காந்திநகர்: குஜராத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ள பணம் இல்லாமல் வறுமையில் அல்லாடும் பெண் ஒருவர் தனது உடல் விற்பனைக்கு என்று ஃபேஸ்புக்கில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதரா நகரைச் சேர்ந்தவர் முன்னாள் மாடல் அழகியும், சமூக சேவகியுமான சாந்தினி ராஜ்கவுர். அவரது தாய் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
தந்தை அண்மையில் விபத்தில் சிக்கி காயம் அடைந்து படுத்தபடுக்கையாக உள்ளார். வறுமையில் வாடும் சாந்தினியால் பெற்றோரை காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து அவர் தனது உடல் விற்பனைக்கு என்று ஃபேஸ்புக்கில் துணிச்சலாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து சாந்தினி கூறுகையில், என் பெற்றோரை காப்பாற்ற பணம் இல்லை. உதவி கேட்கவும் ஆள் இல்லை. பிறகு நான் என்ன செய்ய முடியும். இந்த அறிவிப்பை பார்த்து பலர் என்னை தொடர்பு கொண்டார்கள்.
என்னை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்களே தவிர உதவ யாரும் முன் வரவில்லை என்றார். சாந்தினி பற்றி குஜராத் மாநில பெண்கள் ஆணைய தலைவர் லீலாபென் அன்கோலியா கூறுகையில்,
குஜராத்தில் உள்ள பொது மருத்துவமனைகளில் அவரது பெற்றோருக்கு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. சாந்தினிக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அவர் எங்களை அணுகலாம் என்றார்.