எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்து இரகசியமான முறையில் தமிழ் புலம்பெயர் அமைப்புக்களைச் சந்தித்து ஆதரவைப் பெற முயற்சித்து வருகின்றார் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பொதுநலவாய மாநாடு இலங்கையில் இடம்பெற்றபோது புலம் பெயர் மக்களின் கொந்தராத்து ஒன்றை பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கைக்கு வந்து நிறைவேற்றினார்.
அதேபோன்ற செயற்பாட்டிலேயே தற்போது ரணில் விக்ரமசிங்கவும் ஈடுபட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் கூறுகையில்
பிரிட்டன் ஜேர்மனில் ரணில்
தற்போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்து இரகசியமான முறையில் தமிழ் புலம்பெயர் அமைப்புக்களின் ஆதரவைப் பெற முயற்சித்துவருகின்றார் .
அதாவது பிரிட்டன், ஜேர்மன் போன்ற நாடுகளுக்கு சென்று அவர் இவ்வாறு புலம் பெயர் மக்களின் ஆதரவைப் பெற முயற்சித்துள்ளார். புலம் பெயர் மக்களுடனான சந்திப்பின்போதான புகைப்படங்களை வெளியிடவேண்டாம் என்றும் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். ஆனால் அதற்கு புலம்பெயர் மக்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
டேவிட் கமரூனின் பாணி
இதுபோன்ற ஒரு விடயத்தையே பொதுநலவாய மாநாடு இலங்கையில் இடம்பெற்றபோது இங்கு வந்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனும் செய்தார். அவர் புலம் பெயர் மக்களின் கொந்தராத்து ஒன்றை பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கைக்கு வந்து நிறைவேற்றினார். அதேபோன்ற செயற்பாட்டிலேயே தற்போது ரணில் விக்ரமசிங்கவும் ஈடுபட்டுள்ளார்.
வடக்கு – கிழக்கு தமிழர்களின் நோக்கம்
ஆனால் புலம்பெயர் மக்களினதும் இலங்கையில் வடக்கு, கிழக்கு மக்களினதும் கோரிக்கைகளும் நோக்கங்களும் வித்தியாசமானவையாகும். புலம்பெயர் மக்கள் வித்தியாசமான நோக்கில் செயற்பட்டுவருகின்றனர்.
ஆனால் வடக்கு, கிழக்கு மக்களின் நோக்கங்கள் வித்தியாசமானதாகும். குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களைப் பொறுத்தமட்டில் குடிநீர் போக்குவரத்து வாழ்வாதாரம் போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றை தீர்த்து வைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
சர்வதேச சதி
கேள்வி: அரசாங்கத்தை மாற்ற சர்வதேச சதி உள்ளதாக கூறியுள்ளீர்களே?
பதில்: இதற்கு முன்னர் கூறப்பட்ட விடயமாக இது உள்ளது. குறிப்பாக சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதி இவ்வாறு இலங்கைக்கு எதிராக செயற்பட்டுவருகின்றது.
குறிப்பாக யுத்த காலத்தில் சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதி யுத்தத்தை நிறுத்த முயற்சித்தது. அவ்வாறு தற்போதும் சில வழிகளில் எமக்கு எதிராக செயற்படுகின்றனர். அவை தொடர்பில் கவனமாக இருக்கின்றோம்.
குறைகள் உள்ளன
குறிப்பாக உள்நாட்டில் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டாலும் அதன் குறைகள் இன் னும் உள்ளன. அவை கடந்தகாலங்களில் மீள் உருவாக முயற்சித்தன. இவ்வாறு பல சவால்கள் உள்ளன. அவை பற்றி அறிந்தவண்ணம் கவனமாக செயற்பட்டுவருகின்றோம்.
இதற்கு சில காரணங்கள் இருக்கலாம். அதாவது ஒரு முக்கிய காரணமாக அரசியல் விடயம் உள்ளது. சில நாடுகளின் அரசியல் தொகுதியில் தமிழ் வாக்குகள் உள்ளன. 1980களில் இலங்கையிலிருந்து சென்ற சிலர் இவ்வாறு அங்கு வாக்காளர்களாக உள்ளனர். எனவே அதற்காகவும் இவ்வாறு செயற்படலாம்.
அழுத்தங்களை கவனத்தில் எடுக்கவில்லை
ஆனால் இலங்கையை பொறுத்தமட்டில் யாரினதும் அழுத்தங்களுக்காகவும் எதனையும் செய்யவில்லை.மாறாக எமது நாட்டு மக்களின் தேவையை கருதி வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். ஐக்கிய நாடுகள் சபை எமக்கு அழுத்தம் பிரயோகித்தது. ஆனால் அழுத்தங்களுக்கு அப்பாற்பட்டு நாங்கள் மக்களுக்காக செயற்பட்டுவருகின்றோம்
கேள்வி: எப்போது தேர்தல் நடைபெறும்?
பதில்: அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெறும்.
கேள்வி: ஜனவரி மாதமா? மார்ச் மாதமா?
பதில்: இரண்டும் வருட ஆரம்பம்தானே?
கேள்வி: ஜனாதிபதி தேர்தலா பாராளுமன்றத் தேர்தலா?
பதில்: பிரதான தேர்தல் ஒன்று நடைபெறும்.
கேள்வி: பாதுகாப்பு செயலாளர் ஏன் இலங்கை வந்துள்ளார்?
பதில்: இது என்ன கேள்வி என்று எனஇந்திய விளங்கவில்லை. இந்தியாவின் முக்கியஸ்தர்கள் இலங்கை வருகின்றனர். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான உறவு காணப்படுகின்றது. அந்த உறவு பலமானது.
புதிய பிரதியமைச்சு பதவி
கேள்வி: புதிய பிரதியமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. குறித்த அமைச்சில் வேலைப்பளு அதிகமா? அல்லது வேறு காரணமா?
பதில்: அமைச்சுக்கள் பல்வேறு காரணங்க ளுக்காக வழங்கப்படும்.
கேள்வி: அமைச்சர்கள் அதிகம் என்று கூறப்படுகின்றதே?
பதில்: இது நீண்டகாலமாக முன்வைக்கப் படும் விடயமாகும். எமது கூட்டணியில் 22 கட்சிகள் உள்ளன.