பிரேமானந்தா, நித்யானந்தாவை மிஞ்சிய ‘ராணுவ’ வல்லமை படைத்தவர் சாமியார். பிரேமானந்தா, நித்யானந்தாவை மிஞ்சிய ‘ராணுவ’ வல்லமை படைத்தவர் சாமியார்.
பாலியல் அட்டகாசங்கள் தொடங்கி பல்வேறு அராஜகங்களை, அக்கிரமங்களை அரங்கேற்றி அதிர வைக்கிற சாமியார்களின் வரிசையில் புதிதாகச் சேர்ந்துள்ளார் சான்ட் ராம்பால்.
கொலை வழக்கில் தன்னைக் கைதுசெய்ய வந்த ஆயிரக்கணக்கான போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையை எதிர்த்து நின்று ‘போர்’ புரியும் அளவுக்கு ‘ராணுவ’ வல்லமை படைத்தவர் இந்தச் சாமியார்.
பிரேமானந்தா, நித்யானந்தா, ஆசாராம் பாபு, பாபா ராம்தேவ் என பலே சாமியார்கள் அனைவரையும் மிஞ்சிவிட்டார், ஹரியானாவைச் சேர்ந்த 63 வயதாகும் இந்தச் சாமியார்.
கோட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ள இவரது ஆசிரமத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு இணையாக ஆடம்பர வசதிகள் அனைத்தும் இருந்துள்ளன. ராம்பால் தினமும் பாலில்தான் குளிப்பாராம். அந்தப் பாலில் ‘கீர்’ தயாரித்து பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுமாம்.
சாமியாராக மாறிய என்ஜினீயர்
ஹரியானாவில் விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்த ராம்பால், ஐ.டி.ஐயில் படித்துவிட்டு, மாநில நீர்ப்பாசனத் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். இளநிலை பொறியாளரான அவர், வேலையில் கவனம் செலுத்தாததால் 2002ல் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
உ.பியில், 15ம் நூற்றாண்டில் பக்தி இயக்கத்தை உருவாக்கிய கபீரின் மறுபிறவி என்று தன்னை அறிவித்துக்கொண்டார். லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் பெருகினர்.
கொலை வழக்கு!
ஆர்ய சமாஜத்தினருக்கும் ராம்பால் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு, ஒருவர் கொல்லப்பட்டார். அந்தக் கொலை வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் 43 தடவை சம்மன் அனுப்பியது.
அதை ராம்பால் மதிக்கவே இல்லை. கடுப்பான நீதிபதிகள், கடந்த 5ம் தேதி ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தனர்.
ஹிசார் மாவட்டம் பார்வாலாவில் 12 ஏக்கர் பரப்பளவில் உள்ள ராம்பாலின் ஆஸ்ரமத்தைச் சுற்றி, ஹரியானா போலீஸின் 30 கம்பெனிகள், துணை ராணுவப் படையினர் மற்றும் 1000 கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டனர்.
சாமியாரின் ஆதரவாளர்கள் செங்கல், தடிகள்கொண்டு போலீசாரைத் தாக்கினர். சாமியாரின் பயிற்சிப் பெற்ற ‘ராணுவ’ கமாண்டோக்கள் பெட்ரோல் வெடிகுண்டுகளையும், ஆசிட் குப்பிகளையும் போலீசார் மீது வீசினர்.
மனிதக் கேடயங்கள்!
ராம்பாலின் அப்பாவி பக்தர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் ஆஸ்ரமத்துக்குள் இருந்தனர். உள்ளே நுழைய முயன்ற போலீஸார் மீது சாமியாரின் கமாண்டோக்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
போலீஸாரும் பதில் தாக்குதல் நடத்தினர். அந்தப் பகுதியே போர்க்களம்போல காட்சியளித்தது. 10 நாள் போராட்டத்துக்குப் பிறகு, கடந்த 19ம் தேதி இரவு ஆசிரமத்துக்குள் போலீஸார் நுழைந்தனர். ராம்பாலை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆசிரமத்தில் பெண்களின் சடலங்கள்!
போலீஸார் மீது தாக்குதல் நடத்த டிரம்களில் ஆசிட் நிரப்பப்பட்டு இருந்தது. ஏராளமான துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸார் கைப்பற்றினர். குண்டுகள் துளைக்க முடியாத டாடா சஃபாரி, ஒரு பஸ், 2 டிராக்டர்கள், 82 மோட்டார் சைக்கிள்கள் இருந்தன.
சாமியாரின் அறையில், கருத்தரிப்பு பரிசோதனைக் கருவிகள் இருந்தன. ஆஸ்ரமத்தில் இருந்து ஒரு கைக்குழந்தை மற்றும் ஐந்து பெண்களின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன.
ஒரு குட்டி ராணுவத்தையே உருவாக்கி, தனியாக ஓர் அரசாங்கம் நடத்தும் அளவுக்கு ஒரு சாமியார் வளர்ந்ததை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துள்ளன.
சாமியார்களின் மோசடிகள் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலமாகி வருகிறபோதிலும், அதுபற்றிய விழிப்பு உணர்வு மக்களுக்கு இல்லை. மதத்தைவைத்து அரசியல் நடத்தும் கட்சிகள், இதுபோன்ற சாமியார்களை தங்கள் அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தும் நிலையில், மக்களை மட்டுமே குறை சொல்ல முடியவில்லை.
Inside the ashram: The main pravachan hall where Rampal would sermonise. Since the godman was arrested all the followers holed up in the sprawling area have been evacuated