Site icon ilakkiyainfo

இந்திய துணைக் கண்டத்தில் அல்-கைதாவின் தூண்டில் – சதீஷ் கிருஷ்ணபிள்ளை (கட்டுரை)

அல்-­கைதா வலைப்­பின்­னலின் தலைவர் ஐமான் அல்-­-­-ஸ­வாஹ்ரி நீண்ட நாட்­க­ளுக்குப் பின்னர் வீடியோ செய்­தியை விடுத்­தி­ருந்தார். இந்த வீடியோ காணொளி 55 நிமி­டங்கள் நீடித்­தது.

இதில் பல விட­யங்கள் பேசப்­பட்­டன. ஜிஹாத் கொடியை இந்­திய துணைக்­கண்டம் முழு­வதும் பறக்க விட வேண்டும் என்­பது முக்­கி­ய­மான செய்தி. இந்­தியா, பங்­க­ளாதேஷ், மியன்மார் ஆகிய நாடு­களில் ஒடுக்­கு­மு­றை­களில் இருந்து முஸ்­லிம்­களைக் காப்­பாற்ற வேண்டும் என்­பது அதன் தொடர்ச்சி.

அல்-­கைதா வலைப்­பின்னல் இந்­தி­யாவில் புதிய பிரிவை ஆரம்­பித்­துள்­ள­தாக ஐமான் அல்-­ஸ­வாஹ்ரி தெரி­வித்தார். இந்தப் பிரிவு இந்­திய துணைக்­கண்டம் முழு­வதும்  இஸ்­லா­மிய ஆட்­சியை நிறு­வு­மென அவர் கூறினார்.

இந்­தி­யாவின் அஸாம், குஜராத், காஷ்மீர் மாநி­லங்­களில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு இழைக்­கப்­படும் கொடு­மைகள் மற்றும் அநீ­தியில் இருந்து அவர்­களைக் காப்­பாற்றப் போவ­தா­கவும் அவர் உறு­தி­ய­ளித்தார்.

ஒரு முக்­கி­ய­மான சந்­தர்ப்­பத்தில் அல்-­கைதா தலை­வரின் எச்­ச­ரிக்கை வெளி­யா­னது. அந்த அமைப்பு, எந்தத் தாக்­குதல் மூலம் உல­கத்தின் கவ­னத்தை ஈர்த்­ததோ, அந்தத் தாக்­கு­தலின் ஆண்டு நிறைவு நெருங்கும் சம­யத்தில் தமது இருப்பை ஞாப­கப்­ப­டுத்­தினார், அல்-­ஸவாஹ்ரி.

விமா­னங்­களைக் கடத்தி நியூயோர்க் உலக வர்த்­தக நிலைய இரட்டைக் கோபு­ரங்கள் உள்­ளிட்ட இலக்­கு­களை அல்-­கைதா வலைப்­பின்னல் தாக்கி, எதிர்­வரும் செப்­டெம்பர் 11ஆம் திக­தி­யுடன் 13 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன.

அல்-­-ஸ­வாஹ்­ரியின் வீடி­யோவைத் தொடர்ந்து இந்­தி­யாவில் எச்­ச­ரிக்கை சங்கு ஊதப்­பட்­டது. இந்­திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புல­னாய்வு நிபு­ணர்­களைக் கூட்­டினார். இந்த வீடியோ உண்­மை­யா­னது தானா என்­பதை ஆரா­யு­மாறு பணித்தார்.

அதன் பின்னர், இந்­திய பாது­காப்­புத்­துறை உய­ர­தி­கா­ரிகள் கூடி, அச்­சு­றுத்தல் பற்றி பரி­சீ­லனை செய்­தார்கள். தொடர்ந்து, இந்­தி­யாவின் அனைத்து மாநி­லங்­க­ளுக்கும், பாது­காப்பு நிறு­வ­னங்­க­ளுக்கும் தகுந்த முற்­பா­து­காப்பு நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு ஆலோ­சனை விடுக்­கப்­பட்­டது.

அமெ­ரிக்கா மீதான தாக்­கு­த­லுக்குப் பொறுப்­பான அமைப்பு, தமது நாட்டை நோக்கி ஜிஹாத் போராட்­டத்தை விஸ்­த­ரிக்­கி­றது என்ற செய்தி இந்­தி­யர்கள் மத்­தியில் கலக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

இஸ்­லா­மிய கடும்­போக்கு சக்­தி­களின் அடா­வ­டித்­த­னங்கள் தமக்குப் புதி­தல்ல என்­பதை இந்­தி­யர்கள் நினை­வு­கூர்ந்­த­போ­திலும், அல்–­கை­தாவின் ஊடு­ருவல் பற்­றிய அச்சம் அவர்­களை சற்று அதி­க­மாக ஆட்டிப் படைக்­கி­ற­தென ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டன.

