Site icon ilakkiyainfo

3 தங்கச்சிகளையும் கல்யாணம் செய்து கொடுங்க; வரதட்சிணை வேணாம்: மாப்பிள்ளையின் விபரீதப் பேச்சால் திருமணத்தை நிறுத்திய பெண்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று காலை நடக்க இருந்த தனது திருமணத்தை ஒரு பெண் நிறுத்தினார். அதற்கு மாப்பிள்ளையின் பேராசையும் விபரீதப் பேச்சும் காரணமாக அமைந்தது.

கதவாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். கட்டட மேஸ்திரி. இவருக்கும் வாணியம்பாடி வலையாம்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று காலை ஆம்பூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் காலை 7.30 – 9 மணி முகூர்த்தத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இவருக்கு வரதட்சிணையாக 20 சவரன் நகை அளிக்க பெண்ணின் வீட்டார் ஒப்புக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு, திடீரென தனக்கு வரதட்சிணை போதவில்லை என்றும், கூடுதலாக 5 பவுன் நகை வேண்டும் என்று கேட்டுள்ளார் சரவணன்.

அதற்கு பெண் வீட்டார் ஒப்புக் கொண்டுள்ளனர். பின்னர் தனக்கு ஒரு பைக் வேண்டும் என்றாராம். அதற்கும் சரி என்ற பெண் வீட்டாரிடம், பெண் வீட்டாரிடம் உள்ள 40 செண்ட் நிலத்தில், இந்தப் பெண்ணின் பெயரில் 10 செண்ட் நிலம் எழுதி வைக்க வேண்டும் என்றாராம்.

அப்போது தகராறு வெடித்துள்ளது. மதியம் 2 மணி வரையில் நீடித்த பிரச்னையின் போது, திடீரென மாப்பிள்ளை சரவணன் முன்வைத்த ஒரு டிமாண்ட், பெண்ணையும் பெண் வீட்டாரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

“பெண்ணுக்கு உள்ள மூன்று தங்கச்சிகளையும் எனக்கே கல்யாணம் செய்து கொடுங்கள்” அப்ப எனக்கு வரதட்சிணையே வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண், இந்த ஆள் இப்பவே இப்படிப் பேசுகிறாரே, கல்யாணம் ஆனால் என்ன செய்வாரோ என்ன பேசுவாரோ என்று கூறி, இந்தக் கல்யாணமே வேண்டாம் என்று கூறி திருமணத்தை நிறுத்திவிட்டார்.

இது அறியாமல், இன்று திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Exit mobile version