தலைநகர் கொழும்பிலுள்ள இரண்டு பிரதான வங்கிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரின் பெயரிலுள்ள வங்கிக் கணக்குகளில் ரூபா ஒன்பது கோடி பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையில் ரூபா ஐந்து கோடியே ஐம்பது இலட்சம் கொழும்பிலுள்ள பிரசித்திபெற்ற வெளிநாட்டு வங்கியொன்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் ரூபா மூன்று கோடியே ஐம்பது இலட்சம் இலங்கையின் பிரதான தேசிய வங்கியொன்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் மேற்படி தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் இவ்வாறு மேற்படி முக்கிய வெளிநாட்டு வங்கியிலும் தேசிய வங்கியிலுமுள்ள இரண்டு கணக்குகளும் பாதுகாப்புத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த இரண்டு வங்கிக் கணக்குகளும் அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த இரண்டு கணக்குகளிலுமுள்ள மொத்தம் ரூபா ஒன்பது கோடியும் அரசாங்க திறைசேரிக்கு அனுப்பப்படுவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த பிரசித்திபெற்ற வெளிநாட்டு வங்கியிலும் பிரதான தேசிய வங்கியிலுமுள்ள வங்கிக் கணக்குகளில் இடப்பட்டுள்ள பணம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் பெயரில் இடப்பட்டுள்ளதா அல்லது அவருடைய உறவினர்கள் அல்லது சகாக்களின் பெயர்களில் இடப்பட்டுள்ளதா என்ற விபரமான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
இச்செய்தியின் பின்னணி.. தேர்தல் பிரச்சாரத்துக்காக இப்படிபட்ட செய்தியை மகிந்த அரசு வெளியிடுவதாகவே இதை பார்க்கவேண்டும்.