இனிமேல் சிங்களவனுக்கு எதிராக போராடப் போகும் அடுத்த தேசியத்தலைவா் கடந்த சிலதினங்களுக்கு முன் தமிழரசுக்கட்சியால் தெரிவுசெய்யப்பட்டார். அவா்தான் மாவை சேனாதிராஜா அவா்கள்.
மாவை சேனாதிராஜா தான் தலைமைப் பதவிக்கு வந்தவுடன் இனப்பிரச்சனையைத் தீா்ப்பதற்குள் சிங்கள அரசிற்கு மூன்று மாதகால அவகாசம் கொடுத்துள்ளார்.
அதற்குள் தமிழா்களுக்கு சரியான முறையில் அதிகாரம் கொடுக்கப்படாவிட்டால் அகிம்சைப் போரில் குதிக்கப் போவதாகவும் சூளுரைத்துள்ளார்.
அகிம்சைப் போர் என்பதன் அா்த்தம் என்னவென்று அவா் விளக்கமாகச் சொல்லாவிட்டாலும் பெரும்பாலும் ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதையே அவா் அகிம்சைப் போர் எனத் தெரிவித்திருக்கலாம்.
அல்லது இந்தியாவுக்கு ஓடிப்போவதைக் கருத்தில் வைத்துச் சொல்லியிருக்கலாம். ஆனால் அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதனது செயல், எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது! எது நடக்கவிருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்! என்ற கீதையின் கருத்தை மையப்படுத்தி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
மாவை சேனாதிராஜாவுக்கு அடுத்த தேசியத்தலைவா் பதவி பொருத்தமாக இருக்கின்றதா எனப் பார்த்தால் அதில் பெருமளவு பலவீனம் இருக்கி்ன்றது, அந்தக்காலத்தில் மாவை சேனாதிராஜாவும் தமிழ் இராணுவம் என்ற புரட்சிப்படையை அமைத்து சிங்களவருக்கு எதிராகச் சண்டையிட்டவா் என பலா் தெரிவிக்கின்றனா்.
ஆனால் அவா் புலிகள் உருவாகிய பின்னா் அந்த இராணுவத்தைக் கலைத்துவிட்டதாகவும் தெரியவருகின்றது, அதனால் அவா் தமிழ்மக்களின் அடுத்த தேசியத்தலைவராக வாய்பில்லாத நிலைக்கு வந்துவிட்டார்.
தமிழீழத் தேசியத்தலைவா் என்றால் தன்னைப் பார்த்து தனக்கு நேரே கரையும் காகத்தையும் சுட்டுக் கொன்று துரோகிப் பட்டம் கொடுத்திருக்க வேண்டும்.
எதிரிகளை எதிர்ப்பதிலும் பார்க்க தமது குறைகளைப் பார்த்து அதனை சுட்டிக்காட்டும் ஒருவரையும் விட்டு வைக்காது முடித்திருக்க வேணும். அத்துடன் தனது பக்கத்தில் இருந்து தனக்கு நிகராக யார் வந்தாலும் அவா்களை அழித்து ஒழித்திருக்க வேண்டும். ஆனால் மாவை சேனாதி அவ்வாறு செய்யவில்லை.
ஆனால் மாவை சேனாதிராஜாவுக்கு அடுத்ததாக யார் அடுத்த தேசியத்தலைவா் என்ற பேராட்டம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிவிட்டது. 60 வயதுக்குக் குறைந்த இளம் மட்டங்கள் அதற்கான ஆயத்தத்தை தற்போதே செய்து வருகின்றன. இந்தத் தமிழ்த் தேசியத்தலைவா் நிலைக்கு ஒருவா் பெரும் அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்.
