ilakkiyainfo

ஒரு வல்லரசு தேசம் உருவாகிய அந்த நாள்!!

2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பதினோராம் திகதி சரியாக மணி காலை 8.46 அமெரிக்கா என்னும் உலகின் மிகப்பெரிய வல்லரசு தேசத்தின் தோற்றமே மாறிப்போன தருணம் அது.

மணிக்கு சில நூறு மைல்கள் வேகத்தில் ஒரு விமானம் பறந்து வந்தது. அது தாங்கிவந்த எரிபொருளின் நிறை சுமார் பத்தாயிரம் கலன்கள். அமெரிக்காவின் லோயர் மன்ஹாட்டனில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடத்தின் வடக்கு கோபுரத்தின் மீது வந்த வேகத்திலேயே மோதியது, பத்தாயிரம் கலன்கள் எரிபொருளைத் தாங்கிவந்த அந்த விமானம்.

இது முதல் விமான மோதல்.

இனி இரண்டாவது, அது குறிவைத்ததோ தெற்கு கோபுரத்தை. அந்த விமானம் சரியாக மணி 9.03 இருக்கும், வந்த வேகத்திலேயே தெற்கு கோபுரத்தை மோதி தகர்த்தது. இவ்விரு விமானங்களும் வந்து மோதிய வேகத்தில் பெரும்வெடிப்பு ஏற்பட்டு அந்தப் பகுதியே புகைமூட்டமாகக் காணப்பட்டது.

விமானங்கள் மோதி அதனால் ஏற்பட்ட சேதத்தில் இரு கோபுரங்களும் இருந்த இடம்தெரியாமல் உதிர்ந்து விழ ஆரம்பித்துவிட்டன. அதுவும் கொஞ்சநேரத்திலேயே தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன.

இரு கோபுரங்களிலிருந்தும் இரும்பு, கண்ணாடி மற்றும் மனித உடல்கள் சாம்பல் சாம்பலாக மொத்த மொத்தமாகவே எரிந்துகீழே விழுந்தன.

அடுத்து அதே தினம் காலை 9.37க்கு மூன்றாவதாக ஒரு விமானம் அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் கட்டடத்தின் மேற்குப் பகுதியில் சீறி வந்து மோதியது.

அடுத்தது நான்காவது விமானம். இது தன் இலக்கை தவறவிட்டுவிட்டது. சரியாக மணி 10.03 இருக்கும் தெற்கு பென்சில்வேனியாவில் வயல்வெளியில் விழுந்து நொறுங்கிப்போனது.

உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இரு கோபுரம் மீது விமானத்தினால் தாக்கப்பட்டதால் உயிர்ச் சேதம் மட்டும் 2600 பேர் வரை… பென்டகன் தாக்குதலில் 125 பேர் வரை இறந்தார்கள்.

மொத்தமாக கடத்தப்பட்டது நான்கு விமானங்கள், இந்த நான்கு விமானங்களிலிலும் இருந்த மொத்த பயணிகள் 256 பேர். அத்தனைப் பயணிகளும் இறந்துபோனார்கள்.

இவ்வளவு பெரிய சோகத்தை அமெரிக்காவுக்கு தந்தது யார் என்று தேடிய அமெரிக்கத் தரப்புக்கு யார் என்பதைக் கண்டுபிடிக்க அதிகநேரம் ஆகவில்லை.

சம்பவம் நடந்த இருபத்திநான்கு மணித்தியாலத்துக்குள் யார் இந்த தாக்குதலை மேற்கொண்டார்கள் என்ற முடிவுக்கு வருவதற்கு இரண்டு தரப்பில் மட்டுமே அவர்கள் ஆராய்ந்தார்கள்.

முதலாவது அல்கொய்தா!

இரண்டாவது ஈராக் அரசு!

இந்தளவு பிரம்மாண்டமான தாக்குதலை அதுவும் அமெரிக்க விமானங்களை கடத்தி அமெரிக்காவுக்கே அடிப்பதென்பது சாதாரண விடயமா என்ன? அதனால் இந்த பலம் ஈராக்கிற்கு இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டது அமெரிக்கா.

அப்போ? இந்த பிரம்மாண்ட திட்டத்தை செயற்படுத்தும் அளவுக்கு ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா இயக்கத்தைத் தவிர வேறு யாராலும் முடியாது என்பதை அமெரிக்கா அறிந்தே வைத்திருந்தது.

