டொமினிக்கன் குடியரசுக்கு பயணித்த அமெரிக்க விமானமொன்றிலிருந்த பயணியொருவர் தனக்கு எபோலா வைரஸ் தொற்று இருப்பதாக திடீரென அலறியதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விமானம் டொமினிக்கன் குடியரசில் புன்டா கனா நகரிலுள்ள விமான நிலையத்தை நெருங்கிய வேளையிலேயே மேற்படி அமெரிக்கப் பயணி இவ்வாறு கூச்சலிட்டுள்ளார்.
இதனையடுத்து விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விமானம் புன்டா கனாவில் தரையிறங்கியதும் பாதுகாப்பு கவச ஆடை அணிந்து வந்த 4 உத்தியோகத்தர்கள் அந்தப் பயணியை விமான நிலையத்திலுள்ள மருத்துவ நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அந்தப் பயணி விமானத்திலிருந்து அகற்றப்படும் வரை ஏனைய பயணிகள் இரு மணித்தியாலமாக விமானத்தை விட்டு வெளியேற முடியாது அங்கேயே ஸ்தம்பிதமடைந்த நிலையில் இருக்க நேர்ந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பிட்ட பயணியை உத்தியோகத்தர்கள் தூக்கிச் சென்ற போது, தான் எபோலா வைரஸ் பரவி வரும் ஆபிரிக்க பிராந்தியத்திலிருந்து வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அவர் ஏனையவர்களின் கவனத்தை ஈர்க்கவே இவ்வாறு கூச்சலிட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் மருத்துவ நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.
மேற்படி நபர் விமான பயணத்தின் போது தொடர்ந்து இருமியவாறு இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.