுவலக விடுமுறை எடுத்துக் கொண்டுள்ள அந்த வைத்தியர் தனது தோழி ஒருத்தியிடம் மட்டும் தான் போகும் நோக்கத்தை குறிப்பிட்டுவிட்டு பம்பலபிட்டியை அடைந்த போது நேரம் நண்பகல் 12.30 ஐ கடந்திருந்தது.
வைத்தியர் பிரியங்கா 10 ஆயிரம் ரூபா முற்பணம் செலுத்தியிருந்தது liposuction என்ற பெயரால் அடையாளப்படுத்தப்படும் தோல் சுருக்க நீக்கம் தொடர்பிலான சிகிச்சைகளுக்காகும்.
இந்த சிகிச்சைகளுக்கு இலங்கையை பொறுத்தவரையில் சுமார் ஒரு இலட்சம் ரூபா வரையில் அறவிடப்படுகின்றது. இந் நிலையில் தான் வங்கி ஊடாக செலுத்திய முற்பணத்தை விட செலுத்த வேண்டியிருந்த 90 ஆயிரம் ரூபாவினையும் அங்கு சென்றுள்ள வைத்தியர் பிரியங்கி நேரடியாகவே செலுத்தியுள்ளார்.
இந் நிலையில் பிற்பகல் 1.15 மணியளவிலேயே வைத்தியர் பிரியங்க சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந் நிலையில் அவருக்கு சத்திர சிகிச்சைக்கு முன்னர் ஒரு வகையான நோய் எதிர்ப்பு நிவாரணி ஊசி ஒன்று ஏற்றப்பட்டுள்ளது. செபரொக்ஸி என்ற பெயரால் அடையாளப்படுத்தப்படும் அந்த நோய் எதிர்ப்பு நிவாரணி ஊசி பென்சிலின் மருந்து வகையை சேர்ந்தது.
இந்த நிவாரண ஊசி மருந்தின் 2 மில்லி லீற்றர்கள் வரையில் வைத்தியர் பிரியங்காவின் களுத்துப் பகுதியில் உள்ள நரம்பில் ஏற்றப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்திருந்தார்.
நிவாரணி ஊசியை ஏற்றியதையடுத்த 9வினாடியில் வைத்தியர் பிரியங்காவுக்கு கடுமையான இருமல் ஏற்பட்டுள்ளதுடன் அதிக நேரம் அந்த இருமல் நீடிக்க முன்னரேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இந் நிலையிலேயே ஸ்தலத்துக்கு சென்ற பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். பம்பலப்பிட்டி பொலிஸாரின் விசாரணைகளுக்கு மேலதிகமாக கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்டவின் ஆலோசனையின் படி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கும் விசாரணைகள் கையளிக்கப்பட்டன.
குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டீ சில்வாவின் பூரண கட்டுப்பாட்டில் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஜயரத்ன தலமையிலான பொலிஸ் குழு விசாரணைக்கு விரைந்து அன்றைய தினம் இரவே புதுக்கடை மேலதிக நீதிவான் மஹிஷ்டா அத்தபட்டுவுக்கு அறிக்கை சமர்பித்து பெற்றுக்கொன்ட கைது உத்தரவுக்கு அமைய வைத்தியர் நிமல் கமகேயை கைது செய்தனர்.
செபரொக்ஸி என்ற நோய் தடுப்பு நிவாரணிகள் ஒரு போதும் அழகு சிகிச்சை தொடர்பில் பயன்படுத்தப்படுவதில்லை என்கின்றார் ருகுணு பல்கலைக்கழகத்தின் சட்ட வைத்திய பீடத்தின் பிரதானி விஷேட சட்ட வைத்தியர் யூ.சீ.பீ.பெரேரா.
பென்ஸிலின் வகையை சேர்ந்த இவ்வகையான மருந்துகள் பலருக்கு ஒத்துக்கொள்வதில்லை என குறிப்பிடும் விஷேட சட்ட வைத்தியர் யூ.சீ.பீ.பெரேரா இவ்வகையான மருந்துகள் பக்க விளைவுகள் மிகக் குறைவானது எனவும் எனினும் அதனை ஒருவருக்கு வழங்க முன்னர் அவருக்கு அது ஒத்துக்கொள்ளுமா என அறிந்திருக்க வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிடுகின்றார்.
