ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது? என்ற கேள்வி இப்போது மேலெழுந்திருக்கிறது. ஏனென்றால், இந்த தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
பிரதான வேட்பாளர்களுக்கு இடையே சிங்கள பௌத்த வாக்குகள் கிட்டத்தட்ட சரிசமமாகவே பிரியும் என எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு சூழலில், சிறுபான்மையினரான தமிழர்கள், மற்றும் முஸ்லிம்களின் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாக மாறும் வாய்ப்புக்கள் உள்ளன.
இத்தகைய கட்டத்தில், தமிழர் தரப்பில் மலையகத் தமிழர்களின் வாக்குகளைப் பெருமளவில் கொண்டுள்ள இ.தொ.கா., மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள், அரசதரப்புக்கு ஆதரவளித்துள்ளன.
இந்தநிலையில், வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எடுக்கப் போகும் முடிவு குறித்து அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், விடுதலைப் புலிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எடுத்த புறக்கணிப்பு முடிவு தான், அந்தத் தேர்தலின் தலைவிதியை மட்டுமன்றி, பலருடைய தலைவிதிகளையும் மாற்றியமைத்தது.
அந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் வாக்களிப்பைப் புறக்கணித்திருக்காத நிலை ஒன்று ஏற்பட்டிருந்தால், நிச்சயம் அப்போது ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்திருப்பார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏதோ ஒரு தரப்புக்கு ஆதரவளிக்காமலும், தேர்தல் முடிவைத் தீர்மானிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இது.
அதாவது வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கப் போகிறது என்பது குறித்து ஆராய்வதற்கு முன்பாக, அதன் முன்னுள்ள தெரிவுகள் குறித்து பார்க்க வேண்டும்.
1.முதலாவது, அரசதரப்பு வேட்பாளரான மஹிந்த ராஜபக் ஷவை அல்லது எதிரணி வேட்பாளரை ஆதரிக்கலாம்.
2. இரண்டாவது, தனித்து தேர்தலில் போட்டியிடுவது.
3. மூன்றாவது, தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ்மக்களைக் கோருவது.
4. நான்காவது, எதுவுமே பேசாமல் – மனச்சாட்சிப்படி வாக்களிக்குமாறு கூறிவிட்டு, அமைதியாக இருந்து விடுவது. இந்த நான்கு தெரிவுகளையும் விட வேறு எதுவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. எனவே இந்த நான்கு வட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து கொண்டு அதற்குள் தான் நின்றாக வேண்டும்.
இந்த நான்கு வாய்ப்புக்களில், இரண்டு வாய்ப்புக்கள் மிகவும் அரிதானவை. தனித்து ஒரு வேட்பாளரை நிறுத்தும் திட்டமும், வாக்களிப்பைப் புறக்கணிக்குமாறு கோருவதுமே அவையாகும்.
இந்த இரண்டும் இப்போதைய சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ தமிழ் மக்களுக்கோ பயனளிக்கத் தக்கவையல்ல.
ஏற்கனவே, தனித்து வேட்பாளரை நிறுத்தி, எந்த வேட்பாளருக்கும் 50 சத வீத வாக்குகளைக் கிடைக்காமல் செய்து, இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை இடம்பெற அழுத்தம் கொடுக்கலாம் என்றொரு யோசனை முன்வைக்கப்பட்டது.
ஆனால், அது அவ்வளவாக எடுபடவில்லை. அண்மையில் கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலை இனத்துவேஷ அடிப்படையில் தமிழ்மக்கள் அணுகக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.
அதாவது, சிங்கள வேட்பாளர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று ஒதுங்கி நிற்கக் கூடாது என்பதே அதன் பொருள்.
சிங்கள வேட்பாளரை ஆதரிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் அதன் மூலம் மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார்.
தமது தரப்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் எண்ணங் கொண்டிருந் தால், நிச்சயமாக இரா.சம்பந்தன் அவ்வாறு கூறியிருக்கமாட்டார்.
அதுபோலவே, தேர்தலைப் புறக்கணிக்கும் கோரிக்கையை விடுப்பதும் இப்போதைய நிலையில் பயனற்றது.
2005 ஆம் ஆண்டு தேர்தலைப் புறக்கணிக்க எடுக்கப்பட்ட முடிவு, விடுதலைப் புலிகளைச் சார்ந்து எடுக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் அப்போது, அந்த முடிவின் ஊடாக, இராணுவ ரீதியான மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அது எதிர்மாறான விளைவையே பெற்றுக் கொடுத்ததுடன், புலிகளின் அழிவுக்கும் காரணமாகியது.
இப்போதைய சூழலில், தேர்தல் புறக்கணிப்பு முடிவின் ஊடாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாற்று அனுகூலங்கள் எதையும் அடைவது சாத்தியமற்றது.
எனவே, ஏதாவதொரு வேட்பாளருக்கு ஆதரவை வெளிப்படுத்துவது அல்லது மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள் என்று கூறிவிட்டு, அமைதியாக இருந்து விடுவது இந்த இரண்டு வாய்ப்புக்களில் ஒன்றைத் தான் தெரிவு செய்ய வேண்டிய நிலை கூட்டமைப்புக்கு உள்ளது.
