ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையும், அதன் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் விரக்தியும் தற்போதைய அரசாங்கத்தின் ஆணிவேரையே ஆட்டம்காண வைத்திருக்கிறது.
மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களின் வெளியேற்றம், அரசாங்கத்துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை விட, மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் தலைமைத்துவத்துக்கும் பெரும் சவாலாக மாறியிருக்கிறது என்பதே உண்மை.
மைத்திரிபால சிறிசேனவும் அவருடன் இணைந்து கொண்டுள்ளவர்களும், ஐ.தே.க.வுடன் இணைந்து கொண்டிருந்தால், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விடயமன்று.
மைத்திரிபால சிறிசேன எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்தப்படும் நிலை உருவாகியுள்ளதும்- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையைக் கைப்பற்றும் அவரது திட்டமும்தான் அரசாங்கத்துக்கு நெருக்கடியை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க என்ற பெரும்பலத்தை நம்பி மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பியிருக்கிறார் மைத்திரிபால சிறிசேன.
பண்டாரநாயக்க குடும்பத்தின் வசமிருந்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் கடந்த 9 ஆண்டுகளாக ராஜபக் ஷ குடும்பத்தின் வசம் சிக்கியுள்ளது.
அதனை மீண்டும் மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை மைத்திரிபால சிறிசேன வின் ஊடாகத் தொடங்கியிருக்கிறார் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.
மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக அறிவித்த கூட்டத்தில், சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் மைத்திரிபால சிறிசேனவை அமர்த்துவேன் என்று உறுதியாகக் கூறியிருந்தார். இதுவே, சந்திரிகாவின் திட்டத்தை வெளிப்படுத்தியது.
இப்போதைக்கு நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிரான போராட்டமாக இது கருதப்பட்டாலும், இன்னொரு வகையில் இது மஹிந்த ராஜபக் ஷ குடும்பத்தின் கையில் இருந்து சுதந்திரக் கட்சியை மீட்கும் போராட்டமாகவும் மாறியிருக்கிறது.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால், தனித்து சுதந்திரக் கட்சியின் தலைமையை மீளக் கைப்பற்ற முடியாத நிலை உருவாகியிருந்தது.
பதவிக்கு வந்த ஆறே மாதங்களில், தனது பிறந்தநாளன்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து தன்னைத் தூக்கியெறிந்தவர் தான் மஹிந்த ராஜபக்ஷ என்று சந்திரிகா குமாரதுங்க பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருந்தார்.
அதற்குப் பின்னர், சுதந்திரக் கட்சிக்குள், பண்டாரநாயக்க குடும்பத்தின் ஆதிக்கத்தை மட்டுமன்றி அடையாளங்களையும் அழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
2005 ஆம் ஆண்டு பதவிக்கு வந்தவுடன், சிறிமாவோ பண்டாரநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க ஆகியோரின் நினைவு நாள்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாதென்று மஹிந்த ராஜபக் ஷ உத்தரவிட்டிருந்தாரென்று மைத்திரிபால சிறிசேன இப்போது கூறுகி றார்.
பண்டாரநாயக்க குடும்பத்தின் வரலாறும், சுதந்திரக் கட்சியின் வரலாறும் பின்னிப் பிணைந்த ஒன்றாக இருந்த நிலையில், அந்த நிலையை மாற்றியமைப்பதற்கு பெருமுயற்சி எடுத்திருந்தனர் ஆட்சியாளர்கள்.
டி. ஆர்.ராஜபக் ஷ, மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக் ஷ, நாமல் ராஜபக்ஷ, சசீந்திர ராஜபக்ஷ என்று ராஜபக் ஷக்களால் சுதந்திரக்கட்சி நிரப்பப்பட்டது.
சுதந்திரக் கட்சியும், அரசாங்கமும் ராஜபக்ஷக்கள் மயப்படுத்தப்பட்டுள்ள சூழலில்தான் அதற்குள்ளிருந்து எதிர்க்குரல் எழுந்திருக்கிறது.
குடும்ப ஆதிக்கத்துக்கு முடிவுகட்டி, கட்சியைக் காப்பாற்ற வேண்டுமென்ற சந்திரிகா குமாரதுங்கவின் துடிப்புக்கு கைகொடுத்திருக்கிறது ஜனாதிபதி தேர்தல் என்று தான் கூறவேண்டும்.
நிறைவேற்று அதிகாரத்தின் மீது கொண்டுள்ள வெறுப்பினால் அதனை எதிர்க்கத் துணிந்த எதிர்க்கட்சிகள், சரியான தலைமையின்றி பொதுவேட்பாளரை நிறுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்த போது தான், சந்திரிகா அதற்குள் நுழைந்திருந்தார்.
மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக கொண்டு வருவதன் மூலம் இவர் இரண்டு காய்களை வீழ்த்த நினைக்கிறார்.
முதலாவது- நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது. அது சந்திரிகாவினது மட்டுமன்றி, எதிரணியினதும் விருப்பம்.
இரண்டாவது- ராஜபக் ஷ குடும்பத்தின் பிடியில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விடுவிப்பது.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவை வீழ்த்தி விட்டால், இலகுவாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டைத் தன்வசம் கொண்டுவந்து விடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறார் சந்திரிகா.
மைத்திரிபால சிறிசேனவை சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்கும் அவரது திட்டத்தின் மூலம், மீண்டும் பண்டாரநாயக்க குடும்பத்துக்கு விசுவாசமான ஒரு தலைமைத்துவத்தை கட்சிக்குள் உருவாக்க நினைக்கிறார்.
இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமானால் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குளிருந்து மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக வெளியே வந்த விவகாரம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவையும் அவரது குடும்பத்தையும் ஆட்டம் காணச் செய்து விட்டது.
ஏனென்றால், கடந்த ஒன்பது ஆண்டுகளாக ராஜபக்ஷ குடும்பத்தின் தலைமைத்துவத்துக்கு எதிராக யாரும் போர்க்கொடி உயர்த்த முடியாத ஒரு நிலைதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து வந்தது.
ஒரு கட்டத்தில், ராஜபக் ஷவின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திக் கொண்டு, வெளியே வந்த மங்கள சமரவீர, விஜேதாச ராஜபக்ஷ போன்றவர்கள் ஐ.தே.க.வுடன் இணைந்து கொண்டனர்.
அவர்களால் அந்தக் கட்சிக்குள் பதவிகளைப் பெற முடிந்ததே தவிர, ராஜபக் ஷ குடும்பத்தின் பிடியில் இருந்து கட்சியை மீட்கவோ, அதன் செல்வாக்கை உடைக்கவோ முடியவில்லை.
ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை.
மஹிந்த ராஜபக் ஷவின் தலைமைத்துவத்துக்கு எதிராக, மைத்திரிபால சிறிசேன போர்க்கொடி உயர்ந்தியுள்ளதுடன், அவரை நேருக்கு நேர் ஜனாதிபதி தேர்தலிலும் சந்திக்கப் போகிறார்.
இன்னொரு பக்கத்தில், எதிரணியுடன் சேர்ந்த பொதுவேட்பாளராக நின்றாலும் தாம் ஐ.தே.க.வில் இணையப் போவதில்லை என்றும், தாமே சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் என்றும் கூறி வருகிறார்.
இது ராஜபக் ஷ குடும்பத்தின் நாடி நரம்புகளுக்கு அச்சத்தைக் கொடுக்கின்ற விடயம்.
அதாவது, மைத்திரிபால சிறிசேனவுடன் எல்லாமே முடிந்து போகப் போவதில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
மைத்திரிபால சிறிசேனவுடன் பெரியளவிலான ஆளும்கட்சியினர் எதிரணிக்குத் தாவப் போவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாகவே அத்தகைய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் முயற்சி வெற்றி பெறவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.
ஆனால், பணபலமே, கட்சித் தாவல்களைத் தடுக்கின்ற மிகப்பெரிய ஆயுதமாக மாறியிருக்கிறது என்பதே உண்மை.
இது நிரந்தரமாக, கட்சியின் உறுப்பினர்களைத் தக்க வைத்துக் கொள்ளப் போதுமானதாக இருக்காது. ஏனென்றால், அரசாங்கத்துக்குள் அதிருப்தி அலை தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
முன்னர், அரசாங்கத்துக்கு வெளியில் இருப்பவர்களே அரச உயர்மட்டத்தினரைப் பார்த்து விமர்சிக்கப் பயப்படும் நிலை ஒன்று இருந்தது.
ஆனால் மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்குப் பின்னர், அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே அதன் குறைகளை எடுத்துக் கூறத் தொடங்கியுள்ளனர் அமைச்சர்கள்.
அமைச்சர் றெஜினோல்ட் குரே போன்றவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள், சுதந்திரக் கட்சியின் தலைமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ராஜபக்ஷ குடும்பத்தினர் வரும் நாட்களில் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதற்கு எடுத்துக் காட்டாக உள்ளன.
வரப்போகும் தேர்தல் நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிரான போராக மட்டும் அமையாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கைப்பற்றும் சந்திரிகாவின் போராகவும் அமைந்துள்ளது.
இதில் சந்திரிகா வெற்றி பெறுவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
– என்.கண்ணன்