எனினும் இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டுள்ள வைத்தியர் நிமல் கமகே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்கு மூலத்தில் வைத்தியர் பிரியங்காவின் வேண்டுகோளுக்கு அமையவே நிவாரண ஊசி மருந்து வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உதவி பொலிஸ் அத்தியட்சர் ஜயரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினருக்கு அவர் வழங்கியுள்ள வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை சுருக்கமாக தருகின்றோம்.
‘இவ்வகையான சத்திர சிகிச்சைகளில் எவ்விதமான நிவாரண மருந்துகளையும் நான் பயன்படுத்துவதில்லை. எனினும் வைத்தியர் பிரியங்காவின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த நோய் தடுப்பு நிவாரண மருந்து அவருக்கு வழங்கப்பட்டது.
குறித்த மருந்தின் 10 மில்லி லீற்றர்களை ஊசி மூலம் நான் ஏற்ற தயாரானேன். முதல் இரு மில்லி லீற்றர்களையும் நான் ஏற்றிய போது அவர் படுத்திருந்த கட்டிலிலிருந்து இருமிய வண்ணம் எழுந்திருந்தார்.. இதனை அடுத்து ஓரிரு தடவைகள் இருமிய பெண் வைத்தியர் ஒரே தடவையாக உயிரிழந்துவிட்டார்.
பெண் வைத்தியர் பிரியங்காவின் கையில் உள்ள நரம்பு சரியாக தென்படாததால் கழுத்தில் உள்ள நரம்பில் ஊசி ஏற்றப்பட்டது. கழுத்தில் ஊசி ஏற்றப்பட்டதற்கு வேறு விஷேட காரணங்கள் எதுவும் இல்லை.
அமெரிக்காவில் அழகு சத்திர சிகிச்சை ஒன்றுக்காக நான் இலங்கை மதிப்பில் 10 இலட்சம் ரூபா வரை அறவிட்டுள்ளேன். இந்த வைத்திய சத்திர சிகிச்சை முறைமையை அமெரிக்காவிலேயே நான் கற்றுக்கொண்டேன்.
அத்துடன் 1981 ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரியிலிருந்து நான் வெளியேறியதும் நீர்கொழும்பு மற்றும் பாணந்துறை வைத்தியசாலைகளில் பணியாற்றினேன்.
அதனை தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் அழகு சிகிச்சை தொடர்பில் பயிற்சிகளை பெற்றேன்.’ என குறிப்பிட்டுள்ள அவர் சான்றிதழ்கள் பல வற்றை பொலிஸாருக்கு காட்டியுள்ளார்.
குறித்த சான்றிதழ்கள் ஒவ்வொன்றிலும் வைத்தியரின் பெயரானது மாற்றங்களுடன் இருந்ததால் அவரது தகைமைகள் குறித்தும் பொலிஸாரின் சந்தேகம் திரும்பியுள்ளது. அது தொடர்பில் புதுக்கடை நீதிவான் நீதிமன்றின் நீதிபதி எம்.எம்.சஹாப்தீனிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் வைத்திய சபையின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனை விட வைத்தியர் நிமல் கமகே நடத்தி வந்த குறித்த அழகு சிகிச்சை நிலையத்தில் வரவேற்பறையிலும் ஏனைய வேலைகளுக்கும் என நான்கு தாதியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களை தாதியர் என அடையாளப்படுத்த முடியாது. ஏனெனில் இவர்கள் தாதியர் பயிற்சி பெற்றவர்கள் அல்ல. கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை மட்டுமே பயின்றிருக்கும் இவர்கள் வைத்தியர் நிமல் கமகேவின் அறிவுரைகளின் பிரகாரம் குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்தவர்கள் என விசாரணைகளை மேற்கொண்டுவரும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரியுடனான கலந்துரையாடலில் சுட்டிகாட்டினார்.
