முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் இடம்பெற்றபோது நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உட்பிரவேசிக்கையில் எங்களை நோக்கியும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதேவேளை,அப்பொழுது ஷெல்தாக்குதலினால் படுகாயமடைந்த எமது குழந்தைகளை மீட்டு இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் கொண்டு வருவதற்கும் இராணுவம் அனுமதிக்கவில்லையென ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளில் நேற்று காணாமல் போனோரின் பெற்றோர் சாட்சியமளித்தனர்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்றும் மூன்றாவது நாளாக பூநகரிப் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்த விசாரணைகளின் போது சாட்சிமளித்தவர்களே இவ்வாறு தெரிவித்தனர்.
இந்த விசாரணைகளின்போது ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் புஷ்பராணி என்ற பெண் சாட்சிமளிக்கையில் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் இடம்பெற்றபோது இங்கிருந்து வட்டுவாகல் ஆற்றினூடாக நாங்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் உட்பிரவேசிப்பதற்கு முயற்சித்தோம்.
அப்பொழுது எம்மை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை அங்கு ஷெல் தாக்குதல்களும் இடம்பெற்றன. கடந்த 2009.5.10 அன்று இடம்பெற்ற இச் சம்பவத்தில் நிஷாந்தன் (வயது 21) என்ற எனது மகனைக் காணவில்லை.
அன்றிலிருந்து எனது மகனை நாங்கள் தேடி வருகின்றோம். எங்கு தேடியும் அவரை எம்மால் கண்டு பிடிக்கமுடியவில்லை. இதேவேளை எனது மகன் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த பின்னர் அவரைக் கண்டதாக என்னிடம் தெரிவிக்கின்றனர். எனவே அவரை மீட்டுத் தாருங்கள் என கண்ணீரும் கம்பலையுமாக அத்தாய் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்தார்.
ஸ்கந்தபுரம் விநாயகர் குடியிருப்பைச் சேர்ந்த சுரேஸ் நிசாந்தினி என்ற பெண் சாட்சியமளிக்கையில்,
முள்ளிவாய்க்காலில் இறுதியுத்தம் நடந்தபோது கடந்த 2009.4.30 அன்று எனது கணவர் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்கு அருகில் காணாமல் போய்விட்டார். எனது கணவர் ஒரு கை உழவு இயந்திரச் சாரதி ஆவார். உழவு இயந்திரத்துடன் அவ்விடத்தில் அவர் நின்றதை சிலர் கண்டுள்ளனர். ஆனால் அவரைக் காணவில்லை. எனவே எனது கணவரை மீட்டுத்தாருங்கள் என்றார்.
இறுதி யுத்தத்தின்போது தனது மகனைத் தொலைத்த ஸ்கந்தபுரம் விநாயகுடியிருப்பைச் சேர்ந்த தாயார் ஒருவர் சாட்சியமளிக்கையில்,
இறுதி யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் வட்டுவாகல் பகுதியூடாக நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உட்பிரவேசிக்க முற்பட்டோம். இதன்போது நாம் இராணுக் கட்டுப்பாட்டுக்குள் உட்பிரவேசிக்கையில் கடந்த 15.05.2009 அன்று இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் எனது மகனான சி.மனோகரன் (வயது 18) படுகாயமடைந்து விட்டார். அவருடன் எனக்கும் எனது மகன் மற்றும் மகளுக்கும் படுகாயம் ஏற்பட்டது.
காயமடைந்த என்னையும் எனது இரு பிள்ளைகளையும் கணவர் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் தூக்கி வந்தார். எம்மை இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சேர்ந்த பின்னர் காணாமல் போன எனது மகனான மனோகரனை தூக்கி வருவதற்காக மீண்டும் அவ்விடத்திற்குச் செல்ல எனது கணவர் முற்பட்டார். ஆனால் இராணுவம் அதற்கு அனுமதிக்கவில்லை. அதன்பின்னர் என்னை வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
எனது இரு குழந்தைகளுக்கும் சிறிய காயம் என்பதால் எனது கணவருடன் சேர்த்து இராமநாதன் முகாமில் இராணுவம் தங்க வைத்துள்ளது. இதன் பின்னர் நான் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் எனது குடும்பத்துடன் இணைந்து கொண்டேன். ஆனால் முள்ளிவாய்க்காலில் காணாமல் போன எனது மகனை தற்பொழுதும் காணவில்லை என்றார்.
இதன்போது ஆணைக்குழுவின் விசாரணையாளர்கள் உங்களுடைய மகன் தற்பொழுதும் இருப்பதாக நம்புகின்றீர்களா என குறித்த தாயாரிடம் வினாவினர்.
