கத்தி படத்தில் வரும் பிரச்சனைகளுக்காக போராட வேண்டிய அரசியல்வாதிகள் அந்த படத்தை எதிர்த்து போராடுகிறார்கள் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள கத்தி படம் பல பிரச்சனைகளை தாண்டி தீபாவளி அன்று ரிலீஸானது. படத்திற்கு தமிழகம் தவிர கேரளா மற்றும் கர்நாடகாவிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இயக்கம்: ஏ.ஆர். முருகதாஸ்
நடிகர்கள்: விஜய், சமந்தா, சதிஷ், நீல் நிதின் முகேஷ், டோட்டா ராய்
கதை, திரைக்கதை: ஏ.ஆர. முருகதாஸ்
இசை: அனிருத்

இந்நிலையில் பேஸ்புக், ட்விட்டர், இணையத்தளங்கள், சினிமா விமர்சகர்கள் ஆகியோரின் கருத்துக்களின் அடிப்படையில் படம் பற்றிய விமர்சனம் இதோ… விஜய் கதிரேசன், ஜீவானந்தம் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் கதிர் குற்றவாளி, ஜீவா படித்துவிட்டு ஊர்மக்களுக்கு உதவும் நல்லவர்.

ஜீவாவின் இடத்தில் இருந்து கதிர் கிராமத்தினருக்காக பன்னாட்டு நிறுவனத்தை எதிர்த்து போராடுகிறார். இது தான் கதை விஜய் இரண்டு வேடங்களிலும் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் ஊழல், விவசாயிகள் தற்கொலை, தண்ணீர் பஞ்சம், மூத்த குடிமகன்களின் நிலைமை, பரபரப்பான செய்திக்காக காத்திருக்கும் மீடியா என்று பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளார்.
அவரது வசனங்கள் அருமை. அதிலும், நம்ம பசிக்கு மேலே சாப்பிடுற ஒரு இட்லி கூட நம்மளோடதே கிடையாது என்ற இடத்தில் தியேட்டர்களில் விசில் பறக்கிறது. முதல் பாதி ரொம்பவே மெதுவாக செல்கிறது. ஆனால் அதை இரண்டாம் பாதியில் பரப்பரப்பாக்கிவிட்டார் முருகதாஸ்.
கார்பரேட், உலகமயமாக்கல், 2ஜி ஊழல், தொழில் அதிபர் விஜய் மல்லையா பற்றிய கிண்டல் வசனங்களில் முருகதாஸ் கைதட்டல் வாங்குகிறார். செல்பி புள்ள மற்றும் ஆதி பாடல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. காதல் காட்சிகள் வலுவில்லாமல் உள்ளது. முருகதாஸ் ஓவராக கருத்து சொல்கிறார். சதீஷின் காமெடி, அனிருத்தின் பின்னணி இசை ரசிக்கும்படி உள்ளது.

டான்ஸில் விஜய் வழக்கம்போல் அசத்துகிறார். படத்தின் நீளம் கொஞ்சம் ஓவராக உள்ளது. தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கேற்ற விருந்தை அளித்துள்ளார் முருகதாஸ்.
கத்தி படத்தில் காட்டியிருக்கும் பிரச்சனைகளுக்காக போராட வேண்டிய அரசியல்வாதிகள் அந்த படத்தையே எதிர்த்து போராடியுள்ளனர். அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் நல்லது தான். படத்திற்கு செம விளம்பரம் கிடைத்துள்ளது. ஆக, கத்தி விஜய் ரசிகர்களுக்காக தீட்டியது.