வடமாகாண மக்கள் மீது ஜனாதிபதிக்கு கரிசனையிருந்தால் அவர் எம்மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தே இங்கு வந்திருப்பார்.
நாங்கள் கேட்ட மிகக்குறைந்த கோரிக்கையையாவது கொடுத்துவிட்டு வந்திருப்பார். அப்பொழுது நாங்கள் நன்றியுடன் அவரை வரவேற்றிருப்போம். ஆனால், அவர் தருவதாக உறுதிமொழி கூறிய விடயங்களை இதுவரை தரவில்லை.
இதனால்தான் ஜனாதிபதியின் விஜயத்தை நாம் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
வைக்கோல் பட்டடை நாய்போல வடமாகாண சபையின் செயற்பாடுகள் இருப்பதாக ஜனாதிபதி கிளிநொச்சியில் கூறியுள்ளார். எங்கள் வடமாகாண மக்களையே வைக்கோல் பட்டடை என்றும் வடமாகாண சபையை நாய் என்றும் அவர் கூறியுள்ளார்.
வைக்கோல் பட்டடையை எரித்தமையினால்தான் இன்று ஜெனிவாவில் விசாரணை நடக்கின்றது. ஜனாதிபதியின் இந்தக் கூற்று ஆடுநனைகின்றது என்று ஓநாய் அழுவதுபோலத்தான் இருக்கின்றது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் தொண்டமனாறு நீர்பாசன திணைக்களத்தின் நீரியல் ஆய்வுமையம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது;
எம்மைப் பல விதங்களில் அரசாங்கங்கம் குறை கூறி வருகின்றது. தாம் செய்யுந் தவறுகளை மூடி மறைக்க எம்மைச் சாடுகிறது.
முதன் முதலில் நேசக்கரம் நீட்டி எனது மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டு எனது உறுதியுரையை எடுக்க ஜனாதிபதியிடம் சென்றவன் நான். நாட்டில் சுமூக நிலை ஏற்பட வேண்டும்.
எமது மக்கள் ஒதுக்கி வைக்கப் படக்கூடாது என்ற எண்ணத்தில் இதைச் செய்தேன். அதன் பின்னர் எமக்குத் தேவையான பல விடயங்களை ஜனாதிபதி முன் வைத்தேன். அவர் தருவதாக அன்றே உறுதி மொழி கூறி இன்று இதுவரையில் தரவில்லை.
அந்த ஒரு காரணமே போதும் அவரின் வருகையை நாங்கள் புறக்கணிக்க. ஆனால் அதற்கு மேலும் பல காரணங்களைக் கூறியே எம்மால் கலந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது என்று மனவருத்தத்துடன் கூறிக் கடிதம் அனுப்பி வைத்தேன்.
கடிதத்தில் குறிப்பிட்டவற்றைக் குறிப்பிடாமல் அவற்றிற்குப் பதில் இறுக்காமல் வைக்கோல் பட்டடை நாய் போல வடமாகாண சபையின் செயற்பாடுகள் இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் கிளிநொச்சியில் வைத்துக் கூறியுள்ளார்.
வைக்கோல் பட்டடை என்று குறிப்பிட்டது எங்கள் வடமாகாண மக்களை. வடமாகாண சபையை நாய் என்று கூறியுள்ளார். எங்கள் வைக்கோல் பட்டடையின் ஒரு பகுதியை ஒரு சகோதரர் தீ வைத்துப் பொசுக்கியதால் தான் ஜெனிவாவில் விசாரணை நடக்கின்றது.
மற்றைய சகோதரர் வைக்கோல்ப் பட்டடையைப் பராமரிப்போம் பத்தும், இருபதும், முப்பதும் தாருங்கள் என்று கேட்டு வருகின்றார். இந் நிலையில் நாங்கள் நாயாக இருந்து வைக்கோல் பட்டடையின் நலம் காக்காது விட்டால் நமக்காக அவரா அல்லது அவரின் குடும்பத்தாரா நன்மை செய்யப் போகின்றார்கள்? நாயாக உழைக்கப் போகின்றார்கள்?
ஒரு பிரதம செயலாளரை சட்டப்படி நியமிக்க வக்கில்லாதவர் ஒரு ஆளுநரை மக்கள் கோரிக்கைப் படி மாற்ற முடியாதவர் அதிகாரம் தன் வசம் என்ற மமதையில் வாயில் வந்ததை எல்லாம் பேசக் கூடாது.