அதற்கு அந்தத் தாய் பதிலளிக்கையில்,
எனது மகன் வெலிக்கடைச் சிறைக்குப் பின்புறமாகவுள்ள சீ.வி.ஆர். என்ற தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டதாகவும் வலயம் 4 என்ற இடைத்தங்கல் முகாமில் ஊன்று தடியுடன் எனது மகனைக் கண்டதாகவும் சிலர் என்னிடம் தெரிவித்துள்ளனர். எனவே அவர் உயிருடன் இருப்பதாக நம்புகின்றேன் என்றார்.
ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த இரட்ணநாதன் ஸ்ரீஸ்கந்தலீலா என்ற பெண் சாட்சியமளிக்கையில்,
எனது மகனான லக்ஷ்ன் (17.5) என்பவரை கடந்த 2007.04.10 அன்று விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஐவர் கட்டாயப்படுத்திப் பிடித்துச் சென்று தமது அமைப்பில் இணைத்திருந்தனர். அதன்பின்னர் எனது மகனைக் காணவில்லையெனச் சாட்சியமளித்தார்.
இதன்போது குறுக்கிட்ட ஆணைக்குழுவின் விசாரணையாளர்கள் உங்களுடைய மகனை அதற்குப்பின்னர் எங்கேயாவது கண்டுள்ளீர்களா என வினாவினர். அதற்கு அத்தாய் பதிலளிக்கையில் புலிகள் எனது மகனுக்குப் பயிற்சி அளித்த பின்னர் அவரைப் பார்ப்பதற்கு அனுமதித்தனர் என்றார்.
இதன்போது விசாரணையாளர்கள் அப்பொழுது உங்களுடைய மகனிடம் ஏதாவது கேட்டீர்களாக என வினாவினர். அதற்கு அந்தத் தாய் பதிலளிக்கையில்,
நான் எனது மகனிடம் சுகமாக இருக்கிறீர்களாக என்று மட்டும் கேட்டேன் என்றார்.
இதன் பின்னர் நாம் இடம்பெயர்ந்து விசுவமடுவுக்குச் சென்ற போது அங்கே எமது மகனைக் கண்டோம். அதன்போது எனது மகன் எம்மை இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லுமாறும் தானும் அங்கே வருவதாகவும் தெரிவித்தார்.
அதன் பின்னர் விஸ்வமடுப் பகுதிக்கு இராணுவத்தினர் வந்துவிட்டனர். எம்மை இராணுவத்தினர் காட்டுப்பாதையினூடாக அழைத்துச் சென்று அருணாச்சலம் இடைத்தங்கல் முகாமில் தங்க வைத்தனர்.
இந்நிலையில் கடந்த 23.4.2009 அன்று இராணுவத்தினரின் அறிவித்தலுக்கமைய எனது மகன் இராணுவத்திடம் சரணடைந்து ஓமந்தை சோதனைச் சாவடியில் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இராணுவ விசாரணைக்குச் சென்றதை தான் கண்டதாக என்னிடம் முகாமில் வைத்து பெண் ஒருவர் தெரிவித்தார். ஆனால் தற்போது வரை எனது மகனைக் காணவில்லை. எனவே அவரை மீட்டுத் தாருங்கள் என்றார்.
இதேவேளை, இ.சந்தரவதனி சாட்சியமளிக்கையில்,
இறுதி யுத்தத்தின்போது கடந்த 2009.4.20 அன்று நாங்கள் மாத்தளன் ஆற்றினூடாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உட்பிரவேசிக்கும்பொழுது எனது மகளான டர்ஷிகா (அப்பொழுது வயது 12) படுகாயமடைந்திருந்தார்.
இவருடன் நானும் எனது குழந்தைகளும் காயமடைந்த நிலையில் எனது கணவர் என்னையும் இரு குழந்தைகளையும் இரணைப்பாலைப் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கூட்டி வந்து தங்க வைத்து விட்டு மீண்டும் எனது மகளான டர்ஷிகாவை தூக்கி வருவதற்காக ஆற்றைக்கடந்து மாத்தளன் பகுதிக்குச் செல்ல முற்பட்டார்.
ஆனால் அப்பொழுது இராணுவம் மாத்தளனுக்குத் திரும்பிச் செல்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கவில்லை. காயமடைந்த எனது மகளை தாம் தூக்கி வருவதாகவும் எங்களை அங்கிருந்த வாகனங்களில் ஏறி செல்லுமாறும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.
எம்மை அங்கிருந்து வைத்தியசாலைக்கு அனுப்பினார்கள். நாம் சுகமடைந்து இடைத்தங்கல் முகாமுக்குச் சென்று காயமடைந்த எனது மகளை தேடினோம். ஆனால் அவரை தற்பொழுது வரைக் காணவில்லை. எனவே அவரை மீட்டுத் தாருங்கள் என ஆணைக்குழு முன்னிலையில் குறித்த தாயார் கதறி அழுதார்.
இதன்போது ஆணைக்குழுவின் தலைவர் பரணகம குறித்த சிறுமியை தாம் மீட்டுத் தருவதாக அத் தாயாரிடம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.