இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் அரசியல் நோக்கங்களைக் கொண்டது என்றும் அளவுக்கு அதிகமானது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
யுத்தத்திற்க்கு பிந்திய இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் உள்ள சிலரின் தீய நோக்கத்திற்கு துரதிஸ்டவசமாக பலியாகியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் நாடு எட்டியுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை மனித உரிமை பேரவை கணக்கிலெடுக்கவில்லை என்றும் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை சில தீய சக்திகளால் அளவுக்கு அதிகமாக இலக்கு வைக்கப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையை விட உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டிய பாரிய பிரச்சினைகள், விடயங்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் இறைமையை கணக்கிலெடுக்காது உலக நாடுகள் அந்நாட்டு விடயங்களில் தலையிடுவது சிறந்ததல்ல என கூறியுள்ள ஜனாதிபதி, ஐ.நா மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகள் நியாயமற்றது எனவும் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமெனவும் பக்கச்சார்பற்ற தன்மையை உறுதி செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
நிதி உதவிகளை வழங்கும் தரப்பினரின் பணயக் கைதியாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிறுவனங்கள் செயற்படுவதனை நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சர்வதேச ரீதியான சவால்களுக்கு நீடித்து நிலைக்கக் கூடிய தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என கூறியுள்ள ஜனாதிபதி, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு எதிராக தன்னிச்சையான பொருளாதார தீர்மானங்களை இலங்கை எதிர்ப்பதாகக் கூறியுள்ளார்.
நாடுகள் தொடர்பிலான விவகாரங்களின் போது ஐக்கியநாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்கள் கடுமையான கொள்கைகளை பின்பற்றுவதனை தவிர்க்க வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
கியூபா மீது ஏதேச்சாதிகார போக்கில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கியூபா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டமை நியாயமற்றது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதம் உலகின் அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளததாகவும் பயங்கரவாதம் காரணமாக ஏற்படக் கூடிய பாதக விளைவுகளை இலங்கை நன்கு உணர்ந்து கொண்டுள்ளதாகவும், பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
இலங்கையின் சகல மக்களினதும் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எதிரிகளுடனும் நட்பு பாராட்டும் வெளியுறவுக் கொள்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு சர்வதேச சமூகம் காத்திரமான வகையில் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சபையின் 69ஆவது பொதுச்சபை அமர்வில் பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை நேரப்படி இன்று வியாழக்கிழமை உரையாற்றினார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு காணலாம். (படங்கள் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு)