தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் எதனையும் செய்யவில்லை. அவ்வாறு ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். அரசாங்கமானது கூட்டமைப்புடன் நாம் ஒப்பந்தம் செய்துள்ளதாக பொய் பிரசாரம் செய்கின்றது என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் நாம் எப்படியும் வெல்வோம்; என்ன செய்தாவது வெல் வோம் என்று அரசாங்க தரப்பினர் கூறிவருகின்றனர். இத்தகைய கருத்துக்கள் அவர்கள் தமது தோல்வியை ஏற்றுக்கொண்டதையே எடுத்துக்காட்டுகின்றது.
நாட்டில் இராணுவச் சதி என்பது நடக்கப்போவதில்லை. முப்படைத் தளபதிகள் மீது எனக்கு நல்ல நம்பிக்கை உள்ளது. மக்கள் தீர்ப்பின் பக்கமே இராணுவத்தினர் நிற்பார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.
தேசிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கோட்டே ஹொலிஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது;
கேள்வி:– ஐக்கிய தேசியக்கட்சியுடன் தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தம் குறித்து தனக்குத் தெரியாது என ஐ.தே.க.வின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார். இதில் உண்மை உள்ளதா?
பதில்:- அரசாங்கத்திலிருந்து நான் வெ ளியேறி இரண்டு நாட்களில் அவர் பெரிய குண்டினை போட்டிருந்தார். நான் ஜனாதிபதியானதும், 24 மணிநேரத்திற்குள் ரணில் விக்கிரமசிங்கவை நிறைவேற்று அதிகாரமுடைய பிரதமராக நியமிப்பேன் என நான் உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
உலகிலேயே எந்த நாட்டிலும், நிறைவேற்று அதிகாரமுடைய பிரதமர் முறை இல்லை. எமது அரசியல் அமைப்பிலும் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவருக்கு சுகவீனம் மற்றும் மனநிலையில் தாக்கம் ஏற்பட்டால் மட்டுமே பிரதமருக்கு அதிகாரங்களைக் கொடுப்பதற்கான சரத்து அரசியல் அமைப்பில் உள்ளது. திஸ்ஸ அத்தநாயக்கவின் கருத்து இவ்வாறு முரண்பாடானதாகவே காணப்படுகின்றது.
கேள்வி:- தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் நீங்கள் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக அரசாங்கத் தரப்பில் குற்றம்சாட்டப்படுகின்றது. இதில் உண்மை உள்ளதா?
பதில்:- இது முற்றுமுழுதாக பொய்யான விடயமாகும். அரச பக்கத்திலிருந்துதான் இத்தகைய குற்றச்சாட்டு எழுப்பப்படுகின்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்யவும் இல்லை. அவ்வாறு ஒப்பந்தம் செய்யவேண்டிய அவசியமும் இல்லை. தமிழ் தேசியக்கூட்டமைப்பினருடன் பேச்சுக்களை நடத்தியுள்ளோம்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை ஒழிப்பது மற்றும் பொருளாதார விடயங்கள் போன்ற பொதுவான விடயங்கள் குறித்து இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இதனைவிடுத்து ஒப்பந்தம் எதுவும் கூட்டமைப்புடன் மேற்கொள்ளப்படவில்லை. அரசாங்கம் பொய்ப்பிரசாரத்தில் இவ்வாறு ஈடுபட்டு வருகின்றது.
கேள்வி:– ஜாதிக ஹெலஉறுமயவுடன் நீங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை ஒழிக்காது மாற்றியமைப்பது தொடர்பில் ஏதேனும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளனவா?
பதில்:- இல்லை. நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறையினை ஒழிக்கும் விடயமே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவியினை ஒழிப்பதாக நாம் கூறவில்லை. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை ஒழிப்பதே எமது குறிக்கோளாகும். முப்படைகளின் தளபதியாக ஜனாதிபதியே இருக்கின்றார். அரசியல் அமைப்பின் மாற்றங்களை ஏற்படுத்திய பின்னரும் முப்படைகளின் தளபதியாக ஜனாதிபதி செயற்படும் வகையிலேயே மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.
கேள்வி:- இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் நீங்கள் எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பீர்கள்?
பதில்:– இவ்விடயம் குறித்து இன்னமும் நாம் ஆராயவில்லை. எமது நூறுநாள் வேளைத்திட்டத்தின் பின்னர் புதிய அரசியல் அமைப்பின் கீழ் பாராளுமன்ற தேர்தலை நடத்துவோம். அதன் பின்னர் ஏற்படும் புதிய அரசாங்கத்தில் தீர்வு குறித்து பேசப்படும். நூறு நாள் திட்டத்திற்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு அடங்கவில்லை. புதிய அரசாங்கத்தினை உருவாக்கிய பின்னரே அது குறித்து பேசப்படும்.
கேள்வி: – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களையும் நம்ப முடியாது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். இது குறித்து உங்களின் பதில் என்ன?
பதில்:- ஒவ்வொரு கட்சியிலும் வெவ்வேறு கருத்துள்ளவர்கள் இருப்பார்கள். இரண்டு மூன்று நாட்களுக்குள் எமது கொள்கைப் பிரகடனத்தை நாம் வெ ளியிடும் போது இதற்கான பதில்கள் கிடைக்கும்.