சந்தேக நபரான வைத்தியருக்கு 50 வயது என குறிப்பிடும் பொலிஸார் அவரும் இவ்வாறு அழகு சத்திர சிகிச்சை மேற்கொண்டவர் என குறிப்பிட்டனர். இவ்வகையான சிகிச்சைகளின் பின்னர் தனது உண்மையான வயதை விட 10 வருடங்கள் வரை வயதை குறைத்து ஒருவரை இளமையாக காட்டக் கூடிய சக்தி இந்த சிகிச்சைகளுக்கு உள்ளதாக குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண அதனாலோ என்னவோ பலரும் இவ்வகையான சிகிச்சைகளை மேற்கொள்ள ஆசைப்படுவதாக குறிப்பிட்டார்.
அத்துடன் வைத்தியர் நிமல் கமகே இந்த அழகு சிகிச்சை நிலையத்தை நடத்திவந்த இடத்தை விஷேட பொலிஸ் குழு சுற்றிவளைத்த போது காலாவதியான ஊசிகள், மருந்துகள் உள்ளிட்டவற்றை கைப்பற்ற முடிந்ததாக தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண சம்பவம் குறித்து மிக விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
கொழும்பு, புதுக்கடை நீதிவான் நீதிமன்றின் விஷேட உத்தரவுக்கு அமைய கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்ட சட்ட வைத்திய அதிகாரிகள் இருவர், அரச இரசாயண பகுப்பாய்வாளர், ஒட்டுறுப்பு சத்திரசிகிச்சை (பிளஸ்டிக் சத்திர சிகிச்சை )
தொடர்பிலான விஷேட வைத்திய நிபுணர் ஒருவர், மயக்க மருந்து தொடர்பிலான நிபுணர் ஒருவர் உள்ளிட்ட அறுவரைக்கொண்ட விஷேட குழுவே இந்த சோதனை நடவடிக்கைகளை பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்டதாக சுட்டிக்காட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண இதன் போதே இந்த காலாவதியான மருந்துகள் மீட்கப்பட்டதாகவும் அது தொடர்பில் மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் குறித்த அழகு சிகிச்சை நிலையம் சட்ட விரோதமானதா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இது இவ்வாறிருக்க குறித்த சிகிச்சை நிலையத்திலிருந்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைப்பற்றிய மடிக்கணணி ஒன்றிலிருந்து பொலிஸாருக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.
இந் நிலையில் தான் பொலிஸார் மேற்கொண்டுள்ள விசாரணைகளில் குறித்த அழகு சிகிச்சை நிலையம் நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பலரால் அழகு சிகிச்சைகளின் பொருட்டு பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழகு சத்திர சிகிச்சைகளை தான் மேற்கொன்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள சந்தேக நபரான வைத்தியர் இலங்கையில் சுமார் 2000 பேர் வரையில் தன்னிடம் இவ்வாறு சிகிச்சைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு சிகிச்சை பெற்றவர்களின் விபரங்கள் வைத்தியரின் கணணியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரியிடம் சுட்டிக்காட்டினார்.
இதனை விட குறித்த வைத்தியர் சிகிச்சைகளின் இடை நடுவே பாலியல் எதிராக அமெரிக்காவில் குற்றச்சாட்டு இருந்துள்ளதாகவும் அதன் பின்னரே இவ்வாறு அவர் இங்கு வந்துள்ளதாகவும் பரவலாக பேசப்படுகின்றது. இது தொடர்பிலும் வைத்தியர் நிமல் கமகே விபரித்துள்ளார்.
‘ ஆம் எனக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்றொன்று 1992 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சுமத்தப்பட்டது. அது தொடர்பில் வழக்கும் தொடரப்பட்டது. எனது சேவையாளர்கள் இருவரால் அது தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவர்கள் தோல்வி அடைந்தனர். அதற்கப்பால் சொல்வதற்கு ஒன்றுமில்லை’ என அந்த குற்றச்சாட்டு தொடர்பில் வைத்தியர் நிமல் கமகே குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு நிலையிலேயே கடந்த வார இறுதியில் அல்லது இந்த வார ஆரம்பத்தில் வைத்தியர் நிமல் கமகே தொடர்பில் மீண்டும் அவதானம் செலுத்தப்பட்ட செய்திகள் இலண்டனிலிருந்து பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாடொன்று ஊடாக அலசப்பட்டது எனலாம்.