2012இல் நடந்தவற்றிற்கு 2014இல் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வைப்பவர், அதுவும் 2013இல் நாம் தோ்ந்தெடுக்கப்பட்ட பின்னர் எம்முடன் கலந்தாலோசியாமல் கூட்டம் வைப்பவர் எமக்கு நன்மை செய்ய வருகின்றாரா? ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு நன்மை தேட வருகின்றாரா?
அவரின் நப்பாசை யாராவது ஒரு உண்மையான வடமாகாணத் தமிழ் மகனோ மகளோ தப்பித் தவறித் தமக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கக் கூடும் என்பதுதான். நாம் எமது மக்களுக்குக் கூறியுள்ளோம் – அவர் தருவதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் அவர் உங்களுக்குப் பெருவாரியான நட்டஈடு வழங்க வேண்டியுள்ளது. அவர் தற்போது தரப்பார்ப்பது அதில் ஒரு மிகச் சிறு தொகை தான். அதனை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் தேர்தலில் அவரை வீழ்த்த உங்களால் முடியுமானவற்றைச் செய்யுங்கள் என்று.
ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுவது போலத்தான் இருக்கின்றது ஜனாதிபதியின் கூற்று. வட மாகாண மக்கள் மீது கரிசனை இருந்திருந்தால் அவர் எம் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து இங்கு வந்திருப்பார்.
நாங்கள் கேட்ட மிகக் குறைந்த கோரிக்கைகளையாவது கொடுத்து விட்டு வந்திருப்பார். அப்பொழுது நாங்கள் நன்றியுடன் வரவேற்றிருப்போம். நாய்களுடன் அவர் கவனமாக இருக்கட்டும்.
அடுத்து அமைச்சர் ஒருவர் கருடா சௌக்கியமா? என்று கேட்கத் தலைப்பட்டுள்ளார். தான் யார், எங்கு இருக்க வேண்டியவர் என்பதை மறந்து பேசியுள்ளார். மு.விக்னேஸ்வரனை ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அழைத்தோம். ஆனால் அவர் வரவில்லை.
மு.விக்னேஸ்வரன் என்றால் முட்டாள் விக்னேஸ்வரன் என்று நான் கூறவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்றே கூற வந்தேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சியில் கிண்டல் அடித்துள்ளார்.
நண்பர் டக்ளஸ் அவர்கள் கெட்டிக்காரர் என்பதை நான் ஒத்துக் கொள்கின்றேன். தென் இந்தியாவில் பாதுகாப்பாக ஒரு தனியிடத்தில் இருத்தப்பட வேண்டியவர் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் எல்லாவற்றையும் முட்டாள்கள் ஆக்கி அவற்றில் அங்கம் வகித்து தனக்கெதிராக தென்னிந்தியாவில் விடுக்கப்பட்ட பகிரங்க பிடிவிறாந்தில் இருந்து இது வரையில் அவர் தப்பி இருந்து வருவது அவரின் கெட்டித் தனத்தைக் காட்டுகிறது.
அதற்காக அவர் எவரை வேண்டுமானாலும் அவர்களுக்கு அடிமையாகச் செயற்ப்பட்டு தனது காரியத்தினைச் சாதித்து வருவதையும் நான் அறிவேன். அது பற்றி தம்பி ஸ்ரீதரன் அவர்கள் கூறியதைப் பத்திரிகையில் வாசித்தறிந்தேன்.
எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்ற முடியாது
ஆனால் சில நேரங்களில் தம்மைக் கெட்டிக்காரர்களாக அடையாளம் காண்பவர்கள் தாமே முட்டாள்கள் ஆகின்றார்கள். அப்படி ஏதாவது நண்பர் டக்ளஸ்க்கு நடந்தால் இந்தியாவிற்குக் கொண்டு செல்லப் பட்டால் நான் அவரை முட்டாள் என்று அழைக்க மாட்டேன்.
முதலமைச்சர் என்றும் அழைக்க மாட்டேன். முற்றிலும் முடியாத பரிதாபத்துக்குரிய முன்னாள் அமைச்சர் என்று தான் குறிப்பிடுவேன். சிலரை எக்காலமும் ஏமாற்றலாம். பலரை ஒரு சில தருணங்களில் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்பதை நண்பர் அறிந்து வைத்திருந்தால் நல்லது.
இன்று திறக்கப்படும் ஆய்வு மையபம் எமக்குப் பல விதங்களிலும் நன்மை பயக்கப் போகின்றது. நான் கொழும்பில் என் வீட்டில் உள்ள ஒரு கிணற்று நீரின் தன்மையை அறிய CISIR என்ற நிறுவனத்தை நாடிப் போன போது ரூபா 5000 கட்ட வேண்டும் என்றார்கள்.
