அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சிறுமியின் தகப்பன் உள்ளிட்ட மூவருடன், அதற்கு உடந்தையாகவிருந்த சிறுமியின் தாய் உட்பட நால்வரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம். முகம்மது பஸீல் செவ்வாய்க்கிழமை(21) தீர்ப்பளித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்படும் சிறுமியின் தாய் முதல் திருமணம் செய்து அக்கனவரை பிரிந்து, பின்னர் இரண்டாவது திருமணமத்தை செய்துள்ளார்.
அதில் முதல் திருமணத்தில் பிறந்த இச்சிறுமியின் தந்தையாலும், இரண்டாம் திருமணம் செய்து கொண்ட தாயின் கணவராலும் மற்றும் 15 வயது சிறுவன் ஒருவரினாலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டு வந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான தகவல் அறிந்த அக்கரைப்பற்று பொலிஸார் குறித்த நான்கு பேரையும் கைது செய்து செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்திய போதே நீதிபதி சந்தேக நபர்கள் நால்வரையும் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு தீர்ப்பளித்தார்.
மேலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் சிறுமி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனையின் பின்னர் சிறுவர் நன்நடத்தைப் பிரிவுக்கு பாரம் வழங்கும் படியும் நீதிபதி இதன் போது கட்டளை பிறப்பித்தார்.