கேள்வி:- ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது வடபகுதிக்கும் செல்வீர்களா?
பதில்:- நிச்சயமாக வடக்கிற்கும் செல்வேன். அங்கு மூன்று கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் 140 கூட்டங்களில் பங்குபற்றவுள்ளேன்.
கேள்வி:- நீங்கள் அரசாங்கத்திலிருந்து வெ ளியே வரும் போது உங்களுடன் 20 பேர் வருவார்கள் என்று தெரிவித்திருந்தீர்கள். ஆனால் அவ்வாறு அரசாங்கத்திலிருந்து உறுப்பினர்கள் வரவில்லையே
பதில்:– இப்போது 12 பேர் வந்துள்ளனர். இன்னமும் 8 பேர் தான்வரவேண்டியுள்ளது. தேர்தலுக்கு இன்னமும் ஒரு மாதகாலம் உள்ளது. எனவே அதற்குள் 20க்கும் மேற்பட்டவர்கள் எமது பக்கம் வருவார்கள்.
கேள்வி:- ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தனக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்குமிடைலேயே போட்டி நிலவுவதாக தெரிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொள்கிறீர்களா?
பதில்:- அவரது சிந்தனையில் குறைபாடு இருப்பதாகவே நான் பார்க்கிறேன். அவருக்கு எதிரான வேட்பாளராக நானே போட்டியிடுகின்றேன். என்னை யாரும் தனிப்பட்ட முறையில் ஏமாற்றிவிட முடியாது. 47 வருடம் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து நான் சேவையாற்றியுள்ளேன்.
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ 1969 ஆம் ஆண்டு சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்டார். நான் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டே 1967 ஆம் ஆண்டு சுதந்திரக்கட்சியில் இணைந்துகொண்டவன். 22 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். 13 வருடங்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியன் செயலாளராக கடமையாற்றியிருக்கின்றேன். தற்போதும் சட்டபூர்வமான செயலாளராக நானே கடமையாற்றுகின்றேன்.
கேள்வி:– ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் வெற்றிபெற்றால் அந்த வெற்றியை தடுப்பதற்கும் இராணுவ சதியினை மேற்கொள்வதற்கும் திட்டமுள்ளதாக பேசப்படுகின்றதே? இது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- இரண்டு மூன்று தினங்களாகவே ஜனாதிபதி தேர்தலில் நான் எப்படியும் வெல்வோம் நாம் என்ன செய்தாவது வெல்வோம் என்று ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் இந்தளவிற்கு நாடு மாறியுள்ளது. மஹிந்தவின் ஆட்சியை மாற்றுவோம் மூன்றாவது முறை அவரை வெல்ல வைப்பதற்கு தயாரில்லை என்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ளனர். அரச தரப்பினரின் இவ்வாறான கருத்துக்கள் தோல்வியை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதையே பறைசாற்றுகின்றது.
மக்கள் தீர்ப்பின் மூலம் வெற்றிபெற்ற தரப்பிடம் ஜனாதிபதி பதவி வழங்கப்படவேண்டும். எமது நாட்டில் இராணுவச்சதி என்பது நடக்கப்போவதில்லை. முப்படைத்தளபதிகள் மீதும் எனக்கு நல்ல நம்பிக்கை உள்ளது. அரசாங்கத்தைப் பிடிக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. மக்களின் தீர்ப்பு எந்தப்பக்கமோ, அந்தப் பக்கமே முப்படையினர் நிற்பார்கள். மக்களை ஏமாற்றுவதற்காகவே அரசாங்கத் தரப்பினர் இத்தகைய பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர். எமது வெற்றியினை யாராலும் தடுக்க முடியாது. மக்கள் தீர்ப்பின் பக்கம் தான் இராணுவத்தினர் நிற்பார்கள்.
கேள்வி:- ஜாதிக ஹெலஉறுமய பொதுவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாது உங்களுடன் தனியான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது ஏன்?
பதில்:- நாம் பொதுவான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட போது அவர்கள் அதற்கான ஆயதத்தில் இருக்கவில்லை. இதனால் தான் தனியான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 2010 ஆம் ஆண்டிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் பொதுவான புரிந்துணர்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டபோதிலும், ஜாதிக ஹெலஉறுமய, கம்யூனிஸ்ட் கட்சி என்பன பின்னர் தனியாகவே ஒப்பந்தங்களை செய்திருந்தன.
கேள்வி:- உங்களது பொது எதிரணியில் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்குமா?
பதில்:- நாம் கூட்டணியாகவே செயற்படுகின்றோம். ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்க, சுதந்திரக்கட்சியின் சார்பில் நான், ஜனநாயகக் கட்சியின் சார்பில் பொன்சேகா என பல கட்சிகளும் 40க்கு மேற்பட்ட பொது அமைப்புக்களும் இணைந்தே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளோம். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் அரசாங்கத்திலேயே உள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் நாம் சில சுற்றுப்பேச்சுக்களை நடத்தியிருக்கின்றோம். ஆனாலும் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்யமாட்டோம்.
