ilakkiyainfo

மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து மூன்று இளைஞர்கள் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மல்லாகம் நீதிமன்றம் வீதியைச் சேர்ந்த சந்திரசேகரம் கொலின்ஸ் (வயது 20), தேவராசா ஜெகநாதன் (வயது 23) ஆகியோர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மற்றுமொரு இளைஞரான சின்னராசா யூட் அன்ரனி (வயது 23) தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இளைஞர்கள் நேற்று முன்தினம் இரவு பண்டத்தரிப்பில் இடம்பெற்ற தாச்சிப் போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

இவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்த நால்வர் கொண்ட குழு ஒன்று இவர்களை வாள்களால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

எனினும் இந்தச் சம்பவத்துக்கான காரணம் தெரியவரவில்லையெனக் கூறிய தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மகன் திருடிய கைதொலைபேசியால்..தாய்க்கு சிறையில்… யாழில் சம்பவம்!!
29-09-2014

large_1349551567

மகனால் திருடப்பட்ட அலைபேசியை வைத்திருந்த தாய் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை(28) இடம்பெற்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வதிரி பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து, கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி மடிக்கணிணி, கைத்தொலைபேசி, கமரா உள்ளிட்ட 1 ½ இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டன.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நெல்லியடி பொலிஸார், அலைபேசியின் ஐ.எம்.ஈ.ஐ இலக்கத்தை வைத்து அலைபேசியை பாவித்து வந்த மானிப்பாய் பகுதியை சேர்ந்த 53 வயதுடைய பெண்ணொருவரை கைது செய்தனர்.

பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அலவாயில் வசித்து வரும் தனது மகன் இந்த தொலைபேசியை தனக்கு தந்ததாக கூறியிருந்தார்.

மகன் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, அவர் ஏற்கனவே பிறிதொரு திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.

இதனையடுத்து, மேற்படி பெண்ணை பருத்தித்துறை பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை(28) மாலை, பொலிஸார் ஆஜர்ப்படுத்தினார்கள்.

இதன்போது, பதில் நீதவான் அ.நடராஜா மேற்படி பெண்ணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பளைப்பகுதிக் கிணற்றுக்குள் இருந்து கிறீஸ் பூசிய நிலையில் வெடி பொருட்கள் மீட்பு
29-09-2014

பளை முன்னையடி பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலுள்ள கிணற்றில் இருந்து, பெட்டிகளுக்குள் கிறீஸ் பூசிய நிலையில் வைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்;கள், ஞாயிற்றுக்கிழமை (28) மாலை மீட்கப்பட்டதாக பளை பொலிஸார் திங்கட்கிழமை (29) தெரிவித்தனர்.

ஆர்.பி.ஜி. குண்டுகள் 10 மற்றும் கைக்குண்டுகள் 23 ஆகியனவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

கிணற்றில் நீர் வற்றிய நிலையில், கிணற்றின் அடிமட்டத்திலுள்ள மண்ணில் பெட்டிகள் இருப்பதை அவதானித்த உரிமையாளர், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, இராணுவத்தினருடன் சென்று குண்டுகளை மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கிணற்றின் அடிப்பரப்பு மண் பகுதியாக காணப்படுவதாகவும் இதனால் தொடர்ந்து மண்ணை அகற்றி மேலும் ஆயுதங்கள் இருக்கின்றனவா என திங்கட்கிழமை (29) பரிசோதிக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Exit mobile version