இந்­தியா பற்றி அல்-­கைதா பேசு­வது, இது முதற்­த­டவை அல்ல. 2001ஆம் ஆண்டில் இதே போன்­ற­தொரு காணொ­ளியின் மூலம் இந்­திய இஸ்­லா­மி­யர்­க­ளுக்கும் ஐமான் அல்-­-ஸவாஹ்ரி அறை­கூவல் விடுத்­தி­ருந்தார்.

ஆப்­கா­னிஸ்தான், காஷ்மீர், பொஸ்­னி­யா-­ஹெர்­ஸி­கொ­வினா, செச்­சன்யா ஆகிய பிராந்­தி­யங்­களில் போராட வர­வேண்டும் என்­பது அன்று அவர் விடுத்த கோரிக்கை. அப்­போது இல்­லாத பயம் இப்­போது தோன்­றி­யி­ருக்­கி­றது என்றால், அதற்கும் கார­ணங்கள் இருந்­தன.

இதில் முக்­கி­ய­மான காரணம், அல்-­-ஸவாஹ்ரி அன்று ஆப்­கா­னிஸ்­தா­னுக்கும், இன்று இந்­தி­யா­விற்கும் அளித்த முக்­கி­யத்­துவம். கடந்த புதன்­கி­ழமை இணை­யத்தில் சேர்த்த காணொ­ளியில், இந்­தி­யாவில் ஜிஹாத் போராட்­டத்தை விஸ்­த­ரிப்­பது பற்றி அவர் அதிகம் பேசி­யி­ருந்தார்.

இந்­தி­யாவில் நிகழ்ந்த அர­சியல் மாற்­றத்தை இரண்­டா­வது கார­ண­மாகக் குறிப்­பி­டலாம். இஸ்­லா­மிய குழுக்­களின் சந்­தேகக் கண்­கொண்டு நோக்கும் நரேந்­திர மோடியின் இந்து தேசி­ய­வாத பார­திய ஜனதா கட்சி தலை­மை­யி­லான அர­சாங்கம் ஆட்சி நிர்­வா­கத்தை பொறுப்­பேற்று 100 நாட்கள் கழிந்த நிலையில், அல்-­-கை­தாவின் அறி­வித்தல் வெளி­யா­கி­யி­ருக்­கி­றது.

இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில், இஸ்­லா­மிய கடும்­போக்கு அமைப்­புக்­களின் செயற்­பா­டுகள் புதி­ய­வை­யல்ல. ஜம்­மு-­-காஷ்மீர் மாநி­லத்தில் இந்­தி­யாவின் ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைத்து, அந்தப் பிராந்­தி­யத்தை பாகிஸ்­தா­னுடன் இணைப்­ப­தற்­காக ஆயுதப் போராட்டம் நடத்தும் லஷ்கார் ஈ-தொய்பா முதற்­கொண்டு, மேற்­கு­லகின் உலோ­கா­தய கலா­சா­ரத்தின் பிடியில் இருந்து இந்­தி­யாவை விடுத்து இஸ்­லா­மிய கோட்­பா­டு­க­ளுக்கு அமைய வாழும் முஸ்லிம் சமு­தா­யத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக போராடும் சிமி (இந்­திய இஸ்­லா­மிய மாணவர் இயக்கம்) வரை எத்­த­னையோ குழுக்கள் இருக்­கின்­றன.

தெற்­கா­சிய பிரந்­தியம் முழு­வ­திலும் இஸ்­லா­மிய இராஜ்­ஜி­யத்தை ஸ்தாபிப்­ப­தற்­காக ஆயுதப் போராட்டம் நடத்தும் இந்­தியன் முஜா­ஹிதீன் என்ற அமைப்­பையும் மறந்து விட முடி­யாது.

இந்த அமைப்­புக்கள் இந்­தி­யாவின் எல்­லை­களைப் பாது­காப்­பற்­ற­வை­யாக மாற்­றி­யி­ருப்­ப­துடன், முக்­கி­ய­மான நக­ரங்­களில் குண்டுத் தாக்­கு­தல்­களை நடத்தி சிவி­லி­யன்­க­ளையும் கொன்­றி­ருக்­கின்­றன.

