Site icon ilakkiyainfo

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விட்ட இலங்கை அகதி கைது

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இலங்கை அகதி கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தூத்துக்குடி பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி மாவட்ட பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலையில் ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆசாமி தூத்துக்குடி மீன்பிடி துறை முகத்தில் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்து விட்டு அழைப்பை துண்டித்து விட்டதாக தெரிகிறது.

இதனால் மாவட்ட பொலிஸ் கட்டுப்பாட்டு அறை பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பொலிஸார் உஷார்படுத்தப்பட்டனர். தொடர்ந்து தூத்துக்குடி தென்பாகம் பொலிஸார் மீன்பிடி துறைமுகத்தில் மோப்ப நாய் இன்கா உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி மா.துரை உத்தரவின் பேரில், தனிப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ரவி தலைமையில் பொலிஸார், மர்ம ஆசாமியின் தொலைபேசி எண்ணை கொண்டு விசாரணையை முடுக்கிவிட்டனர். அப்போது, அந்த எண்ணுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியவர்களின் எண்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போது, எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி அகதிகள் முகாமில் இருந்து காணாமல் போன இலங்கை அகதியான விக்னேஷ்வரன் மகன் விஜயபிரபாகர் (21) என்பவர் மிரட்டல் விடுத்து இருந்தது தெரியவந்தது.

உடனடியாக பொலிஸார் தூத்துக்குடியில் சுற்றித்திரிந்த விஜயபிரபாகரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-

கைதான விஜயபிரபாகர் இலங்கையில் இருந்து அகதியாக வந்து தாப்பாத்தி முகாமில் தங்கி உள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு அங்கு ஒரு மோட்டார் சைக்கிளை திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் விளாத்திகுளம் நீதவான் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளது. இவர் மீது ராமநாதபுரத்திலும் திருட்டு வழக்கு உள்ளது.

அதன்பிறகு அகதிகள் முகாமில் இருந்து வெளியேறிய விஜயபிரபாகர் தூத்துக்குடி துறைமுக பகுதிகளில் சுற்றித்திரிந்து உள்ளார். அங்கு லொறியில் சிறு, சிறு வேலைகளை செய்து கொண்டு முத்தையாபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி வந்தார். சம்பவத்தன்று மது குடித்து விட்டு பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

மேலும் விஜயபிரபாகர் பயன்படுத்திய செல்போன் எண், சிவகங்கை மாவட்டம் ஆதனூரை சேர்ந்த ஒருவரின் பெயரில் இருப்பதும், முதல்- அமைச்சர் ஜெயலலிதா தூத்துக்குடிக்கு வர இருக்கும் நேரத்தில், இலங்கை அகதி ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருப்பது பொலிஸாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அகதிகள் முகாமை உளவுப் பிரிவு அதிகாரிகள் எப்போதும் கண்காணித்து வருகின்றனர். அகதிகள் முகாமில் இருந்தவரின் தொலைபேசி எண் போலியான முகவரியில் உள்ளது. இது போன்று போலி எண்களை வைத்து சதித்திட்டங்களில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது.

இதனை உளவுத்துறையினர் எப்படி அனுமதிக்கின்றனர் என்பது பொலிஸாரிடையே கேள்விக் குறியாக உள்ளது. விஜயபிரபாகரிடம் தொடர்ந்து பொலிஸார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version