கடந்த சனிக்கிழமை (23.08.2014) பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு பெண்ணொருவர் தொலை நகல் ஊடாக அனுப்பியுள்ள முறைப்பாடொன்றில் ‘ தான் இரு மாதங்களுக்கு முன்னர் வைத்தியர் நிமல் கமகேயிடம் அழகு சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாகவும் அதனை தொடர்ந்து நோய் வாய்ப்பட்ட நிலையில் இலங்கையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று தற்போது லண்டனில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தங்கி இருந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.
இதனை விட குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவருக்கும் வைத்தியர் நிமல் கமகேயிடம் சிகிச்சை பெற்ற பின்னர் தோல் வியாதி ஒன்று அதிகரித்துள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எனினும் அந்த முறைப்பாடு தொடர்பில் இதுவரை எவ்வித உத்தியோக பூர்வ அறிவிப்புக்களும் வெளியாகவில்லை.
இது தொடர்பில் குருணாகல் பொலிஸாருக்கு சிறுமியின் பெற்றோர் முறையிட்டுள்ளதக கூறப்படும் நிலையில் இந்த வைத்தியரின் சிகிச்சைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இன்னும் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் அவை தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளனர்.
அழகு மோகத்தில் செல்லும் பலரிடம் பல இலட்சங்களை சுருட்டுவதற்காக இந்த வைத்தியர் காலாவதியான மருந்துகளைக் கூட தந்து சிகிச்சைகளுக்காக பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் உயிரிழந்த வைத்தியர் பிரியங்காவின் மரணத்துக்கான காரணங்களை கண்டறிய தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்வதுடன் வைத்தியர் பிரியங்காவின் உடல் பாகங்களை அரச இரசாயன பகுப்பாய்வுக்கும் உட்படுத்தி அதன் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
இன்று அனைத்துமே பணத்தை மையப் படுத்தி மேற்கொள்ளப்படும் நிலையில் வைத்தியர் நிமல் கமகே உயிர் பறித்த குற்றத் துக்காக சந்தேகத்தின் பேரில் விளக்க மறியலில் உள்ளார். இது தொடர்பி லான வழக்கு விசாரணைகளின் அடுத்த தவணை விசாரணைகள் நடைபெறவுள்ளது.
ஒரு எம்.பி.பி.எஸ். வைத்தி யருக்கு சாதாரண மருத்துவ நடவடிக்கை களை மேற்கொள்ளவே அனுமதி உள்ள நிலையில் இந்த வைத்தியரோ அழகு சிகிச்சை நிலையத்தை நடத்திவந்துள்ளார்.
அழகு சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்த வேறு தகுதிகள் கோரப்படும் நிலையில் சாதாரண மருத்துவ நிலையத்திற்கன அனுமதியின் பேரில் இந்த அழகு சிகிச்சை நிலையம் உரு வாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியா கியுள்ளன. தொடர்பிலும் விசாரணைகள் தொடர்கின்றன.
இன்று எவ்வித மருத்துவ ஆலோசனைகளும் இன்றி வெள்ளை தோலுக்காகவும் அழகுக்காகவும் பலதையும் பயன்படுத்தும் நாகரீக மோகத்தின் உச்ச கட்டத்தில் உள்ளவர்களைப் பார்த்து முகப் புத்தகத்தில் நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த இரு வசனங்களை இந்த கட்டுரையின் இறுதி வசனங்களாக பதிவு செய்கின்றேன்.
‘ ஆங்கிலம் என்பது அறிவல்ல, அது ஒரு மொழி.
வெள்ளை என்பது அழகல்ல, அது ஒரு நிறம்’
எம்.எப்.எம்.பஸீர் –