பாகிஸ்தான் உள்­ளிட்ட அயல்­நா­டு­க­ளுடன் இந்­தியா கொண்­டுள்ள உற­வு­களை சீர்­கு­லையச் செய்­வ­திலும், இந்­தி­யாவின் பல மாநி­லங்­களில் மதக்­க­ல­வ­ரங்­களைத் தூண்டி விடு­வ­திலும் இத்­த­கைய கடும்­போக்கு அமைப்­புக்கள் கொண்­டுள்ள வகி­பாகம் புறக்­க­ணிக்க முடி­யா­த­தாகும்.

இன்று மும்­பை­யிலோ, புது­டில்­லி­யிலோ, காசி­யிலோ வாழும் சரா­சரி இந்­தியர் ஒருவர் குண்டுத் தாக்­கு­தல்கள் பற்­றிய பீதி­யுடன் வாழ்­வா­ராயின் அல்­லது பாது­காப்­பற்ற உணர்வைக் கொண்­டி­ருப்­பா­ராயின், அதற்குக் காரணம் கடும்­போக்கு முஸ்லிம் அமைப்­புக்­களின் செயற்­பா­டுகள் தான்.

இத்­த­கைய சூழ்­நி­லையில், அல்-­கை­தாவின் இந்­தியத் துணைக் கண்ட ஊடு­ருவல் பற்­றிய அறி­வித்­தலை ஆராய வேண்­டி­யி­ருக்­கி­றது. இந்த வலைப்­பின்­னலின் பிர­தான போராட்டக் களம் ஆப்கான், – பாகிஸ்தான் ஆகிய நாடு­களின் பொது எல்லை அமைந்­துள்ள பிர­தே­ச­மாகும்.

இந்தப் பிராந்­தி­யத்தை எந்த நோக்­கத்­திற்­காக அல்–­கைதா தலை­வர்கள் தேர்ந்­தெ­டுத்­தார்­களோ அந்த நோக்கம் இன்­னமும் நிறை­வே­ற­வில்லை. இங்கு ஆரம்­பித்த ஜிஹாத் போராட்டம் நலி­வ­டைந்­தி­ருக்­கி­றது.

அல்-­-கை­தா­வுடன் இணைந்து செயற்­பட்டக் குழுக்கள் சித­றி­யி­ருக்­கின்­றன. பாது­காப்பும் கேள்­விக்­கு­றி­யாக மாறி­யி­ருக்­கி­றது. ஈராக்கை எடுத்துக் கொண்டால், அங்கும் அல்-­கைதா வலைப்­பின்னல் முக்­கி­யத்­து­வத்தை இழந்­தி­ருக்­கி­றது.

அதன் போராட்­டத்தை முன்­னெ­டுத்துச் செல்லும் தலை­யாய பொறுப்பை ‘இஸ்­லா­மிய இராஜ்­ஜியம்’ என்ற பெயரால் இயங்கும் குழு தானா­கவே சிர­மேற்­றுள்­ளது. அல்-­-கை­தாவின் கோட்­பா­டுகள் மற்றும் வியூ­கங்­க­ளுடன் மாறு­பட்டு நிற்­கக்­கூ­டிய கொடூ­ர­மான பாதையை ஐ.எஸ். தேர்ந்­தெ­டுத்­த­போ­திலும், இன்று சகல கடும்­போக்கு சக்­தி­களும் அதனைச் சுற்றி அணி திரண்­டுள்­ளன.

இன்று அல்-­கை­தாவை எல்­லோரும் மறந்து விட்­டார்­களா என்ற கேள்வி கேட்­கக்­கூ­டிய அளவுக்கு நிலைமை மோச­மா­கி­யி­ருக்­கி­றது.

ஒரு இலக்கு நோக்­கிய போராட்­டத்தில் இலட்­சி­யங்­களை அடை­வ­தற்கு முன்னர் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்­டிய தேவை, அல்–­கை­தா­விற்கு எழுந்­துள்­ள­தாக கருத முடியும்.

