Site icon ilakkiyainfo

முக்காடு அணிய அனுமதியில்லை! வௌியேறிய வீராங்கனைகள்

 

17–வது ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த பெண்கள் கூடைப்பந்து லீக் ஆட்டத்தில் கத்தார்–மங்கோலியா அணிகள் மோத இருந்தன.

இந்த போட்டியில் பங்கேற்கும் முஸ்லிம் நாடான கட்டார் அணியின் வீராங்கனைகள் முகத்தில் முக்காடு அணிந்து களம் இறங்க வந்தனர்.

இது சர்வதேச கூடைப்பந்து சம்மேளன விதிமுறைக்கு முரணானது. முக்காடை அகற்றினால் மட்டுமே களம் இறங்க முடியும் என்று போட்டி அமைப்பு குழுவினர் உறுதியாக தெரிவித்தனர். இதற்கு கட்டார் அணி நிர்வாகிகள் ஆட்சேபனை தெரிவித்தனர்.

தங்கள் மத நம்பிக்கைக்கு மாறாக தங்களால் செயல்பட முடியாது. முக்காடு (ஹிஜாப்) அணிந்து களம் இறங்க தடை விதித்து இருப்பது நியாயமற்றது என்று வாதிட்டதுடன் களம் இறங்க மறுத்து விட்டனர்.

ஆனால் அதற்கு போட்டி அமைப்பு குழுவினர் செவிசாய்க்கவில்லை. இதனால் ஆடாமலேயே மங்கோலியா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சர்ச்சை குறித்து கட்டார்அணியின் நிர்வாகி முகமது கூறுகையில், ‘ஹிஜாப்புடன் விளையாடலாம் என்று எங்களுக்கு முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது ஹிஜாப்புடன் விளையாட எங்களை ஏன் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை. ஹிஜாப் அணிவதால் எதிரணிக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்றோ அல்லது எதிர்மறையான தாக்கத்தையோ ஏற்படுத்தும் என்றோ நான் நினைக்கவில்லை.

ஹிஜாப் தடை விவகாரத்தில் தங்கள் முடிவை போட்டி அமைப்பாளர்கள் மாற்றி கொள்ளாவிட்டால் நாங்கள் இந்த போட்டியில் விளையாடமாட்டோம் என்ற நிலையில் உறுதியாக இருக்கிறோம்’ என்றார்.

Exit mobile version