இந்தத் தேர்தலில், தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்கு, பிரதான வேட்பாளர்கள் இருவருமே முயற்சிகளை மேற்கொள்வர் என்பதில் சந்தேகமில்லை.
ஏற்கனவே அரசதரப்பில் இருந்தும், கூட்டமைப்பை நோக்கி கரங்கள் நீட்டப்பட்டுள்ளன. எதிர்த்தரப்பில் இருந்தும் நேசக்கரம் நீட்டப்படுகிறது.
தேர்தல் காலத்தில் இதெல்லாம் சாதாரணமான விடயங்கள் தான்.
இரண்டு முக்கிய தரப்புகளும், தம்மை ஆதரிக்குமாறு கோரியுள்ள போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கும் பிடி கொடுக்காமல் நழுவி வருகிறது.
அதற்குக் காரணம், இந்த தேர்தலின் முக்கியத்துவத்தையும், இதனை வைத்து பேரம் பேசுவதற்கு உள்ள வாய்ப்புகளையும் கூட்டமைப்பு தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பது தான்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலிலும், கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்தரை இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தது.
ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் அந்தளவுக்கு வாக்களிப்பை எதிர்பார்க்க முடியாவிடினும், ஆகக் குறைந்தது 4 இலட்சம் வாக்குகளையாவது, தீர்மானிக்கும் சக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருப்பதை எவ
ரும் மறுக்க முடியாது.
இந்த நான்கு இலட்சம் வாக்குகளை தமது பக்கம் சாய்ப்பதற்கு இருதரப்புகளுமே முயற்சிக்கும்.
அந்தச் சந்தர்ப்பத்தை தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளது கூட்டமைப்பு.
எல்லாச் சந்தர்ப்பங்களிலும், தமிழர்களை காலடிக்குள் கிடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சிங்களத் தலைமைகள், தேர்தல் காலத்தில் மட்டும். அவர்களைத் தோளில் தூக்கி வைக்க முற்படும்.
அத்தகையதொரு சந்தர்ப்பமே அமையவுள்ளதால், பேரம் பேச எத்தனிக்கிறது கூட்டமைப்பு.
இன்றைய சூழலில் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வேறு வலுவான பிடிமானங்கள் ஏதும் இல்லாத நிலையில், கிடைக்கின்ற வாய்ப்பை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாதுரியமானது.
எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில், கூட்டமைப்பு சில நிபந்தனைகளை முன்வைத்து, பேரம் பேசுவதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன.
நாம் இரண்டு தரப்புடனும் பேசுவோம், கடந்த காலங்களில் ஏமாற்றி விட்டார்கள் என்பதற்காக, அரசதரப்பின் வேண்டுகோளை நிராகரிக்கமாட்டோம்.
எதிரணியின் வேட்பாளருடனும் பேசுவோம்.
எமது கோரிக்கைகளை நிறைவேற்ற எவர் தயாராக இருக்கிறார்களோ அவரை ஆதரிப்பது குறித்து கூட்டமைப்பு முடிவு செய்யும் என்று இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிரான நிலைப்பாடு, கடந்த காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மீறியது, பொதுவாகவே, தமிழ்மக்கள் மத்தியில் நிலவும் அரச எதிர்ப்பு அலை என்பன, அரசதரப்பு வேட்பாளரை நோக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வளவாக நகர்வதற்கு வாய்ப்புகள் இல்லை.
ஆனாலும், கூட்டமைப்பு முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு அரசதரப்பு இணங்கும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கு ஆதரவளிப்பது குறித்துப் பரிசீலிக்கத் தயார் என்பதையே இரா.சம்பந்தனின் கருத்து எடுத்துக் காட்டுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசதரப்பு வேட்பாளரை ஆதரிக்கும் ஒரு முடிவை எடுக்கத் துணிந்தால், அது இரண்டு விதங்களில் எதிரணி வேட்பாளருக்கே சாதகமாக அமையும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்த போதிலும், தமிழ்மக்களின் பெருவாரியான வாக்குகளை அவரால் பெறமுடியாது போனது.
அதுபோலவே, கூட்டமைப்புடன் சேர்ந்து நின்றதால், சிங்களத் தேசியவாத வாக்குகளையும் அவரால் பெறமுடியாதிருந்தது.
அதாவது இரண்டு பக்க நட்டம் ஏற்பட்டது.
அதுபோன்ற நிலை, இப்போது கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறும் அரசதரப்பு வேட்பாளருக்கும் ஏற்படலாம்.
அதுவும், சிங்கள மக்களின் ஆதரவை அரசாங்கம் இழந்து வருகின்றதொரு சூழலில், இப்படியான சிக்கலானதொரு நிலைக்குள் செல்வதற்கு அரசதரப்பு தயாராக இருக்காது.