அவா்தான் கிளிநொச்சி கூட்டமைப்பு எம்.பி சிறிதரன் அவா்கள். வடக்கு மாகாணசபை தோ்தலின் போது அவா் தனது நேரடி எதிரியான ஈ.பி.டி.பி கட்சி வேட்பாளா்களை எதிர்த்து செயற்பட்டதிலும் பார்க்க, தனது கட்சியின் ஆனந்தசங்கரியின் உறுப்பினா்களைக் கவிழ்ப்பதில் பல மடங்கு எதிர்த்துச் செயற்பட்டுள்ளார்.
அத்துடன் தமிழரசுக்கட்சியுடன் கூட்டுச் சோ்ந்துள்ள ஏனைய கட்சி உறுப்பினா்களுக்கும் உபத்திரமான ஒருவராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
கடந்த (07) ஞாயிறு வவுனியாவில் நடைப்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட தன்னை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைப்பிரயோத்தை மேற்கொண்டு பேசியதோடு மட்டுமன்றி கொலை அச்சுறுத்தலும் விடுத்ததாக கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் டொமினிக் அன்ரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
டொமினிக் அன்ரன் ஒரு புளொட் உறுப்பினராவாா். இவா் ஞாயிறு அன்று காலை தமிழரசு கட்சியின் தேசிய பேராளர் மாநாடு நடைப்பெற்ற வவுனியா நகர மண்டபத்தில் தனது நண்பர்களுடன் இருந்த வேளை அங்கு தனது ஆட்களுடன் வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எவ்வித கேள்விகளும் இன்றி எடுத்த எடுப்பிலேயே சரமாரியாக பலர் முன்னிலையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் அவர்களை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைப் பிரதேயாகங்களை மேற்கொண்டு பேசியது மட்டுமன்றி தான் புலி நீ புளொட் உன்னை கொன்று போடுவன் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.
இதனால் சிறிது நேரம் மாநாட்டு மண்டபத்தில் பதற்றமும் நிலவியது. தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அநாகரீகமாக நடந்தகொண்டமையினால் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் டொமினிக் அன்ரன் பாராளுமன்ற உறுப்பினரை நோக்கி முதலில் நீர் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்குரிய கௌரவத்தோடு நடந்துக்கொள்ள தெரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறிவிட்டு மண்டபத்தை விட்டுவெளியேறிவிட்டார்.
கிளிநொச்சியில் புளொட் அமைப்பின் ஆதரவுத்தளம் மக்களிடையே மீளவும் உருவாகி வருகின்றமையை பொறுக்க முடியாத சூழ்நிலையில் சிறிதரன் அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டார் என அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் தேசியமகாநாட்டில் தனக்கு முக்கிய பதவி தருவதாகத் தெரிவித்தவா்கள் பின்ன சாதாரன ஒரு கட்சி உறுப்பினருக்கு கொடுக்கும் பதவியை தனக்கு தந்ததையிட்டு அதைக் கோபத்துடன் நிராகரித்துள்ளார் சிறிதரன்.
அதன் பின்னா் தனது ஊடகத்தில் அதை பெரிதாக பீற்றி பிரளயப்படுத்திய பெருமையும் இவரை அடு்த்த தேசியத்தலைவா் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது,
இவ்வாறு இவா் பல தரப்பட்ட நடவடிக்கைகளை முன்னைய தமிழ்த்தேசியத்தலைவா் செய்தது போல் செய்து வருகின்றார். ஆனால் இவருக்கு ஒரே ஒரு குறை உள்ளது.
அதுதான் துவக்கு துாக்கத் தெரியாத குறை. தற்போது துவக்கு துாக்கினால் என்ன நடக்கும் என்பது இவருக்கு தெரிந்திருக்கின்றது, துவக்குக்குப் பதிலாக கெற்றப்போல் கொண்டு படையினரைத் தாக்கும் சண்டையை சிலவேளை சிறிதரன் எடுக்க கூடும். ஏனெனில் சிறிதரனுக்கு தேவை தமிழ்த்தேசியத் தலைவராகும் எண்ணமே தவிர வேறொன்றும் இல்லை.
யாழ் வெடிவேலு