கோவை: கோவையில் கர்ப்பிணி மனைவியை ஓட, ஓட விரட்டி அடித்து கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை ஆவாரம்பாளையம் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்தவர் நவீன்பிரசாத் (30). டிப்ளமோ படித்துள்ள இவர், அதே பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள் (எ) சிந்துபிரியா (24). சிஏ படித்தவர். வெவ்வேறு ஜாதியை சேர்ந்த இருவரும் காதலித்தனர்.
இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த மார்ச்சில் திருமணம் செய்து கொண்டனர். தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். திருமணமான ஒரு சில நாட்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு வீட்டு பெற்றோரும் சமரசம் பேசி பிரச்னையை தீர்த்து வைப்பது வாடிக்கையாக நடந்து வந்தது.
இந்நிலையில், சிந்து பிரியா 5 மாத கர்ப்பமாக இருந்தார். நேற்று இரவு ஒர்க்ஷாப்பில் வேலை முடிந்து நவீன் பிரசாத் வீடு திரும்பினார். அப்போது சிந்துப்பிரியா தூங்கிக் கொண்டிருந்தார். மனைவியை எழுப்பி 9 மணிக்கே என்ன தூக்கம் என கேட்டுள்ளார்.
கர்ப்பமாக இருப்பதால் சோர்வாக உள்ளது என்று கூறி விட்டு மீண்டும் தூங்க சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நவீன் பிரசாத் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி அறிந்து இரு வீட்டு பெற்றோரும் வந்தனர். வழக்கம் போல் சமரசம் பேசி விட்டு சென்றுள்ளனர்.
ஆனாலும் சிறிது நேரத்தில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நவீன் பிரசாத் இரும்புக் கம்பியை எடுத்து சிந்து பிரியாவை தாக்கினார்.
பயந்து போன சிந்து பிரியா வீட்டை விட்டு வெளியே ஓடினார். ஆனாலும் துரத்திச் சென்று பிடித்த நவீன், இரும்புக் கம்பியால் தலையில் ஓங்கி அடித்தார். சம்பவ இடத்திலேயே சிந்து பிரியா துடிதுடித்து இறந்தார். இதையடுத்து நவீன் பிரசாத் அங்கிருந்து ஓடி விட்டார்.
இந்நிலையில், அதிகாலை 3 மணிக்கு அவ்வழியாக வந்த பால்காரர் ரத்த வெள்ளத்தில் சிந்து பிரியா இறந்து கிடப்பதை பார்த்து பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து விசாரணை நடத்தினர். தலைமறைவான நவீன் பிரசாத்தை தேடி வருகின்றனர்.