உத்தரபிரதேசத்தில் மாஜிஸ்திரேட் ஒருவர் நீதிமன்றத்தில் உள்ள தனது சேம்பரிலேயே சிறுமியை கற்பழித்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.அசம்காரில் ஒரு சிறுமி தன்னை சிலர் கடத்தி கற்பழித்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை அசம்கார் கூடுதல் தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வந்துள்ளது.
அப்போது மாஜிஸ்திரேட் அந்த சிறுமியிடம் ரகசிய வாக்குமூலம் பெறுவதற்கும், அதனை கமெராவில் பதிவு செய்யவும் முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, அந்த சிறுமியும் அவருக்கு துணையாக அந்த பெண்ணின் சகோதரரும், ஒரு பெண் பொலிசாரும் மாஜிஸ்திரேட்டு சேம்பருக்கு வந்துள்ளனர்.
ஆனால் சிறுமியின் சகோதரரையும், பெண் பொலிசையும் சேம்பரை விட்டு வெளியே செல்லுமாறு மாஜிஸ்திரேட் கூறியுள்ளார்.
தனியாக இருந்த அந்த சிறுமியை சேம்பரிலேயே அந்த மாஜிஸ்திரேட்டு கற்பழித்துவிட்டு, இதுபற்றி வெளியே சொன்னால், உன்னை சிறைக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
பின்னர் அந்த சிறுமி இதுகுறித்து எழுத்துமூலம் புகார் செய்தபோதும் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், இந்த பிரச்சினையை அசம்கார் வழக்கறிஞர்கள் சங்கம் கையில் எடுத்ததோடு, சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நீதிபதிக்கு புகார் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அசம்கார் வழக்கறிஞர் சங்க தலைவர் விஜய் பகதூர் கூறுகையில், இந்த செயலை செய்த மாஜிஸ்திரேட் மீதும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய மறுத்த பொலிசார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் நாங்கள் ஓயமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.