ilakkiyainfo

யாரை யார் காப்பாற்றுவது: தந்தையும் தனயனும் கையேந்தும் அவலம்

varumai  மனதால் வருந்தக்கூடாது என்பதற்காக ஒரு சாப்பாட்டு பார்சல வாங்கி மூன்று பேரும் பிரித்து சாப்பிட்டாலும் பசி ஆறாது. ஆனால், ஆறிவிட்டதாக ஒருவருக்கொருவர் கூறிக்கொள்வோம்

மூன்று தசாப்த யுத்­தத்­தி­னுள்ளும்  நான்கு உயிர்கள் கடவுள் கரு­ணையால் எஞ்­சி­ய­போதும் இன்று ஒரு உறவு இல்­ல­றத்தில் இணைய மகிழ்வாய் அனுப்பிவிட்டு ஏனைய  மூன்று உயிர்­களும்  ஒரு­வ­ரை­யொ­ருவர்  திருப்­திப்­ப­டுத்­தி­ய­வாறு நந்­திக்­க­டற்­ப­ரப்பில் அடுத்த நேர உண­வுக்­காக கையேந்தியவாறு காத்திருக்­கின்­றார்கள்.

மாற்றம் ஒன்றே மாறா­தது என்­பார்கள். ஆனால் இவர்­களில் வாழ்க்கை ஒரு காலத்தில் சுமுக­மாக நகர்ந்­தது. இன்று குடும்­பத்தின் பலமாய் இருக்கும் தந்தையும்  தன­யனும் இன்று  தடு­மாறும் நிலை  ஏற்­ப­டு­ம­ள­விற்கு தலை­வி­தியை தலை­கீ­ழாக மாற்­றி­ய­தற்கு யாரை­நோ­வது.

விதியா? சதியா? என்ற விவா­தத்­திற்கு  அப்பால் தந்­தைக்கும் தன­ய­னுக்கும் நிகழ்ந்த விப­ரீ­தத்தை அராய்­வ­தற்கு ஒரு சந்­தர்ப்பம் கிடைத்­தது. நீண்ட தூரம் பய­ணித்த அவர்கள் ஒரு மர­நி­ழலில் சிறு ஓய்­வெ­டுப்­ப­துபோல் ஒரு­மூச்சில் இவ்­வாறு கூறி­னார்கள்…

varumaiமுல்­லைத்­தீவு  வட்டு வாய்க்­காலில் இறால் வீசி நானும் என்ர குடும்­பமும்  சொந்­தப்­ப­ணத்­தில   வாழ்க்கை  நடத்தி  வந்­த­னாங்கள் இன்று பத்து ரூபாக்கு பல­பேரிட்ட  கையேந்­தியும்  காலில்­லா­த­வ­னுக்கும்    கையில்­லா­த­வ­னுக்கும் குடுத்­திட்டு எப்­படி வாங்­கி­றது என்று எனக்கு முன்­னா­லேயே பேசிட்டு போறதைப்  பார்த்த  என்ர  மன­தில  உள்ள தைரி­யத்­தில ஆணி அடிப்­பது போல் இருக்கும் என்ன செய்­வது?

உப்பு விக்­கப்­போனால்  மழை­பெய்­யுது. மா விக்­கப்­போனால் காத்­த­டிக்­குது என்று எப்பவோ கேட்ட பாடலை நினைச்சு மன­சுல உள்ள காயத்தை மாத்த எத்த­ணிக்­கிறேன். முடி­யவே இல்லை.

கனத்த இத­யத்­துடன் தன் மனக்­கி­டக்­கை­களை எம்முன் கொட்­டித்­தீர்த்தார் சபா­ரத்­தினம் உத­ய­குமார்…

காரணம் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் நாள் தமிழர் வாழ்வில் கறைப்­ப­டிந்த நாள். காலை சூரியன் உதிக்க முன்­னமே வலை­ஞர்­மடம் பொக்கணை­யில பங்கர் வாசல்ல குந்தி இருக்­கும்­போது தாறுக்கும் மாறுக்கும் ஷெல் போறதை பார்த்துக் கொண்டே இருந்தன்.

