இரத்தினபுரி நகரில் பொலிஸ் சார்ஜன் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்ட பெண் 5 கோடி ரூபா நட்டஈடு கோரி அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த பெண் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
´பட்டி´ என்ற பெயரில் அழைக்கப்படும் குறித்த பெண் இரத்தினபுரி நகரில் பொலிஸ் சார்ஜன் ஒருவரால் கடுமையாக தாக்கப்படும் காட்சி கையடக்கத் தொலைபேசியில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பிரபல்யமானது.
இதனையடுத்து பெண்ணை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் இரத்தினபுரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் சார்ஜனுக்கு ஆதரவு தெரிவித்து இரத்தினபுரி நகர சாரதிகள் சங்கம் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.