பின்னர் இவ்வாறான ஒரு அரசாங்க ஆய்வு மையத்தை நாடிய போது வெறும் ரூபா 287 ஐ மட்டுமே அறவிட்டார்கள். இது பல வருடங்களுக்கு முன் நடந்தது. குறைந்த விலையில் உங்களுக்கு சிறந்த ஒரு சேவையாற்ற இந்த மையம் தாபிக்கப்பட்டுள்ளது.
இன்று எமது நீர் மாசடைந்து வருவது கண்கூடு. அதற்கான காரணங்களை அறிந்தால்த் தான் மாற்று நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு வசதியளிப்பதற்காகவே இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. திறம்பட இந்த மையம் சேவையாற்ற வேண்டும் என்று கேட்டு என்னை அழைத்ததற்கு நன்றி கூறி அமர்கின்றேன்.
மேய்ச்சல் நிலத்தில் படையினரின் மலக்கழிவுகள் கொட்டப்படுகின்றன: ஐங்கரநேசன்
யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் படையினர் தங்கள் மலக்கழிவுகளை நீர்வேலி தரவை (மேய்ச்சல் நிலத்தில்) வெளியில் கொட்டிவருவதால் சுற்றச்சூழல் மோசமாக பாதிக்கப்பட்டு வருவதாக வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
வடமாகாண நீரியல் ஆய்வு மைய (NORTHERN PROVINCIAL HYDROLOGICAL RESEARCH CENTRE) திறப்பு விழா, தொண்டைமானாறு நீர்ப்பாசன திணக்கள வளாகத்தில் புதன்கிழமை (15) மாலை இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே விவசாய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
யாழ். குடாநாட்டில் நிலத்தடி நீரின் தரம் விவசாய இரசாயனங்களாலும் மலக்கிருமிகளாலும் மாசடைந்து வருவது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட கரையோர பகுதிகளிலள்ள குடிநீரில் மலக்கிருமிகள் காணப்படுவதாகவும், அதனால் போத்தல் குடிநீரையே வாங்கி அருந்துமாறும் அண்மையில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
குடிநீரைக் கொதிக்க வைத்து ஆறிய பின்னர் குடியுங்கள் என்று சொல்லாமல், போத்தல் குடிநீரின் விற்பனையை ஊக்குவிக்கும் விளம்பர வாகனம் போல போத்தல் குடிநீரை வாங்கி அருந்துங்கள் என்று அவர்கள் சொல்லிவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பொதுமக்களை அச்சப்படவைத்து, போத்தல் குடிநீரை வாங்க வைத்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு துணைபோகும் முயற்சியில் அரச துறைகள் ஈடுபடக்கூடாது. எமது கழிவகற்று முறைகளில் உள்ள குறைபாடே குடிநீரில் மலக்கிருமிகள் கலப்பதற்கான பிரதான காரணமாக உள்ளது.
எமது நிலம் நுண்துளைகளை கொண்ட மயோசின் பாறைகளால் ஆனது. முறையான கழிவு முகாமைத்துவம் இல்லாதபோது, மயோசின் பாறைகளின் நுண்ணிய துளைகளினூடாக மலக்கழிவுநீர் வடிந்து, குடிநீருடன் மலக்கிருமிகள் கலந்துவிடுகின்றன.
யாழ். மாநகர சபையினர் மலக்கழிவுகளை ஏற்றிச்சென்று கல்லுண்டாய் வெளியில் கொட்டி வருகின்றனர். இதற்கு அவர்களின் நிர்வாக சீர்கேட்டையோ அல்லது அவர்களிடம் கழிவகற்றும் முறைகளை மேம்படுத்துவதற்கு போதிய நிதி இல்லாததையோ காரணங்களாக சொல்லலாம்.
ஆனால், சகல அதிகாரங்களையும் சகல வளங்களையும் கொண்டிருக்கும் படையினரும் அவ்வாறுதான் செய்கிறார்கள். தங்கள் மலக்கழிவுகளை நீர்வேலி தரவையில் கொட்டிவருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது.
1980களில் விமானத்தில் இருந்து மலப்பீப்பாய்களை யாழ் குடாநாட்டு மக்களின் மீது வீசிய படையினருக்கு இது பெரிய விடயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், குடாநாட்டின் குடிநீரில் மலக்கிருமிகள் என்று பேசும் அதிகாரிகள் படையினரின் இந்த நடவடிக்கைகள் குறித்துப் பேசாமல் இருப்பது வேதனையானது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.