கூட்டமைப்பின் ஆதரவை அரசதரப்பு பெற்றுக் கொள்வதானாலும் கூட அதனை வெளிப்படையாகப் பெறுமா என்பதும் சந்தேகம் தான்.
அதேவேளை, எதிரணியைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதால், இந்தளவுக்குச் சிக்கலான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்காது.
ஏனென்றால், தமிழர் தரப்பிடம் அரசஎதிர்ப்பு அலை ஒன்று உள்ள போது, எதிரணி வேட்பாளரைக் கூட்டமைப்பு ஆதரிக்க முனைந்தால், அதற்குச் சாதகமாகவே தமிழ்மக்களின் வாக்குகள் கிடைக்கும்.
அதேவேளை முன்னைய நிலையைப் போல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான இனவாதப் பிரசாரங்களும் அவ்வளவாக சிங்கள மக்களிடம் எடுபட வாய்ப்பில்லை.
எனவே எதிரணி வேட்பாளரைக் கூட்டமைப்பு ஆதரிப்பது ஒன்றும் சிக்கலான காரியமில்லை.
அது எதிரணி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பையே அதிகரிக்கச் செய்யும்.
அதற்கு, எதிரணியின் வேட்பாளர் கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு,கிழக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கல், சம்பூர், வலி.வடக்கில் மீளக்குடியமர்வு, இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு – இந்த விடயங்களே அதன் பிரதானமான கோரிக்கையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இவற்றை நிறைவேற்றத் தயாராக இருந்தால், எந்த வேட்பாளரையும் ஆதரிப்பது குறித்துப் பேசத் தயார் என்கிறது கூட்டமைப்பு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயங்களில் சற்றுக் கடும் போக்கையே வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், தமக்குக் கிடைத்துள்ள பேரம் பேசும் பலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவே கூட்டமைப்பு மட்டுமன்றி எந்தவொரு அரசியல் கட்சியும் விரும்பும்.
ஆனால், கூட்டமைப்பு முன் வைக்கும் படைவிலக்கம் உள்ளிட்ட சிக்கலான கோரிக்கைகள் குறித்து எந்தவொரு பிரதான வேட்பாளருமே, அவ்வளவு இலகுவாக வாக்குறுதி அளிக்கமாட்டார்கள்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க எடுத்த முடிவு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த்து.
அதற்கு கூட்டமைப்பும் சரியான விளக்கத்தைக் கொடுத்திருக்கவில்லை.
அண்மையில், மட்டக்களப்பில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய, நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், சரத் பொன்சேகா எழுத்து மூலம் அளித்த உடன்பாடு ஒன்றுக்கு அமையவே அவருக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டதாக கூறியிருந்தார்.
ஆனால் சரத் பொன்செகா அதனை மறுக்கிறார். அவ்வாறு ஒரு ஆவணம் இருந்தால் அதனைப் பகிரங்கப்படுத்துமாறும் சவால் விடுத்தார்.
அதற்கு கூட்டமைப்பின் தரப்பில் எவரும் பதில் பேசவில்லை.
சரத் பொன்சேகாவும், கூட்டமைப்பும் ஒரு ஆவணத்தில் ஒப்பமிட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதனை வெளிப்படுத்துவது சரத் போன்சேகாவின் அரசியல் எதிர்காலத்தையே பாதிக்கும்.
இதனால் கூட்டமைப்பு சற்று நாகரீகமாக ஒதுங்கியிருக்கலாம்.
இதுபோலத் தான், இப்போதும், எதிரணி வேட்பாளர் கூட படைவிலக்கம் உள்ளிட்ட கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு இணங்கி வாக்குறுதிகளை எழுத்து மூலம் வழங்க முனையமாட்டார்.
இணங்கினாலும் கூட அதனைப் பகிரங்கமாக அறிவிக்கத் துணியமாட்டார்.
இது ஒரு சிக்கலான நிலையும் கூட.
அதாவது பேரம் பேசும் வாய்ப்பு இருந்தாலும், அது ஏற்படுத்தக் கூடிய எதிர்விளைவுகளையும் கணிக்க வேண்டிய – கருத்தில் கொள்ள வேண்டிய நெருக்கடியும் கூட்டமைப்புக்கு உள்ளது.
இருதரப்புமே கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு இணங்க தயாராக இல்லாது போனால், அடுத்த என்ன முடிவெடுக்கலாம்?
அதற்கும் இருக்கிறது ஒரு வாய்ப்பு.
மனச்சாட்சிப்படி வாக்களிக்கும் ஒரு கோரும் முடிவும் இருப்பதாக ஒரு சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கூறியிருந்தார்.
அத்தகையதொரு நிலையில், தமிழ் மக்கள் அதிகளவில் வாக்களிப்பில் ஈடுபாடு காட்டமாட்டார்கள்.
ஆனால், இந்த முடிவு, தமிழர்களை தேசிய அரசியலில் இருந்து மேலும் அந்நியப்படுத்தவே உதவும்.
இத்தகைய பல தெரவுகள், வாய்ப்புகள் உள்ள ஒரு கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை நாடு ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.