அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிட்னி மொண்டி கடற்கரையில் நூற்றுக்கணக்கானோர் விநோதமான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டு விநோதமான முறையில் நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேற்குலகை ஆட்டிப்படைக்கும் எபோலா வைரஸ், ஆயுததாரிகளால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய தேசம் குறித்து உச்சிமாநாட்டின்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் ஆராயப்படுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவ்வாறில்லை எனின் மாநாடொன்று அவசியமில்லை என எதிர்ப்புத் தெரிவித்தும் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
மொண்டி கடற்கரையில் கூடிய ஆண்,பெண் இருபாலாரும் பல மணி நேரமாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஜி-20 உச்சிமாநாடானது நாளையும் நாளை மறுதினமும் பிரிஸ்பேர்ன் நகரில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டுக்கு ஜி-20 அமைப்பில் அங்கம் வகிக்கும் உலகத் தலைவர்கள் உட்பட சுமார் 4 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.