காரணம் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தைத் தவிர அத்தனைப் பெரிய நெட்வேர்க்கும் பணபலமும் வேறு யாருக்கும் கிடையாது என்பது அமெரிக்கா நன்கே தெரிந்த ஒன்று.

அமெரிக்கா வளர்த்த கடா இல்லையா அல்கொய்தா… அவர்களுக்கு தெரியாதா வளர்த்த கடாவின் பலமும் பலவீனமும்.

அதேநேரத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்குவது என்பதில் ஒசாமா பின்லேடனுக்கு மட்டும்தான் முன் அனுபவம் உண்டு என்பதும் அவர்களுக்குத் தெரியும். காரணம் அமெரிக்காவுக்கு தாக்கியதால்தான் அவர்களுக்கே இந்த அனுபவம் கிடைத்தது.

கென்யாவிலும் அதே நேரம்  தான்ஸானியாவிலும் ஒரே நேரத்தில் அமெரிக்கத் தூதரகங்களைத் தாக்கியது மட்டுமல்லாமல் ஒரே சமயத்தில் பன்னிரெண்டு அமெரிக்க விமானங்களைத் தாக்கத் திட்டம் தீட்டியது வரை மிகப்பெரிய சம்பவங்களை செய்தும் செய்ய திட்டமிட்டதும் ஒசாமாவின் அல்கொய்தா மட்டும்தான் என்பதுதான்.

செப்டெம்பர் 11 தாக்குதல் என்பது அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சிதான். அதில் எள்ளளவிற்கேனும் சந்தேகமில்லை. ஆனால் வியந்து நிற்கும் அளவு அமெரிக்கா அதை எதிர்பார்க்காத ஒரு விடயமும் அல்ல!

வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்று ஊடகங்கள் சொன்னது. கடாவை வளர்த்துவிட்டவர்களே மார்பில் பாய்ந்தார்களே என்று அல்கொய்தா தரப்புச் சொன்னது…

இந்தத் தாக்குதல் நடந்து இன்றோடு 13 வருடங்கள் ஆகின்றன. யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கொரு திட்டத்தை தீட்டி அதை நடத்தி காட்டிய அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனையும் அமெரிக்கா கொன்று மூன்று வருடங்கள் ஆகின்றன.

13 வருடங்கள் கழித்து இந்தத் தாக்குதலைப் பற்றி நினைவுகூரும் அதே வேளை… இப்படியொரு சம்பவம் இந்தக் காலகட்டத்தில் இந்த நகரில் இந்தக் கட்டடத்தின் மீது நடக்கும். தாக்குதல் தீவிரவாதத் தலைவன் நடத்துவான் என்று 600 வருடங்களுக்கு முன்பே ஆருடம் கூறப்பட்டுவிட்டது.

அந்த ஆருடம் பற்றித்தான் இனி நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

amsadamஉலகில் பல தீர்க்கதரிசிகள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் மிகமுக்கியமானவராகக் கருதப்படுவர் நொஸ்ட்ரடாமஸ். இவரின் பல தீர்க்கதரிசனங்கள் அவர் சொன்ன காலப்பகுதியில் அவர் சொன்னமாதிரியே நடந்திருப்பதுதான் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

அதிலும் அவர் சொன்ன தீர்க்கதரிசனத்தில் நடந்த ஒன்றுதான் அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதல்.

1503ஆம் ஆண்டு தொடக்கம் 1566ஆம் ஆண்டுவரை பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த மைக்கல் தி நொஸ்ட்ரடாமஸ் வரும்காலத்தைக் கணித்துச் சொல்லியிருக்கிறார். அவர் கைப்பட எழுதிய அந்த நூல் இத்தாலியில் ஒரு நூலகத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

In the year of the new century and nine months,

From the sky will come a great King of Terror.

The sky will burn at forty-five degrees.

Fire approaches the great new city

XXXX

Five and forty degrees, the sky shall burn:

To the great new city shall the fire draw nigh.

With vehemence the flames shall spread and churn

When with the Normans they conclusions try.

இதுதான் செப்டெம்பர் தாக்குதல் பற்றி நொஸ்ட்ரடாம்ஸால் எழுதப்பட்ட பாடல். இது செய்யுள் வடிவில் லத்தீன் மொழியில் எழுதப்பட்டது. பின் இதை ஆராய்ச்சியாளர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்கள்.