எழும்­பினால் தலை­போய்­விடும். அந்­த­ள­வு­ப­தி­வாக போன ஷெல் எனக்கு பக்­கத்தில் விழுந்து சத்தம் கேட்டு திரும்­பிப்­பார்க்கும் போது என்ர வலது கையை காணேல்ல.

ஐயோ என்­றுக்­கொண்டு எழும்ப அடுத்த பீஸ் இடுப்பு எலும்­பில பட்­டிட்­டுது. ஐயோ அம்மா அம்மா…. என்று கத்­தி­யப்­படி மயங்­கிட்டன். பிறகு கொஸ்­பிட்டல்ல கண்ண முழிச்சு பார்த்தா என்ர மகன்ர முணகல் சத்தம் கேட்­டது. அருகில் பார்த்தா பக்­கத்­துல கால் முழுக்க காயப்­பட்டு படுத்­தி­ருக்­கிறான். இப்படியே கொஸ்­பிட்­ட­லால முகா­முக்கு போனோம்.

என்ர மக­னுக்கு காயம் படும்­போது 23 வயது. அப்ப அவர் உலக உண­வுத்­திட்டம் (யுனிசெப்) இல வேலை செய்­துக்­கொண்­டி­ருந்­தவர். பிரச்­சி­னை­யின்ர கடைசி கட்­டத்­தில கட்­டாய ஆட்­சேர்ப்­புக்கு வீடு­வீடா வர என்ர பிள்­ளைய தண்ணி சாப்­பாடு இல்­லாம பங்­க­ருக்க ஒளிச்சுவச்­சி­ருந்­தனான் பல நாள்.

சூரி­ய­னையே அவன் கிழ­மைக்கு ஒருக்­காத்தான் பாக்­கி­றவன். ஆனால், வேலை­யில சம்­பளம் எடுத்­திட்டு வரும் போது பிடிச்­சிட்டு போன­வங்க பிறகு பிரச்­சினை உக்­க­ர­ம­டைய ஓடி வந்­திட்டான்.

ஆனால், முகா­மில ஒருநாள் இயக்­கத்­தில இருந்­தாக்­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்க அழைக்­கப்­பட்­ட­போது என்ர பிள்­ளையும் மன­சாட்­சிக்கு கட்­டுப்­பட்டு போனவன்.

பிறகு தடுப்­புக்கு போய் மருந்­து­களும் கட்ட ஏலாம போய் இப்ப 2 மாதத்­திற்கு முன் வலது கால் முழங்­கா­லுக்கு கீழ எடுத்­தாச்சு. இன்னும் பொய்க்கால் போடேல்ல புண் ஆற வேண்டும். இப்­ப­டியே ஒரு மகன்ர வாழ்வு கேள்­விக்­கு­றி­யாக இருக்கு.

என்ர சொந்த இடம் திரு­கோ­ண­மலை மணி­யாவெளி. நான் திரு­மணம் செய்து வந்­த­துதான் முல்­லைத்­தீவு வட்­டு­வாகல். என்ர மூத்த மகன் யாழ்ப்­பாணம் வல்­வெட்­டித்­து­றைக்கு ஒரு கலி­யாண வீட்­டுக்கு போன­போது 1987ஆம் ஆண்டு என்ர அக்கா வீட்ட நிக்­கேக்க ஒப்ப ரேஷன் லிபிரேஷன் பிரச்­சி­னைக்கு ஷெல் விழுந்து செத்­திட்டான்.

இப்ப என்ர மூன்­றா­வது மக­ளுக்கு (22வயது) எனக்கும் கையில்லை. மக­னுக்கும் கால் இல்லை. வச்­சி­ருந்து என்ன செய்­யி­றது பாது­காப்பு கரு­தியே சின்ன வய­சில கூலித்­தொ­ழி­லாளி ஒரு­வ­ருக்கு கட்டிக் கொடித்­திட்டம்.

