ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அழைப்பின் பேரில் கடந்த சனிக்கிழமை மாலை அலரி மாளிகையில் ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும் முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவையே ஆதரிக்கும் எனத் தெரிய வருகிறது.
குறிப்பிட்ட சந்திப்பின் போது கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அவை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாமை என்பன பற்றி ஜனாதிபதியிடம் விளக்கப்பட்டது. பொது பலசேனாவின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவில்லை எனவும் சுட்டிக் காட்டப்பட்டன.
வடக்கு கிழக்கில் முஸ்லிம்களின் காணிகள் அபகரிப்பு உட்பட பிரச்சினைகள் பற்றி விளக்கப்பட்டன. அரசு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமை என்பன தொடர்பில் கவலை வெளியிடப்பட்டது. அரசு வழங்கிய உறுதிமொழிகள் வழங்கப்படாமையினால் சமூகம் அதிருப்தியடைந்துள்ளதாகவும் ஜனாதிபதியிடம் எடுத்து விளக்கப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸின் முறைப்பாடுகளை செவிமடுத்த ஜனாதிபதி இவை தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டினை தெரிவிக்காமையினால் முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியடைந்துள்ளதாக அறியக்கிடைக்கிறது.
முஸ்லிம் காங்கிரஸின் முறைப்பாடுகளை செவிமெடுத்த ஜனாதிபதி முஸ்லிம்களின் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்து பேசி தீர்வுகள் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்புக்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ ஏற்பாடு செய்யவுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்களையடுத்து ஜனாதிபதியின் மீது நம்பிக்கையிழந்துள்ளார்கள்.
கட்சியின் ஒரு அமைச்சரைத் தவிர ஏனையோர் பொது அபேட்சகர் மைத்திரிபால சிறிசேனவையே ஆதரிக்க வேண்டும் என உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அரசியல் உயர்பீடம் கூடி வெளியிடப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலியை கேசரி தொடர்பு கொண்டு கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் வினவியபோது அரசுடனான முஸ்லிம் காங்கிரஸின் உறவு தொடர்ந்து அருகி வருகிறது.
அரசு உறுதி மொழிகள் வழங்கினாலும் அவை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இல்லை. அரசுடன் இணைந்து போகும் சாத்தியக் கூறுகள் குறைவு. இது எனது சொந்தக் கருத்தாகும். கட்சியின் தீர்மானத்தை நாம் நாகரீகமாக வெளியிட வேண்டும் பொறுமை காக்க வேண்டும் என்றார்.
மைத்திரிபாலவை ஆதரிப்பதாக ஜாதிக ஹெல உறுமய அறிவிப்பு
அடுத்தமாதம் 8ம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஜாதிக ஹெல உறுமய ஆதரவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தொடர்ந்து கருத்து வெளியிட்ட சம்பிக்க ரணவக்க,
“மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்ற பின்னர், அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்குமாறு மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
அதிபர் தேர்தலுக்குப் பின்னர், மகிந்த ராஜபக்சவை எந்தவொரு தரப்பினரும், சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நாம் அனுமதிக்கமாட்டோம்.
சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்தவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிக்க ஜாதிக ஹெல உறுமய முடிவு செய்துள்ளது.
மைத்திரிபால சிறிசேனவுடன் தனியானதொரு புரிந்துணர்வு உடன்பாட்டில் ஜாதிக ஹெல உறுமய கையெழுத்திடும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வில் ஜாதிக ஹெல உறுமய பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பணம் செலுத்தியது மைத்திரியின் முன்னணி : அன்னம் சின்னத்தில் போட்டி
02-12-2014
அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ள புதிய ஜனநாயக முன்னணி பொது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபாலவின் சார்பில் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் பெர்மிலா பெரேரா இராஜகிரியவிலுள்ள தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தினார்