அமெரிக்காவில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடாவிற்கும் பசுபிக் பெருங்கடலுக்கும் இடையே உள்ள சுமார் 3 கிமீ தூரத்திற்கு அமைந்துள்ள பாலம் மிகவும் பிரபலமானது.
Golden Gate Bridge என்று அழைக்கப்படும் இந்த பாலத்தில் நிமிடத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் அளவிற்கு மிகவும் பிசியாக இருக்கும். அப்படிப்பட்ட பிசியான பாலத்தில் இரண்டு மான்கள் இன்று சுமார் அரைமணி நேரம் இங்குமங்கும் ஓடி, கடும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியதால் Golden Gate Bridge பாலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சான்பிராஸிஸ்கோ நகரில் உள்ள Golden Gate Bridge பாலத்தில் பிசியாக வாகனங்கள் சென்றுகொண்டிருந்தபோது திடீரென வாகனங்களின் குறுக்கே இரண்டு மான்கள் துள்ளி ஓடத்தொடங்கியது.
இதனால் ஆங்காங்கே சென்று கொண்டிருந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு மான்கள் பாலத்தில் இருந்து வெளியேற வழிவிடப்பட்டது. ஆனால் அந்த இரண்டு மான்களும் முன்னும் பின்னும் சென்று வாகன ஓட்டிகளை திணறடித்தது.
இந்த தகவல் அறிந்து உடனடியாக காவல்துறையினர்களுடன் வந்த வனவிலங்கு காப்பக அதிகாரிகள் மிகுந்த சிரமப்பட்டு அந்த மான்களை பிடித்து சென்றனர்.
இதனால் அந்த பாலத்தில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மாலை 5.30 மணிக்கு ஆரம்பித்த மான்களின் ஓட்டம் 6 மணிக்குத்தான் முடிவடைந்தது. மான்களுக்கோ அல்லது வாகன ஓட்டிகளுக்கோ எவ்வித காயமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.