இவ்­வ­ளவு காயப்­பட்டு கஷ்டப்­பட்ட எங்­க­ளுக்கு இந்­திய வீட்­டுத்­திட்­டமும் கிடைக்­கேல்ல. 6 மாதம் மீள் குடி­யே­றி­யப்பின் நிவா­ரணம் தந்­தார்கள். இப்ப அதுவும் இல்லை.

வீடு­தி­ருத்த கொஞ்ச காசு தந்­தார்கள். அதைப்­பெற்று வீட்­டைத்­தி­ருத்தி மக­ளுக்கு குடுத்­திட்டம். அந்த வீட்­டைத்­த­விர அந்த பிள்­ளையை கட்­டிக்­கொ­டுக்கும் போது அவள்ர காதில தோடு கூட இல்லை.

இப்ப நானும் மனு­சியும் மகனும் நந்­திக்­கடல் பாலத்து ஓடை­யில ஒரு சின்ன தேநீர் கடை போட்டு இருக்­கிறம். கட­லுக்கு வாறவ வந்து டீ குடிச்­சிட்டு போவினம்.

ஆனால், என்ர மனுசி வடை, றோள்ஸ் எல்லாம் நல்லா செய்வா. அதை செய்து எங்­கட கடேல்ல வச்சா நல்ல வியா­பாரம் ஆகும். ஆனால், எனக்கு தேத்­தண்ணி கடை­யில வாற 200 ரூபாவை வச்சு மூன்று பேரும் ஒருநாள் சாப்­பிட போதாது. இதில எனக்கு உழுந்து வாங்­கவோ மரக்­கறி வாங்­கவோ எங்க போறது.

இந்த பெட்­டிக்­க­டையை போடு­ற­திற்கு நான் கால்ல செருப்புக் கூட இல்­லாம வவு­னியா, மன்னார், முல்­லைத்­தீவு என இடம் இட­மாக அலைஞ்சு திரிஞ்சம்.

ஒரு­வரும் ஒரு ரூபா கூட தரேல்ல. ஏன் எத்­தனை அர­சியல் வாதி­க­ளிடம் ஒபிஸ் எல்லாம் ஏறி இறங்­கினன் எல்­லோரும் அன்­பாக கூப்­பி­டு­வார்கள் இருத்தி கதை கேட்­பார்கள்.

ஆஸ்­பத்­திரி   டொக்­கி­யுமன்ஸ் எல்­லாத்­தையும் போட்டோக் கொப்பி எடுத்து தந்­திட்டு போங்கோ நாங்கள் உதவி செய்­யிறம் என்­பார்கள். ஆனால், ஒரு ரூபா கூட ஒரு­வரும் தரேல்ல.

என்ர மகன்ர மெடிக்­க­ல் மட்டும் 150இற்கும் மேற்­பட்ட   அளவில் போட்டோக் கொப்பி மட்டும் எடுத்­துக்­கொ­டுத்­தி­ருப்பன் எந்த பிர­யோ­ச­னமும் இல்லை அவை­ய­லுக்கு குறுந்­தி­ரைப்­படம் பார்த்த மாதிரி இருக்கும்.

எனக்கும் மன­சில இருந்­ததை இறக்கி வைத்­த­மா­திரி இருக்கும். அவ்­வ­ள­வுதான் இன்­றைக்கு கடைக்கு ஆட்கள் வராட்டால் எங்­கட கடை­யில உலையும் வைக்­க­மாட்டம்.

மர­நி­ழல்ல பசியை அடக்க தேத்­தண்ணி குடிப்­பதை அரு­கில ஆமி கேம் இருந்து பார்ப்­பார்கள். எங்­கட நிலையை கருத்தில் கொண்டு சில வேளை­களில் ஒரு சாப்­பாட்டு பார்­சல தரு­வினம் அதை வாங்கி மூன்று பேரும் பிரித்து சாப்­பிட்­டாலும் பசி ஆறாது ஆனால் ஆறி­விட்­ட­தாக ஒரு­வ­ருக்­கொ­ருவர் கூறிக்­கொள்வோம்.

