உத்தரப் பிரசேதத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தில் ஒரு முத்தத்தால் திருமணமே நின்றுபோன சம்பவம் நடந்துள்ளது.
ஒரு இளைஞனும், இளம் பெண்ணும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். பின்னர், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். இதுதொடர்பாக பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அவர்களும் மறுக்காமல் சம்மதித்துள்ளனர்.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமண சடங்கில் மணமகன், மணமகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மணமகனின் அண்ணி, உற்சாக மிகுதியில் மணமகனுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தியுள்ளார். அத்துடன், அவருடன் சேர்ந்து நடனமும் ஆடியுள்ளார்.
இதைப் பார்த்த பெண் வீட்டார் கொதிப்படைந்து மணமகன் வீட்டாரிடம் தகராறு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் திருமண வீடு சண்டை வீடாக மாறியது. திருமணத்திற்கு வந்த அனைவரும் சமதானம் செய்ய முயன்றனர். ஆனால், பெண் வீட்டார் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் திருமணம் நின்று போனது.
திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வீட்டிற்கு சென்றனர். அத்துடன் விடாத பெண் வீட்டார், மாப்பிள்ளையை ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்தனர். மறுநாள் மாப்பிள்ளை வீட்டார் வந்து அவரை மீட்டுள்ளனர்.