கேள்வி:– ஜே.வி.பி.யின் நிலைப்பாடு குறித்தும் தேர்தல் பிரசாரத்திற்கான நிதி உங்களுக்கு எவ்வாறு கிடைக்கின்றது என்பது தொடர்பிலும் கூற முடியுமா?
பதில்:- ஜே.வி.பி. நாடுபூராவும் மஹிந்தவிற்கு மூன்றாவது தடவை சந்தர்ப்பம் வழங்க முடியாது என்று பிரசாரம் செய்து வருகின்றது. ஊழல் நலிந்து போயுள்ள அரசாங்கத்தை மீளவும் ஆட்சிக்கு கொண்டுவரக்கூடாது என்பதாகவே அக்கட்சியின் பிரசாரம் அமைந்துள்ளது. எமக்கும் அவர்களுக்குமிடையில் எந்தவித முரண்பாடுகளும் இல்லை. இதனால் மக்கள் தமது தீர்மானத்தை மேற்கொள்வார்கள். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
நிதியைப் பொறுத்தவரையில் எமது ஆதரவாளர்கள், மற்றும் நலன்விரும்பிகளே எமக்கு உதவிகளை செய்து வருகின்றனர். நாம் கட்ட அவுட்டுக்களை போடவில்லை. ஐக்கிய தேசியக்கட்சியின் நிதியத்தின் சார்பிலும் செலவீடுகள் இடம் பெறுகின்றன. எம்மைப் பொறுத்தவரையில் கஷ்டமான நிலையிலேயே தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
.கேள்வி:- ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்.?
பதில்:- வெற்றிபெற்ற பின்னர் நூறுநாட்கள் வேளைத்திட்டம் அமுல்படுத்தப்படும். அதன் பின்னர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியை நான் பிரதிநிதித்துவப்படுத்துவேன். அதன் பின் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு என்ன நடக்கும் என்று பார்க்கமுடியும். பண்டாரநாயக்கவும், சுதந்திரக்கட்சியும் எம்மிடம் உள்ளது.
கேள்வி:- அவ்வாறாயின் சந்திரிக்காவின் நிலை என்னவாக இருக்கும்?
பதில்:- அவரது தந்தையின் கட்சியே இதுவாகும்.
கேள்வி:– சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐ.தே.க. இணைந்த தேசிய அரசாங்கம் எவ்வாறு இருக்கும். ?
பதில்:- ஜனவரி 8 ஆம்திகதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அரசியல் அமைப்பை மாற்றி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவோம். புதிய அரசாங்கத்தில் சகல கட்சிகளும் சுயாதீனமாக செயற்படும் நிலை ஏற்படும். தற்போதைய அரசாங்கத்தில் மஹிந்த சிந்தனையே இருக்கின்றது. பண்டாரநாயக்க சிந்தனை இல்லை. 2007 ஆம் ஆண்டு ஜே.வி.பி. யுடன் ஐ.ம. சு. மு. ஒப்பந்தம் செயத்திருந்தது. இதன் பின்னர் ஒவ்வொரு கட்சியும் தமது கொள்கையின் படி செயற்பட்டன. இதில் இரகசியம் இல்லை.
கேள்வி:- பொது எதிரணியின் சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டிணைவு தொடரும் என நம்ப முடியுமா?
பதில்:- நாம் பொதுவாக இலங்கை மக்கள் என்ற வகையில் பொது தீர்மானங்களுக்கே இணங்கியுள்ளோம். 1956 ஆம் ஆண்டிலிருந்த கூட்டணி அரசாங்கமே கூடுதலாக பதவி வகித்து வந்துள்ளது. எனவே இதில் ஒரு பிரச்சினை ஏற்படப்போவதில்லை.
கேள்வி:- கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது கம்பியூட்டர் ஜில்மால் மூலம் முடிவுகள் மாற்றி அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. அது குறித்து உங்களின் பதில் என்ன?
பதில்:- இவ்வாறு ஜில்மால் விளையாட்டுக்கள் எல்லாம் ஒருபோதும் நடைபெற முடியாது. 2010 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பெரும் செல்வாக்கை ஜனாதிபதி பெற்றிருந்தார். நாட்டில் பச்சை, நீலம், சிவப்பு என்ற கொடிகளை எல்லாம் மக்கள் உள்ளே வைத்து விட்டு முழுநாடும் ஒன்றிணைந்திருந்தது. அந்த வேளையில் சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு எதிராக முன்வந்ததே பாராட்டத்தக்க நடவடிக்கையாகும். அந்தத் தேர்தலில் அவர் அந்தளவு தொகை வாக்குக்களைப் பெற்றமையே பெரும் விடயமாகும். ஆனால் அந்த நிலை இன்று இல்லை.
கேள்வி:- 2005 ஆம் ஆண்டு புலிகளுக்கு பணம் கொடுத்தே தமிழ் மக்கள் வாக்களிப்பது தடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இது குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?
பதில்:- அவ்வாறான குற்றச்சாட்டு பலமாக எழுப்பப்பட்டிருந்தது. உண்மைதான்.