என்ன செய்­வது எனக்கு கை மட்­டும்தான் இல்லை. ஆனால், மனோ­திடம் நிறைய இருக்கு. ஒற்­றைக்­கை­யால தண்ணி அள்­ளுவன் விறகு வெட்­டுவன். இப்­ப­டியே எல்லா வேலை­க­ளையும் செய்ய என்னை நானே பழக்கிக் கொண்­டுள்ளேன்.

இப்ப நான் எல்­லோ­ரி­டமும் மனம் திறந்து கேட்­பது எனக்கு இப்ப 52 வயசு மனை­விக்கும் அதே வய­சுதான். எனக்கு அங்கம் இல்­லையே தவிர நான் அங்கவீனர் அல்ல. நான் 30 வருஷமா கடலை நம்­பியே வாழ்ந்­தவன் போட் ஓடு­வது முதல் சுழி ஓடு­வது வரை எல்­லாமே செய்­யக்­கூ­டிய வல்­லமை இருக்கு.

யாரா­வது எனக்கு உதவி செய்ய விரும்­பினால் 2nd Hand­ ஆக ஒரு போட்டும் வலையும் வாங்க கொஞ்சம் காசும் தாங்கோ. இரால் வீச்சு சூடு­பி­டித்தால் கடைக்கு சாமான் வாங்கிப் போட்டு கொத்து போடு­வ­தற்கும் ஓராளை பிடிச்சா இரவு, பக­லாக கடை நடத்­தினால் போதும் உழைச்­சி­டுவன். இப்­பவே கையில்­லா­தவன் காலில்­ல­த­வ­னுக்கு காசு தர பயப்­ப­டு­ற­வர்கள் நாளைக்கு பாயி­ல­ப­டுத்தால் யார் பார்க்­கப்­போ­கி­றார்கள்.

என்ற காலம் தான் முடிஞ்­சிது என்ர பிள்­ளையும் அவை­யவம் இல்­லாம இருக்­கிறான் இப்ப எங்­கட நிலை­மையை பார்த்து முல்­லைத்­தீவு சிலா­வத்தை Father ஒராள் காசுத்­தந்­துதான் தேத்­தன்னீர் கடை ஆரம்­பிச்­சி­ருக்­கிறேன்.

மகன்ர ஒப்­பி­றேசன் முடிஞ்­சாப்­பி­றகு முல்­லைத்­தீவு கச்­சே­ரி­யால மக­னுக்கு கட்­டிலும் மெத்­தையும் குடுத்தார்கள் வாங்கினோம் வைக்கத்தான் இடமில்லை.

கடைக்கு ஆட்கள் வராட்டாலும் கடை வாசல்ல நிண்டா நந்திக் கடலை பாக்க வாறவை வெளிநாட்டுக்காறர் வருவினம் எங்கள பார்த்திட்டு சிலநேரம் ஐஞ்சப்பத்த தந்திட்டு போவார்கள்.

இப்படியாக எங்கட காலம் மெல்ல மெல்ல நகர்கிறது. நந்திக்கடலில் ஆதங்கத்தால் ஆர்ப்பரிக்கும் அலைகள் ஒருபோதும் ஓய்ததில்லை. அக்கடல் ஓரத்தில் வாழ்வாதரத்தின் ஏங்களின் உச்ச ஆதங்கத்துடன் தொடரும் இவர்களின் காத்திருப்பும் எதிர்ப்பார்ப்பும் இலக்கை அடையும் வரை ஓயாது தொடர்ந்து கொண்டேயிருக்கும்….

குமுறல் தொடரும்…

சிந்துஜா பிரசாத்

Exit mobile version