அகமதாபாத்: குஜராத்தில் பாஜக எம்.எல்.ஏ. குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கிய வீடியோ இணையதளத்தில் பிரபலமாக உள்ளது. குஜராத் மாநிலம் மோர்பி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. கான்தி அம்ருதியா.
தொடர்ந்து 5வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜகதீஷ் லோகில் என்ற வாலிபர் மோர்பி மாவட்டத்தில் உள்ள உமா டவுன்ஷிப் பகுதியில் குடிபோதையில் வாளை காட்டி ரகளை செய்துள்ளார். அப்போது அந்த வழியாக எம்.எல்.ஏ. மற்றும் அவரது பாதுகாவலர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் கொடுத்ததோடு நிற்காமல் இரும்புக் கம்பியால் எம்.எல்.ஏ. அந்த வாலிபரை நடுத்தெருவில் அடித்தார். இதை அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அம்ருதியா ஜகதீஷை தாக்கும் வீடியோ தான் தற்போது இணையதளத்தில் பிரபலமாக உள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், அம்ருதியா எங்களுக்கு தகவல் கொடுத்தார். நாங்கள் அங்கு சென்று சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த அந்த வாலிபரை கைது செய்தோம் என்றனர்.