புதிய நூற்றாண்டின் ஒன்பது மாத முடிவில்

வானத்திலிருந்து ஒரு பயங்கர ராஜா வருவான்

நாற்பத்தைந்து பாகையில் வானம் தீப்பற்றி எரியும்

பெரும் தீ புதிய நகரை அணுகும்

இது முதல் பாடலின் செய்யுள். புதிய நூற்றாண்டு என்பது 21ஆம் நூற்றாண்டைக் குறிக்கும். ஒன்பதாவது மாதம் செப்டெம்பர்தான் என்பது உறுதி. பூகோள அளவில் பார்த்தால் நியூயோர்க் நாற்பது பாகையில் டிகிரியில்தான் அமைந்திருக்கிறது.

வானத்திலிருந்து வந்த பயங்கர ராஜா அந்த விமானங்களைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள். பெரும் தீ பற்றிக்கொண்டுதானே இரண்டு கோபுரமும் தரைமட்டமானது.

நாம் மேலே ஒரு படத்தைத் தந்திருக்கிறோம். அது நொஸ்ட்ரடாம்ஸால் வரையப்பட்டது. அவர் செய்யுள்களை எழுதி அதற்கேற்றாற்போல் பல ஓவியங்களையும் வரைந்திருக்கிறார்.

ஒரு கட்டிடம் எரிவது போன்று வரையப்பட்டுள்ளது அந்த ஓவியம். இது தான் 2001.09.11 அன்று அமெரிக்க இரட்டை கோபுரத்துக்கு நடந்த விபரீதத்தை விளக்குவதற்காக… நோஸ்ராடாமஸால் வரையப்பட்ட படம் என கருதப்படுகிறது.

இது தொடர்பான அவரது குறிப்பிலும்… “ஒரு புதிய நகரத்தை… விண்ணிலிருந்து வரும் இயந்திர பறவைகள் தாக்கியழிக்கும்..” எனும் பொருள் பட எழுதியுள்ளாராம். அந்த புதிய நகரம் எனும் வார்த்தை நியூயோர்க்கை குறிப்பதாக கருதப்படுகிறது. இயந்திர பறவைகள் என்பது… விமானத்தைத்தான் அவர் சங்கேத பாஷையில் விவரிக்கிறார்.

ஆனால்… இன்னொரு குறிப்பில் “விண்ணிலிருந்து வரும் நெருப்பு கற்கள் புதிய நகரை நிலை குலைய செய்யும்…” எனும் பொருள்பட கூறியுள்ளார். அதுவும் இதே சம்பவத்தை குறிப்பதாக இருக்கலாம்.

அல்லது… 3ஆம் உலக யுத்தத்தின் போது நடக்க இருக்கும் அணுகுண்டு தாக்குதல்களை குறிப்பதாகவும் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

இந்த ஒன்றை மட்டும்வைத்து அவர் சொன்னதெல்லாம் நடக்கிறது என்று எப்படி எடுத்துக்கொள்வது என்று நீங்கள் கருதினால் இதோ இன்னும் சில உதாரணங்கள்.

அண்மையில் இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடியைப் பற்றியும் அவர் சொல்லியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் பரவலாக வந்தன.

அதுமட்டுமா, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கென்னடி சுட்டுக்கொலைசெய்யப்படுவது, ஆபிரகாம் லிங்கன் கொலைசெய்யப்படுவது. இந்திராகாந்தி தனது மெய்பாதுகாவலராலேயே சுடப்பட்டு கொல்லப்படுவார் என்றும்கூட அவர் எழுதி வைத்திருக்கிறார்.

பழுதான ஒரு அப்பிளினால் பெரும்சேதம் ஏற்படும். அந்த நாட்டுக்கே அது பாரதூரமான ஒரு கறையை ஏற்படுத்தும் என்றுகூட அவருடைய ஒரு செய்யுள் சொல்கிறது. அது அப்போலோ விண்கலம் வான்வெளியில் வெடித்துச் சிதறியதே அதைப்பற்றித்தான்.

இவ்வுலகில் இனிவரும் காலங்களில் என்னென்ன நடக்கும் என்பதனை அவர் எழுதிவைத்திருக்கிறார். அவை நடக்கலாம் நடக்காமலும்போகலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version