Site icon ilakkiyainfo

பலமுறை கையெடுத்துக் கும்பிட்டும் பரிதாபமாய் பலியாகிய இளைஞன்!! (நேரடி வீடியோ)

டெல்லி உயிரியல் பூங்காவில் 22 வயது இளைஞர் ஒருவர் வெள்ளைப்புலி ஒன்றால் அடித்து கொல்லப்படும் வீடியோ காட்சியானது வலைத்தளங்களில் பரபரப்பாக பேசுப்படும் விடயமாக மாறியுள்ளது.

இச்சம்பவம் கடந்த 23 ஆம் திகதி பகல் 1.30 மணியளவில் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புலி அடைக்கப்பட்டிருந்த வேலிப்பகுதியின் அருகே நின்று அந்த இளைஞர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது உள்ளே இருந்த காய்ந்த தடாகத்தினுள் தவறி விழுந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அங்கிருந்த வெள்ளைப்புலி பாய்ந்து வந்து அந்த இளைஞரை அடித்து இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த இளைஞர் எவ்வாறு உள்ளே விழுந்தார் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. சிலர் அந்த தடுப்பு வேலி மீது இளைஞர் அமர்ந்திருந்தபோது உள்ளே விழுந்ததாகவும், வேறு சிலர் தடுப்பு வேலிக் கம்பியின் உயரம் மிகவும் தாழ்வாக இருந்ததாகவும், இதன் காரணமாகவே அந்த இளைஞர் உள்ளே விழுந்ததாகவும் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “புலி இருந்த பகுதிக்குள்ளிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டதும் ஓடிச் சென்று வேலிக்கு அருகே சென்று பார்த்தேன். அப்போது அந்த வெள்ளைப்புலியின் வாயில் அந்த இளைஞர் சிக்கியிருந்தார்.

அந்த இளைஞரின் கழுத்தை கவ்விப்பிடித்து புலி தூக்கிச் சென்றுகொண்டிருந்தது. வலியால் அவர் அலறி துடித்துக்கொண்டிருந்தார்” என்றார்.

மற்றொருவர் கூறுகையில், “அந்த இளைஞர் உயிரிழப்பதற்கு முன்னர் சுமார் 10 நிமிடங்களாவது பீதியோடு போராடினார். புலியை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். சில வினாடிகள் அந்த இளைஞரை புலி உற்று பார்த்த நிலையில், அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே புலி அவரை விரட்டிச் சென்று கவ்வி பிடித்தது. அங்கு வந்த பாதுகாவலர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை” என்றார்.

ஆனால் வேறு சிலர், புலியை மயக்கமடைய செய்யும் துப்பாக்கி எதுவும் பாதுகாவலர்களிடம் இல்லை என்று குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் புலியால் அடித்து தூக்கிச் செல்லப்பட்ட இளைஞரின் தலையின் சில பாகங்களை புலி கடித்து தின்றுள்ளதாகவும், மாணவனின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே உயிரியல் பூங்காவுக்கு வந்த சிறுவர்கள் சிலர் புலி அடைக்கப்பட்டிருந்த வேலிக்குள் கற்கள் மற்றும் சிறிய கம்புகளை தூக்கி வீசியதாகவும், அதன் பின்னரே ஒருவரை புலி தனது வாயில் கவ்விக் கொண்டு சென்றதை பார்த்ததாகவும் வேறு சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடந்த சம்பவத்தை பிட்டு என்பவர் தனது கையடக்கத் தொலைபேசி கமார மூலம் படம் பிடித்துள்ளார்.

அவர் கூறுகையில், “புலியிடம் சிக்கிய இளைஞரை காப்பாற்ற பாதுகாவலர்கள் மிகவும் தாமதமாகவே வந்தனர். வந்த பின்னரும் அவர்கள் தடுப்பு வேலிக்கு அருகில் நின்றவர்களைத்தான் விரட்டிக்கொண்டிருந்தார்களே தவிர, இளைஞரை காப்பாற்றுவதற்கான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை” என தெரிவித்தார்.

Exit mobile version