ilakkiyainfo

யாழில் 18 வயது பாடசாலை மாணவி கடத்த போவதாகக்கூறி கப்பம் வாங்க முயன்றவர்கள் கைது!!

யாழ்ப்பாணம், குடத்தனை பகுதியைச் சேர்ந்த 18 வயது பாடசாலை மாணவியொருவரை கடத்த போவதாகக்கூறி அம்மாணவியின் தாயை அச்சுறுத்தி கப்பம் பெற்ற ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் ஞாயிற்றுக்கிழமை (07) உத்தரவிட்டார்.

குடத்தனை பகுதியில் கணவனை இழந்த பெண்ணொருவர், கல்வி பொதுத் தராதர உயர்தரம் படிக்கும் தனது மகளுடன் வசித்து வருகின்றார்.

இந்நிலையில், அப்பெண்ணின் மகளை கடத்துவதாக அச்சுறுத்தியுள்ள ஐந்து சந்தேகநபர்கள், மகளை கடத்தாதிருக்க வேண்டுமாயின் பணம் வேண்டும் என்று கூறி, மூன்று தடைவைகளில் 75 ஆயிரம் ரூபாவை கப்பமாகப் பெற்றுள்ளனர்.

தொடர்ந்து அதேபாணியில், சனிக்கிழமையன்றும் அச்சந்தேகநபர்கள், மேற்படி பெண்ணிடம் கப்பம் பெற முயற்சித்த போது, இதையறிந்த அப்பகுதி ஆசிரியர் ஒருவர், இது குறித்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, கப்பம் வாங்குவதற்காக மேற்படி நபர்கள் வந்திருந்தவேளை, அப்பகுதியில் மறைந்திருந்த பொலிஸார், அந்த ஐவரையும் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். அத்துடன், அவர்கள் பயணித்த 3 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் உடுப்பிட்டி, வதிரி, கலிகை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22, 24, 27, 29, மற்றும் 30 வயதுடையவர்கள் என பொலிஸார் கூறினர்.

தொடர்ந்து, சந்தேகநபர்கள் பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

டிப்பர் எரிப்பு சம்பவம் : 13 பேர் கைது

index2யாழ். நவக்கிரி சரஸ்வதி வீதியில் கர்ப்பிணிப் பெண்ணொருவரை மோதி பலியாக்கிய, டிப்பர் ரக வாகனத்தை எரித்த குற்றச்சாட்டில் இதுவரையில் 13 பேரை கைது செய்துள்ளதாகவும் அவர்களில் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அச்சுவேலி பொலிஸார் திங்கட்கிழமை (08) தெரிவித்தனர்.

ஓகஸ்ட் 26 ஆம் திகதி இடம்பெற்ற மேற்படி விபத்து சம்பவத்தில் கசிந்திரன் சுபாசினி (வயது 25) என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். அந்த வாகனத்தை பெண்ணின் உறவினர்கள், மற்றும் ஊரவர்களால் எரித்தனர்.

டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதனையடுத்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, டிப்பர் எரியூட்டுவதற்கு காரணமாகவிருந்த பெண்ணின் உறவினர்கள் 6 பேர் சனிக்கிழமை (06) கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், மேற்படி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என மேலும் 7 பேர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை சரணடைந்துள்ளதாக பொலிஸார் கூறினார்கள்.

7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்;.

Exit mobile version