5 பெண்டாட்டிகளை வைத்திருந்து குடும்பம் நடாத்துவதற்காக 90 ற்கும் மேற்பட்ட வீடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்ட யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த நபா் முல்லைத்தீவுப் பகுதியில் வைத்துப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரால் கொள்ளையிடப்பட்ட 81 பவுண் தங்க ஆபரணங்கள், 35 தண்ணீர் பம்பி மோட்டார்கள், மின் தளபாடங்கள், துவிச்சக்கர வண்டிகள் உட்பட மேலும் சில பொருட்கள் சந்தேக நபரின் வீட்டில் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மானிப்பாய் பிரதேசத்தில் வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து கிடைத்த முறைப்பாடு தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து இந்த சந்தேக நபர் பற்றிய தகவல்கள் வெளியாகின.
மானிப்பாய், நவாலி தெற்கு பிரதேசத்தில் உள்ள சந்தேக நபருக்கு சொந்தமான வீட்டை சோதனையிட்ட போது தங்க ஆபரணங்களை அடகு வைத்தமைக்கான பல பற்றுச்சீட்டுக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேக நபரை தேடப்பட்டு வந்த நிலையில், அவர் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு தப்பிச் சென்றிருந்தார்.
மானிப்பாய் பொலிஸார் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு இது குறித்து தகவல் வழங்கியிருந்ததுடன் இரண்டு பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலை அடுத்து சந்தேக நபர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
புதுக்குடியிருப்பில் அவரது மனைவி ஒருவரின் வீட்டில் இருந்த நிலையிலேயே பொலிஸார் அவரை கைது செய்திருந்தனர்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் 90 வீடுகளில் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன் அவற்றில் 60 சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
மானிப்பாய் பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான இந்த நபர் 5 பெண்களை திருமணம் செய்துள்ளதுடன் அவர்களின் குடும்பத்தை நடத்த இவ்வாறு வீடுகளை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டரை வயதுக் குழந்தையைப் பலியெடுத்த கிளிநொச்சி விபத்து
24-10-2014
கிளிநொச்சி-கல்மடு வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடக்கச்சி, மாதா தேவி வீதி மாயனூரைச்சேர்ந்த இரண்டடை வயது குழந்தையான ஜீவானந்தன் கம்சன் மரணமடைந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனது மகனான இரண்டரை வயது குழந்தையை அவரது தந்தை, மோட்டார் சைக்கிளின் முன்னால் வைத்துகொண்டு பயணித்தபோதே அந்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று மாலை 3.15க்கு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலே குழந்தை மரணமடைந்துள்ளது.