‘இதோ பாருங்கள்! நாங்­களும் இருக்­கிறோம். எமது செல்­வாக்கு மறைந்து விட­வில்லை,’ என்று பறை­சாற்றிக் கொள்ள வேண்­டிய அவ­சியம் அதற்கு ஏற்­பட்­டுள்­ள­தென கரு­து­வதில் தவ­றேதும் இருக்க மாட்­டாது. ஐ.எஸ், அல்–­கைதா ஆகி­யவை வெவ்வேறு பாணியில் செயற்­படும் வேறு­பட்ட அமைப்­பு­க­ளாக இருக்கும் சம­யத்தில், ஐ.எஸ் இற்கும், அல்-­-கை­தா­விற்கும் தனித்­தனி இஸ்­லா­மிய இராஜ்­ஜி­யங்கள் இருக்க முடி­யாது.

இஸ்­லா­மிய இராஜ்­ஜியம் தான் இறுதி இலக்­கென்றால், அது ஐ.எஸ் இற்கு சொந்­த­மா­ன­தாக இருக்க வேண்டும் அல்­லது அல்-­-கை­தா­விற்கு சொந்­த­மா­ன­தாக இருத்தல் அவ­சியம்.

இந்த அவ­சி­யத்தின் மத்­தியில், ஐ.எஸ் அமைப்பின் இலக்கில் இருந்து தமது இலக்­குகள் வேறு­பட்­டவை என்று உல­கிற்கு எடுத்­து­ரைப்­பது ஐமான் அல்-­-ஸ­வாஹ்­ரியின் நோக்­க­மாக இருந்­தி­ருக்­கலாம்.

உலகின் பல நாடு­களைச் சேர்ந்த கடும்­போக்கு இஸ்­லா­மி­யர்கள் ஐ.எஸ் அமைப்பை நோக்கி காந்தம் போல் ஈர்க்­கப்­படும் சந்­தர்ப்­பத்தில், தமது அமைப்­பிற்கும் ஆட்­சேர்ப்பு செய்ய வேண்­டிய தேவை அவ­ருக்கு எழுந்­தி­ருப்­ப­தா­கவும் கருத முடியும். இதற்கு இந்­திய துணைக்­கண்டம் தான் சிறந்த களம் என்று அல்-­கைதா தலைவர் கணக்குப் போட்­டி­ருக்­கலாம்.

இந்­திய துணைக்­கண்­டத்தில் வாழும் முஸ்­லிம்கள் மத்­தியில் பாது­காப்­பற்ற உணர்வு துளிர்த்­த­போ­திலும், அது ஐமான் அல்-­-ஸவாஹ்ரி போன்­ற­வர்கள் போதிக்கும் கடும்போக்கு இஸ்லாமிய சிந்தனையாக முழுமையாக பரிணமிப்பது கடினம் என்பதை இந்தியாவின் அனுப வம் எடுத்துரைக்கிறது.

உள்­ளே­யி­ருந்தும் வெளியில் இருந்தும் எத்­த­னையோ அழுத்­தங்­க­ளையும் பிரச்­சினை­க­ளையும் எதிர்­கொண்­ட­போ­திலும், இந்­திய முஸ்­லிம்கள் இஸ்­லா­மிய கடும்­போக்கு அமைப்­புக்­களை முழு­மை­யாக அங்கீகரித்ததும் இல்லை, வளரவிட்டதும் இல்லை.

தாம் வாழும் அரசியல், சமூக, பொருளாதார கட்டமைப்பிற்கு அவர்கள் சவால் விடுத்தபோதிலும், அதனைத் தகர்த்தெறிந்துச் செல்வதன் மூலம் தான் விடுதலை கிடைக்கும் என்ற எண்ணம் இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் சிந்தித்தது கிடையாது. இவ்வாறு சிந்தித்திருந்தால், ஈராக், சிரியா ஆகிய நாடுகளைப் போன்று இந்திய துணைக்கண்டத்திலும் இரத்த ஆறு பெருக்கெடுத்தோடி இருக்கும்.

இன்று ஐ.எஸ் இயக்­கத்தின் அசுர வளர்ச்­சி­யி­னது முன்­னி­லையில், அல்-­கை­தாவின் இருப்பை பறை­சாற்­று­வ­தற்­கா­கவும், பிர­சாரம் தேடிக் கொள்­வ­தற்­கா­கவும் இந்­திய துணைக்­கண்­டத்தில் கால்­ப­திக்க நினைக்­கின்ற ஐமான் அல்-­-ஸவாஹ்ரி, இந்த உண்­மையைப் புரிந்து கொள்­ளாமல் தமது கணிப்­பீ­டு­களில் தவ­றி­ழைத்து விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

Exit mobile version