நெதர்லாந்து நாட்டில் நடந்த ஒரு கார் சாகச ஷோவில் எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தில் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெதர்லாந்து நாட்டில் உள்ள Haaksbergen என்ற இடத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் காரின் மேல் monster truck ஒன்று ஏறிச்செல்லும் சாகச காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வரிசையாக ஐந்து கார்கள் நிறுத்தப்பட்ட, அந்த கார்களின் மீது பிரமாண்டமான monster truck ஏறி போகும்போது திடீரென டிரக்கின் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து அந்த நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தில் புகுந்தது.
இந்த விபத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு குழந்தையும், இரண்டு பெரியவர்களும் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பலியான மூன்று பேர்களின் பெயர் மற்றும் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.